நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!

என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜித் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2