பசுமை நிறைந்த நினைவுகள்! 7

 பசுமை நிறைந்த நினைவுகள் என்ற தலைப்பில் எனது குழந்தைப்பருவ நினைவுகளை கடந்த டிசம்பரில் ஆறு பதிவுகளில் எழுதி இருந்தேன். இடையில் விடுபட்டு விட்டது இப்போது தொடர்கிறேன் இதன் முந்தைய பதிவுகளை காண கீழுள்ள லிங்குக்கு செல்லவும்
பசுமை நிறைந்த நினைவுகள்! 7தாய் பூனை இறந்து விட்டது பாலூட்டும் குட்டிகள் பாலில்லாமல் தவித்த வேளை அது! கிண்ணத்தில் வைத்தாலோ இங்க் பில்லர் போன்றவற்றால் கொடுத்தாலோ குடிக்க தெரியவில்லை குட்டிகளுக்கு! என்ன செய்வது இந்த குட்டிகளும் அவ்வளவு தானோ என்று நினைத்தபோது ஒரு யோசனை உதித்தது.

   எங்கள் வீட்டில் இன்னொரு பெண் பூனை இருந்தது! கறுப்பும் வெள்ளையுமாய் இருந்த அதற்கு பாண்டு என்று பெயரிட்டிருந்தோம்! அந்த பூனையும் குட்டி போட்டிருந்தது. அதன் குட்டிகளோடு இறந்த ஜூலியின் குட்டிகளை சேர்த்து விட்டோம். சாதாரணமாக தாய் பூனை தன் குட்டிகளை தவிர வேறு குட்டிகளை சேர்த்துக் கொள்ளாது. ஆனால் அதிருஷ்டவசமாக இந்த பூனை சேர்த்துக் கொண்டது. இத்தனைக்கும் அந்த பூனையின் குட்டிகள் சற்று வளர்ந்து போய் இருந்தன. இருப்பினும் ஜூலி பூனையின் குட்டிகளுக்கு பாலூட்டி வளர்த்தது பாண்டு பூனை.

    இப்படி அந்த குட்டிகள் பிழைத்துக் கொண்டன. ஆனால் பூனைகள் எதுவும் நிலைக்கவில்லை! ஓரிரு ஆண்டுகளில் நோய் வந்தோ பாம்பு கடித்தோ இறந்து விட்டன. கடைசியாக ஒரு சாம்பல் நிற கடுவன் பூனையும் சோபியா என்ற பெண் பூனையும் மட்டுமே வீட்டில் தங்கின.

    இந்த பெண் பூனை ஒரு மலடு! குட்டி போடுவதில்லை! அது எங்களுக்கும் நல்லதாகவே இருந்தது. இந்த பூனையை எங்கள் தங்கைகள் கொஞ்சி மகிழ்ந்து மடியில் இருத்திக் கொள்வார்கள்! கடுவன் பூனையாக இருந்தாலும் அந்த பூனை மிகவும் சாதுவாக இருந்தது.

   சோபியா பூனையைத் தேடி வெளி பூனைகள் இரவு நேரங்களில் வர ஆரம்பித்தன. இந்த பூனைகளும் அந்த பூனைகளும் விகாரமாக கத்தியபடி இருக்கும்! என்ன செய்வது? அது பூனைகளின் இனப் பெறுக்க காலம்! ஆனால் சோபியா பூனை குட்டி போடுவதில்லை யாதாலால் பூனைக் குட்டிகளின் எண்ணிக்கை என் வீட்டில் பெறுக வில்லை!.

   ஒரு சமயம் வெளியில் இருந்து வந்த கடுவன் பூனை ஒண்று எங்கள் வீட்டு பூனையோடு சண்டையிட்டு கண்ணை குத்திவிட்டு போய்விட்டது.

  எங்கள் கடுவன் பூனை சண்டையில் தனது வலது கண்ணை இழந்து விட்டது! அதனால் ஒண்றும் செய்ய முடியவில்லை! வலியால் துடித்துக் கொணிருந்தது. எங்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை! கண்ணில் இருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. உணவை எடுக்க வில்லை! இறந்து போய்விடுமோ என்று நினைத்தேன்.

  அப்போது எனக்கு ஒன்று தோன்றியது! உணவை சாப்பிட முடியவில்லை! பால் வைத்தால் சாப்பிடுமோ என்று நினைத்தேன்! வீட்டிலிருந்து சிறிது பாலை வைத்தேன்! அருந்திவிட்டது. அன்று முதல் தினமும் ஒரு பாக்கெட் பால் வாங்கி அந்த் பூனைக்கு ஊற்றி வந்தேன். ஒருவாரம் இவ்வாறு செய்தேன். பூனை பிழைத்து விட்டது ஆனால் அதன் ஒரு கண் பார்வை போய்விட்டது.

  இப்படியாக அந்த பூனையை காப்பாற்றிய பின் ஒரு இரண்டு வருடங்களே அந்த பூனை உயிருடன் இருந்தது. பூனை பிடிப்பவர்கள் அதை அடித்து போட்டுவிட்டார்கள்! வீட்டருகின் வயலில் நாற்றம் வருகிறதே என்று சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் இறந்து கிடந்தது பூனை ஒன்றும் செய்ய முடியவில்லை!

  கடைசியாக நின்ற சோபியா பூனையும் திடீரென வீட்டை விட்டு சென்றது திரும்பி வரவே இல்லை! இப்போது வீட்டில் பூனைகளே இல்லை! ஆனால் அதற்கு பதில் எலித் தொல்லை அதிகரித்து விட்டது. வெளியில் இருந்து சில பூனைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அவைகளை பார்க்கும் போது பழைய நினைவுகள் கிளம்புகின்றன.

 ஆசான பூதூரில் வசிக்கும்போது என் தாத்தா தினமும் கோயில் பூஜைகளுக்காக பக்கத்து ஊர்களுக்கு நடந்தே செல்வார். மொத்தம் ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர்கள் வரும். ஆசான பூதுர் மேடு அச்சரபள்ளம் என்ற ஊர்களுக்கு செல்வார். அவைகளும் குக்கிராமங்களே.

    விடுமுறை தினங்களில் அவருடன் செல்வது என்னுடைய வழக்கம். ஒரு கையில் தடியும் இன்னோரு கையில் தோள் பட்டையில் நைவேத்திய கூடையும் மாட்டிக் கொண்டு அவர் முன்னால் நடக்க நான் பின்னால் செல்வேன். வெயில் காலங்களில் குறுக்கு வழி என்று சில கிலோ மீட்டர்கள் மிச்சம் செய்ய ஏரியினுள் இறங்கி நடந்து செல்வோம்.

  வழக்கமாக அச்சரபள்ளம் செல்ல மேடு சென்று அங்கிருந்து வயல் வெளியின் வழியாக செல்ல வேண்டும். அதற்கு ஒரு குறுக்கு வழி இருந்தது. ஆசானபூதூர் காலணியின் உள்ளே சென்றால் மடு ஒன்று குறுக்கிடும் அதைக் கடந்து இரண்டு வரப்புக்களை கடந்தால் அச்சரபள்ளம் வந்து விடும் ஏறக்குறைய அரை மணி பயண நேரம் மட்டுப்படும்.

  எனவே மடுவில் நீர் குறைந்தால் தாத்தா இந்த வழியாக துணிச்சலாக இறங்கி விடுவார். ஆழம் காண கையில் தடி வேட்டியை கழற்றி தலையில் சுற்றிக் கொள்வார். மெதுவாக தடியை ஊன்றியபடி இறங்கி மறு கரை ஏறிவிடுவார். நானும் அவருடன் சென்றிருக்கிறேன். என்னுடைய டிரவுசரை கழற்றி பையில் வைத்துக் கொண்டு விடுவார் அவரது கையை பிடித்தபடி வரச் சொல்வார். அவருக்கு இடுப்பிற்கு வரும் நீர் எனக்கு கழுத்து வரை வரும்.

   சில்லென்று குளிரெடுக்கும் காலில் மீன்கள் சுரண்டும்! ஆனாலும் தண்ணீரில் இறங்குவதென்றால் குஷிதானே! ஆசையாக அவருடன் இறங்கி செல்வேன்.

   அச்சரப்பள்ளத்தில் பூசை முடித்ததும் ஒரு மளிகை கடைக்கு கூட்டிச் செல்வார் தாத்தா! அது அந்த ஊரின் டிபார்மெண்டல் ஸ்டோர்! செட்டியார் ஒருவர் நடத்தி வந்தார். வீட்டிற்கு தேவையான பொருள்களை அக்கவுண்டில் வாங்கி கொள்வார் தாத்தா. வருடம் ஒருமுறை கோயில் வருமானம் வரும்போது செட்டில் செய்து விடுவார். இதனால் பொருட்களின் விலை சற்று தூக்கலாகத்தான் இருக்கும்.

    என்ன செய்வது? அன்றாடம் வருமானம் ஏதும் கிடையாது!வருடம் ஒரு முறைதான் கோயில்களில் நெல் வரும்! அதில் சாப்பாட்டிற்கு என்று சில மூட்டைகளை நிறுத்திக் கொண்டு மீதத்தை இந்த மாதிரி கடன் காரர்களுக்கு அளந்து விடுவார். அடுத்த வருடம் மீண்டும் கடன் வாங்குவார். இப்படியே போய்க் கொண்டிருந்தது அவரது காலம்.

   சரி விசயத்திற்கு வருவோம். தாத்தா அந்த மளிகை கடையில் அவருக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிய பின் எனக்கு சில அயிட்டங்கள் வாங்குவார் அதில் குறிப்பாக நெய் பிஸ்கெட் சூப்பராக இருக்கும் பத்து காசு இருந்த அது பின்னர் நாலணா வரை உயர்ந்தது. அடுத்தது பப்பர்மிண்ட் இது தாத்தாவிற்கும் ரொம்ப பிடிக்கும். இது தவிர கம்மர் கட், பொறை, புளிப்பு மிட்டாய், கடலை உருண்டை போன்றவைகளும் வாங்குவார்.

  ஒரு 50 காசுக்கு பப்பர் மிண்ட் வாங்கி கொண்டு வாயில் ஆளுக்கொன்று போட்டுக் கொண்டு ஆசான பூதூர் திரும்புவோம் ஊர் வருவதற்குள் ஆளுக்கு இரண்டு மிட்டாய்கள் காலி செய்திருப்போம். தொண்டைக்குள் ஒரு குளுமை பரவி இருக்கும்.

 அற்புதமான சுவை அது. இன்றைய குழந்தைகளுக்கு பலவித பண்டங்கள் வந்து விட்டது. கம்மர்கட்டும் கடலை மிட்டாயும் மறைந்து போய் விட்டன. இருந்தாலும் அந்த சுவை மீண்டும் கிடைக்குமா என்று ஏங்குகிறது மனசு


   மீண்டும் நாளை!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2