மதுரை ஆதீனத்தின் அதிரடி முடிவு... இந்து அமைப்புகள் அவசரமாக கூடுகின்றன!

மதுரை: நித்தியானந்தாவை, 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியாவின் மூத்த ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது குரு மகா சன்னிதானமாக தற்போதைய ஆதீனம் நியமித்துள்ளது குறித்து பல்வேறு இந்துக் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பேச அவசரக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் மதுரை ஆதீனத்தின் இந்த திடீர் முடிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆதீனத்தை மக்கள் தற்போது கேலிப் பொருளாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், இன்னும் ஓரிரு நாளில் அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவுள்ளோம். தற்போது நடந்து வருவது மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருப்பதையே உணர்த்துகிறது. மதுரை ஆதீனம் மிகவும் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். இந்துக்கள் அனைவரையும் அவர் அவமானப்படுத்தியுள்ளார், களங்கப்படுத்தியுள்ளார்.

மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டவருக்கு பெங்களூரில் வைத்து முடி சூட்டியுள்ளார். அங்கு போய் மதுரை ஆதீனத்தின் அடுத்த வாரிசு யார் என்பதை அவர் கூறியுள்ளார். இது தவறான செயல் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், மதுரை ஆதீனத்தின் அடுத்த தலைவர் யார் என்பதை அவசரப்பட்டு முடிவு செய்ய முடியாது. திருப்பனந்தாள், தருமபுரம் ஆதீனங்களை கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

நித்தியானந்தா போன்றவர்களுக்கான பதவி அல்ல இது. அவர் இந்தப் பதவிக்கு வர அருகதை இல்லை. தனது பெயரை முதலில் சரி செய்து விட்டுத்தான் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் தற்போது பெங்களூரில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். தனது பாதுகாவலர்களைக் கூட அவர் பெங்களூருக்குக் கூட்டிச் செல்லவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

எந்தவிதமான முறையான அம்சங்களும் இந்த விவகாரத்தில் கையாளப்படவில்லை. இது பெரும் நகைச்சுவையான ஒரு சம்பவமாக மாறியுள்ளது. அதேசமயம், இந்து மக்கள் மனதளவில் புண்பட்டுப் போயுள்ளனர் என்றார் சம்பத்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் கூறுகையில் தனது வாரிசாக மதுரை ஆதீனம் தேர்ந்தெடுக்கும் நபரை ஏற்கவே முடியாது. இதுகுறித்து நாங்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதேபோல விஸ்வ இந்து பரிஷத்தும் மதுரை ஆதீனத்தின் முடிவை விமர்சித்துள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?