பங்குனி உத்திரம்! நத்தம் ஸ்ரீவாலீஸ்வரர் சிறப்பு தரிசனம்


பங்குனி உத்திரம்! நத்தம் ஸ்ரீவாலீஸ்வரர் சிறப்பு தரிசனம்

ஆலயங்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் அருகே 15கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகிய தலமான நத்தம்.முன்பு இகணபாக்கம் என்று அழைக்கப்பட்ட இந்த தலத்தில் ஸ்ரீ வாலீஸ்வரர் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகையுடன் அருள் பாலிக்கிறார்.

   காரனோடை பாலத்தை அடுத்த பஞ்செட்டி என்னும் இடத்திலிருந்து நத்தம் கிராமத்தை நாம் அடையலாம். பேருந்து வசதி கிடையாது. அழகிய வயல்களின் ஊடே பாதை செல்கிறது. கிராமத்தை இரண்டுகிலோமீட்டர் நடை பயணத்தில் அடைந்த பிறகு ஊரின் இறுதியில் வயல் வெளியில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் ஆலயம்.
 தற்சமயம் எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு ஆலய குருக்கள் மற்றும் ஆண்மீக அன்பர்களின் முயற்சியால் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் பொலிவுடன் காணப்படுகிறது.

  ஆலயத்தில் கோபுர வாயில் கிழக்கு புறமிருந்தாலும் ஆலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. தெற்கு வாயில் உள்ள தலங்கள் பரிகாரத் தலங்களாக அரியப்படுகின்றன. ஆம் இத்தலமும் ஒர் பரிகாரத்தலம் தான்.

இங்குள்ள வாலீசனை வழிபடுவதால் ராகு தோஷம் விலகும் என்கிறார் குருக்கள். அதற்கான புராண வரலாறும் தருகிறார். அம்பிகை ஆனந்தவல்லியை ராகு சர்ப்ப வடிவில் வந்து தீண்டியமையால் ஏற்பட்ட விஷத்தை ஈசன் ஏற்றுக் கொண்டதால் லிங்கம் கருமையாக உள்ளது. மேலும் ஈசனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரம் என்பதும் கருமையானது எனவே அகோர லிங்கம் என்றும் சொல்லலாம் என்கிறார்.

அம்பிகையை ராகு தீண்ட காரணம் என்ன?
அம்பிகையின் தீவிர பக்தன் ஆனந்த தாசன். அம்பிகையின் கோயிலையையெ வலம் வந்து பணிகள் செய்து கிடப்பவன். தேவிக்கு செய்யும் தொண்டை தன்னுடைய பிறவிப் பயனாக எண்ணி ஆலயத்தில் தொண்டாற்றி வந்தான். அவனை ராகு பீடிக்கும் காலம் வந்தது. அம்பிகை தன்னுடைய பக்தனை காக்கும் பொருட்டு தடுத்தால் சினம் கொண்ட ராகு சர்ப்ப வடிவில் சீறி அம்மையை தீண்டி விட விஷத்தின் தீவிரத்தால் அம்பிகை மூர்ச்சை அடைந்தாள்.
   சக்தி இல்லாது உலகம் தவிக்க ஈசன் அன்னையை எழுப்பி நெல்லிவனம் சென்று தன்னை வழிபடுமாறு கூறினார். அக்காலத்தில் நத்தம் நெல்லி வனமாக இருந்தது. நெல்லிக் காட்டில் உறையும் ஈசனை அம்பிகை வழிபட இங்குள்ள சுனையும் அல்லிக்குளமும் உதவின. சுனையில் நீராடி,குளத்தில் உள்ள செவ்வல்லி மலர்களைசாற்றி வழிபட ஈசன் குளிர்ந்து அம்பிகையின் விஷத்தை ஏற்றுக் கொண்டார்.அதன் மூலம் கருநிறமாகி போனார். இவ்வீசனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் கருநீலமாக மாறக் காணலாம்.

  வாலியின் பிரம்ம ஹஸ்தி தோஷமும் நீங்கியது இந்த ஈசனை வழிபட்டதால். வானர அரசன் வாலி இராவணனை தன் வாலால் கட்டி ஏரி குளம்,கடல், மலைகளில் மூழ்கடித்தும், புரட்டியும் துன்புறுத்தினான்.
 இராவணன் அரக்கன் ஆனாலும் விஸ்ரவசு எனும் ரிஷி புத்திரன் எனவே அவனை பிரம்ம ஹஸ்தி தோஷம் பீடித்தது.
  தோஷத்தால் துன்புற்ற வாலிக்கு பிரம்மா உபதேசம் செய்து இங்குள்ள ஈசனை வழிபடுமாறு கூறி அனுப்புகிறார். வாலியும் இங்கு வந்து சுனையில் நீராடி அல்லி மலர் சார்த்தி வழிபட தோஷம் விலகுகிறது.வாலியின் பூஜையில் மகிழ்ந்த இறைவன் இனி நான் உன் பெயரால் வாலீஸ்வரன் என்று வழங்கப்படுவேன். இவ்வனம் வாலிவனம் என்று வழங்கப்படும் என்று கூறி இங்கு என்னை வழிபடுவோர் வாழ்வில் உள்ள தோஷங்கள் நீங்கி துயரங்கள் விலகும் என்று வரங்கள் தந்து மறைகிறார்.

   வாலியும் அம்பிகையும் குளித்த சுனை இன்று வாலி தீர்த்தம் என்று வழங்கப் படும் கேணியாக வற்றாமல் நீர் சுரக்கிறது. அல்லிக் குளம் தூர்ந்து இப்போது தூர்வாறப்பட்டுள்ளது.

இந்த ஈசனுக்கு திங்கள் கிழமை ராகு கால வேளையில்பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு தோஷம் கால சர்ப்ப தோஷம் விலகி திருமணம் கைகூடும்.

இந்த ஆலயத்தில் மேலும் சிறப்பு பிரம்மா வழிபட்ட காரியசித்தி கணபதி அமைந்திருப்பதுதான். தொந்தியில்லா கணபதியான இவருக்கு ரோஜாமாலை சார்த்தி பச்சரிசி வெல்லம் படைத்து சூரைத் தேங்காய் விட்டு வழிபாடு செய்தால் திருமணத் தடை விலகும்.காரியத் தடை உள்ளவர்களும் இங்கு வந்து சூரைதேங்காய் விட்டு வழிபட்டால் காரியத் தடை நீங்கி வாழ்வில் வளம் சேரும்.

இத்தகைய பழமையான அருமையான ஆலயத்தை ஒருமுறை சென்று வழிபட்டு வரலாமே இன்றுபங்குனி உத்திர விழா திருக் கல்யாண வைபவம் ஆலயத்தில் மாலையில் நடைபெற உள்ளது.

ஆலயத்திற்கு செல்லும் வழி

செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து கும்முடிபூண்டி,பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி பஞ்செட்டி என்னும் இடத்தில் இறங்கி மேற்கே செல்லும் கிளைச் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

ஆட்டோ வசதி வேண்டும் எனில் ஜணப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் இறங்க வேண்டும் அங்கிருந்து 5 கீமீ தொலைவில் கோயில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம் காலை 7மணி முதல் 11 மணி வரை
மாலை 5மணி முதல் 7.30 மணி வரை

தொடர்புக்கு  ஆலய குருக்கள். அ.சாமிநாத சிவாச்சாரியார். செல் 9444497425.

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2