Wednesday, January 23, 2013

இன்று நேதாஜியின் பிறந்த தினம்!


ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன நிகழ்வு தரும் ஏமாற்றத்தைக்கூட தாங்கமுடியாமல் இன்றைய இளைஞர்கள் நத்தையாய் சுருண்டு போகின்றனர், எதிர்காலமே இருண்டு போனதைப் போல மருண்டு விடுகின்றனர், இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று தங்கள் நிகழ்காலத்தையும் சூன்யமாக்கிக் கொள்கின்றனர்.
இத்தனைக்கும் இது இவர்களது சொந்த வாழ்க்கை, தாங்கிக் கொள்ளவும், பிரச்னைகளை வாங்கிக் கொள்ளவும் உறவுகளும், நட்புகளும் உண்டு.
ஆனால் தனக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்ந்த தீரர் நேதாஜி, எத்தனை எதிர்ப்புகளை சந்தித்தார் என்பதை தெரிந்துகொண்டால், நாமெல்லாம் சந்திப்பதும், சிந்திப்பதும் பிரச்னையே இல்லை என்பதை உணரலாம்.
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் போது பாடம் நடத்திய பேராசிரியர் ஓட்டன் , இனவெறியுடன் இந்தியர்களை அவமதிக்கும் விதமாக பேச, அனைவரும் வாய்மூடி அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தனர், சுபாஷ் மட்டுமே எழுந்து கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்.
இதன் காரணமாக கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டதுடன் வேறு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டார்.
கொஞ்சமும் கவலைப்படவில்லை, தேசாபிமானி சித்தரஞ்சன்தாஸ் உடன் சேர்ந்து, நாட்டு நலனிற்காக உரக்க குரல் கொடுத்தார். அதன் பிறகு உறங்கும் நேரம் போக மீதமுள்ள எல்லா நேரங்களிலும் நம்மை அடிமைப்படுத்தியிருக்கும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அடியோடு வேரறுக்கவேண்டும் என்பதை அனைவரிடமும் சூடாக பதிவு செய்வார்.
இவரது வேகத்தை கட்டுப்படுத்த நினைத்த இவரது தந்தை, நேதாஜியை லண்டனுக்கு அனுப்பி ஐசிஎஸ் (இந்திய குடிமைப்பணி)படிப்பை படிக்கவைத்தார், தன்னுடன் படித்த ஆங்கிலேயே மாணவர்களை எல்லாம் பின்தள்ளிவிட்டு சிறந்த மாணவராக தேறினார். உடனடியாக இந்தியாவில் பெரிய பதவி கொடுக்க பிரிட்டிஷ் அரசு அழைத்தது. இந்த பதவியின் மூலம் ராஜபோக வாழ்க்கை வாழலாம், ஆனால் ஒரு போதும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியாது, பிரிட்டிஷாரின் அடிமையாகத்தான் இருக்கவேண்டும் என்பதை அறிந்ததும் ,உடனடியாக லண்டனிலேயே தனது படிப்பை துறந்துவிட்டு நாடு திரும்பினார்.
நாடு திரும்பியதும் மீண்டும் சித்தரஞ்சன்தாசின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார், வேல்ஸ் இளவரசரை வரவேற்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு சொன்ன போது, " நாங்கள் ஏன் வரவேற்க வேண்டும் அவரை நாட்டிற்குள் நுழையவிடமாட்டோம்' என முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் நேதாஜி, உடனே அவரை தூக்கி ஆறுமாதம் ஜெயிலில் போட்டது அன்றைய பிரிட்டிஷ் அரசு.
கடுமையான போராட்டம் வேண்டாம் கொஞ்சம் சாத்வீகமாக போவோம் என்று சொன்ன காந்தியோடு எதிர்த்து நின்றார், ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு பணிய வேண்டும், பயப்படவேண்டும் என்று முழங்கினார், தனது முழக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவே சுயராஜ்யா பத்திரிகையின் ஆசிரியரானார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக ஜெனரல் டயரை சுட்டுக்கொன்றார் உத்தம்சிங். இந்த செயலை காந்தி கண்டித்தார், ஆனால் நேதாஜியோ பாராட்டி கட்டுரை எழுதினார். 1928 ல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் நமக்கு சுயாட்சி முக்கியமில்லை என்றார் காந்தி, மொத்த இந்தியத் தலைவர்களும் மவுனம் காத்தனர், எழுந்தவர் நேதாஜி மட்டுமே, சுயாட்சிதான் நமக்கு தேவை என்று ஆவேசத்துடன் பேசினார்.
பிரிட்டிஷாரைப் பொறுத்தவரை நேதாஜிதான் சிம்ம சொப்பனமாக விளங்கினார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை கைது செய்து சிறையில் அடைத்துப் பார்த்தது, போராட்ட உணர்வுகளை அவரிடமிருந்து அடக்கப்பார்த்தது. இவரை கைது செய்வதற்காகவே பல அவசர சட்டங்களை கொண்டுவந்தது.
எவ்வித சிறைக்கும் அஞ்சாத அந்த சிங்கம் போன்றவர், பின்னாளில் இந்திய தேசிய ராணுவம் அமைத்து எதிர்த்து நின்றவர், இதன் மூலம் பிரிட்டிஷ் படையினரை நிலைகுலையச் செய்தவர், ஜான்சி ராணி என்ற மகளிர் படைபிரிவை அமைத்து உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக திகழ்ந்தவர், சர்வதேச தலைவர்களையும் தனது வார்த்தைகளால் ஈர்த்த இணையற்ற பேச்சாளர், கொஞ்சம் ரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு விடுதலை தருகிறேன் என்று விடுதலை எண்ணத்தை விதைத்த உரை வீச்சாளர், எதிர்ப்பு எனும் நெருப்பை தனது வாழ்க்கை முழுவதும் சந்தித்த வீரர், யாரும் நினைக்கமுடியாத விஷயங்களை சாதித்த சூரர், இன்றைக்கும் இந்தியர்கள் மத்தியில் வீரத்திற்கும், தீரத்திற்கும் அடையாளமாக விண்ணுயர்ந்து நிற்பவர். அவரே நம் நேதாஜி .
தேசத்தை தனது உயிராய் நேசித்த நேதாஜியின் பிறந்த நாள்  இன்று. அவரது வாழ்க்கை வரலாறை முழுமையாக படியுங்கள், உங்கள் உயிருக்குள் ஒரு புது ரத்தம் பாயும், உணர்வுகளுக்குள் உற்சாகம் பொங்கும், சோர்வு நீங்கும், கவலை பறக்கும்.
வாழ்க நேதாஜி, வளர்க அவர்தம் புகழ்!
ஜெய்ஹிந்த்!                                                 நன்றி : தினமலர்                                               தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்க்ப்படுத்துங்கள்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...