எழுத்துக்களாய் வாழும் எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சி

மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சியின் நினைவேந்தல் கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.

எல்லோரையும் எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான கிருஷ்ணாவை அனைவருக்குமே பிடிக்கும். பத்திரிக்கை உலகில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதையும் தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் என்பதையும் தாண்டி, அந்த சிரித்த முகம் நையாண்டித்தனமான பேச்சு என அனைவரையும் வசீகரிக்கும்.

அனைவரையும் அன்பால் வசியப்படுத்திய கிருஷ்ணா டாவின்சி திடீரென கடந்த 4 ம் தேதி மாலையில் மரணமடைந்து விட்டார். யாராலும் ஜீரணிக்க முடியாத இந்த மரணச் செய்தி. பத்திரிக்கை, எழுத்து திரைப்படத்துறை என அனைத்து துறைகளிலும் நற்பெயர் பெற்ற கிருஷ்ணாவிற்கு ஞாயிறுக்கிழமை மாலை லயோலா கல்லூரியில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

பிரபலங்கள் புகழஞ்சலி

நினைவேந்தல் கூட்டத்தில் வரவேற்புரை, நன்றியுரை என்ற சம்பிரதாயங்களையும் தாண்டி கிருஷ்ணாவின் நினைவுகளை கூறும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

எழுத்தாளர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கிருஷ்ணா மிகச்சிறந்த பாடகராக அனைவராலும் அறியப்பட்டதும் அந்த விழாவில்தான். கிருஷ்ணா டாவின்சி கிடார் வாசித்துக்கொண்டே பாடிய பாடல்களைக் கேட்டு அனைவரின் கண்களின் ஓரங்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

மறைந்த எழுத்தாளருக்கு பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் புகழஞ்சலி செலுத்தினார். அவர் பேசும் போது கிருஷ்ணாவின் மனிதபிபமான செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார்.

ஈழத்து கவிஞரும், எழுத்தாளருமான வா.ஐ.ச ஜெயபாலன் கவிதையால் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பாலை இயக்குநர் செந்தமிழன், நக்கீரன் உதவி ஆசிரியர் காமராஜ், உள்ளிட்ட பிரபலங்கள் கிருஷ்ணா டாவின்சியுடனான நெருக்கத்தை, மனித நேய செயலை பகிர்ந்து கொண்டனர்.

புத்தகம் வெளியீடு

உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் இருந்த நிலையிலும் கிருஷ்ணா இறுதியாக எழுதிய இசையானது என்னும் நூல் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட அதை கிருஷ்ணா டாவின்சியின் 6 வயது மகள் நேயா டாவின்சி பெற்றுக்கொண்டார்.

கிருஷ்ணாவைப் போலவே அவரது எழுத்துக்களும் வசீகரமானவைதான். முதன்முதலில் மாலைமதியில் எழுதத்தொடங்கியது முதல் அவரது கடைசி புத்தகமாக ‘இசையானது’ வரை ஒவ்வொரு எழுத்துக்களும் ஆழமான கருத்துச் செறிவுகளை கொண்டவை.

அவர் மறைந்து விட்டார் என்பதை அனைவராலும் ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆம் அவர் மறையவில்லை எழுத்துக்களாய் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையே அரங்கு நிரம்பி வழிந்த அந்த நினைவேந்தல் கூட்டம் நினைவூட்டியது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

  1. ஆழ்ந்த வருத்தங்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2