'ராசியில்லாத ராஜா'... சச்சின் கேப்டன் பதவியை துறந்த மர்மம்!


சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை சச்சின் டெண்டுல்கர் துறக்க புதிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது கேப்டன் பதவிக்கும் அவருக்கும ராசியில்லை என்பதாலும், சென்டிமென்ட்டாக ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் லீக் போட்டியை வென்றதாலும்தான் ஹர்பஜன் வசம் கேப்டன் பதவியை சச்சின் ஒப்படைத்தார் என்பதே அந்த தகவல்.

சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான ஒரு வீரரை இப்போது காட்டுவது கஷ்டம்தான். அவ்வளவு அபாரமான ஆட்டக்காரர் அவர். சாதனைகளின் ராஜாவாக வலம் வரும் சச்சினுக்கு ஒரே ஒரு குறை மட்டுமே உள்ளது. கேப்டனாக அவர் எதையும் சாதிக்கவில்லை என்பதே அது.

இத்தனைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 2 கால கட்டங்களில் இருந்துள்ளார் சச்சின். ஆனால் ஒரு வீரராக வெளுத்துக் கட்டிய அவரால் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடிந்ததில்லை. கேப்டனாக இவர் இருந்த காலங்களில் இந்திய அணி வென்றதை விட தோற்றதே அதிகம்.

அவரது முதலாவது கேப்டன் பதவிக்காலம் 1996ல் தொடங்கியது. அப்போது அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருந்தார். படு வேகமாக அவரைத் தேடி அப்போது கேப்டன் பதவியைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதனால் சச்சின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

இரண்டு மிகப் பெரிய தோல்விகள் அவரது கேப்டன் பொறுப்புக்கு வேட்டு வைத்தன.

96-97ல் இந்திய அணி சச்சின் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. இதில் ஒரு டெஸ்ட்டில் கூட இந்தியா வெல்ல முடியவில்லை. 2-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இதில் டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 100 ரன்களை மட்டுமே எடுத்தது. 2வது இன்னிங்ஸில் இன்னும் மோசம், 66 ரன்களை மட்டுமே எடுத்தார்கள்.

இதனால் சச்சின் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். பின்னர் அசாருதீன் கேப்டன் பதவியிலிருந்து மாற்றப்பட்டபோது சச்சினை மீண்டும் கேப்டனாக்கினர். ஆனால் இப்போதும் துரதிர்ஷ்டம் துரத்தியது.

சச்சின் தலைமையில் ஆஸ்திரேலியா போன இந்திய அணி சந்தித்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஆனால் என்ன ஆச்சரியம், அந்தத் தொடரின் நாயகன் சச்சின்தான். காரணம், ஒரு பேட்ஸ்மேனாக அவர் பிரமாதப்படுத்தியிருந்தார்.

பின்னர் இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் சச்சினின் தலைமைத்துவம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் சச்சின். கங்குலி கேப்டனானார். இது நடந்தது 2000மாவது ஆண்டில்.

கேப்டனாக சச்சினின் சாதனை

சச்சின் தலைமையில் இந்திய அணி மொத்தம் 25 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 4ல் மட்டுமே வெற்றி. 9 போட்டிகளில் தோல்வியும், 12 போட்டிகளில் டிராவும் கிடைத்துள்ளன.

அதேபோல சச்சின் தலைமையில் 74 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய இந்தியா 23ல் மட்டுமே வென்றுள்ளது. 43 தோல்விகளைச் சந்தித்துள்ளது. 2 போட்டிகள் டை ஆகியுள்ளன. 6 போட்டிகள் கைவிடப்பட்டன.

2 முறை சூடு பட்டதால் இனிமேல் கேப்டன் பதவியைப் பற்றி நினைப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்தார் சச்சின். கேப்டனாக அவர் சிறப்பாக இல்லாவிட்டாலும் கூட அதன் பிறகு அவர் செய்த சாதனைகளின் பட்டியல் எவ்வளவு நீளமானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதே கதைதான் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியிலும் நீடித்து வருகிறது. ஒரு பேட்ஸ்மேனாக மும்பை இந்தியன்ஸ் அணியை பெரிய உயரத்திற்கு அவர் கொண்டு போயிருந்தாலும் கூட கேப்டனாக அந்த அணிக்கு இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை 4 ஐபிஎல் தொடர்கள் முடிந்து விட்டன. ஆனால் எதிலும் கோப்பையை வென்றதில்லை மும்பை. இத்தனைக்கும் பல நல்ல வீரர்களைக் கொண்ட அணிதான் மும்பை. ஆனாலும் கோப்பை மட்டும் கைவசமாகாமல் உள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்பஜன் சிங் தலைமையில் போட்டியைச் சந்தித்து இறுதிப் போட்டியிலும் அசத்தலான வெற்றியைப் பெற்றது.

இதை மனதில் கொண்டுதான் சச்சின், தனது கேப்டன் பதவியைத் துறந்திருப்பதாக கருதப்படுகிறது. மற்ற கேப்டன்களின் கீழ் விளையாடியபோதெல்லாம் சச்சின் பல சாதனைகளைப் படைத்துள்ளார். கங்குலியாகட்டும், டிராவிடாகட்டும், டோணியாகட்டும் அவர் செய்த சாதனைகள் நிறைய. உச்சமாக உலகக் கோப்பையையும் இந்திய அணி வென்றுள்ளது.

தான் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட தனது கேப்டன்களுக்கு அருமையான ஐடியாக்களையும், நல்ல முடிவுகளை எடுக்க உகந்த ஆலோசனைகளையும் கொடுக்க சச்சின் தவறுவதில்லை. அந்த வகையில் அணியின் தூணாகவே அவர் விளங்கி வருகிறார்.

அதேபோல ஐந்தாவது ஐபிஎல் தொடரிலும் ஹர்பஜன் சிங்குக்கு நல்ல ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டே, பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக கருதப்படுகிறது.

பார்க்கலாம், கேப்டன் பதவி மாற்றம் சச்சினுக்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் ஒர்க்அவுட் ஆகிறதா என்று...

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2