பசுமை நிறைந்த நினைவுகள் பகுதி 9
பசுமை நிறைந்த
நினைவுகள் பகுதி 9
வாசகர்களுக்கு இந்த
தொடர் சற்று இடைவெளி விட்டுவிட்டது வருத்தமாக இருந்திருக்கும். இன்னும் சிலருக்கு
அறுவை தொலைந்தது என்று இருந்திருக்கும்! சுமார் ஒரு இருபது இருபத்தைந்து
நபர்கள்தான் இதை படிக்கிறீர்கள் என்று கூகுள் கூறினாலும் என்னால் சும்மா இருக்க
முடியவில்லை! உங்களுடன் ரம்பம் போட மீண்டும் வந்து விட்டேன்! என்ன செய்வது இனி
காப்பி பேஸ்ட் செய்யமாட்டேன் என்று சூளுரைத்தும் விட்டேன். இனி என் எழுத்துக்களை
நீங்கள் சகித்துதான் ஆக வேண்டும்.
நாடெங்கும் ஐ.பி.எல் மோகத்தில் இருக்க அதற்கு
டிவியில் டி.ஆர்.பி கிடைக்கவில்லை என்றுசெய்தித்தாள்கள் நாளொறு மேனியும் பொழுதொறு
வண்ணமாக சுவையான செய்திகளை போட்டு வாசகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சமயத்தில்
எங்கள் ஊரிலும் உள்ளூர் டோர்ணமெண்ட் ஒன்று இன்று ஆரம்பித்து இருக்கிறார்கள் சுமார்
இருபது டீம்கள் கலந்து கொள்கின்றனவாம் 300ரூபாய் நுழைவுக் கட்டணமாம்.எங்கள்
கொள்ளைப்பக்கத்தில் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் காலையில் இருந்து ஒரே
கும்மாளம்தான்!
இதை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகங்கள்
கிளர்ந்து வந்தன. அது 1987 இந்தியாவில் முதன் முதலில் உலகக்கோப்பை கிரிக்கெட்
போட்டிகள் நடந்த சமயம் அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். அதுவரை
எனக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது. கண்ணாமூச்சியும் ஐஸ்பாயும்
விளையாடிக் கொண்டிருந்த எனக்கு வானொலியும் தொலைக்காட்சியும் கிரிக்கெட்டை அறிமுகப்
படுத்தின. அதைவிட என்னுடைய நண்பன் இளங்கோவன் தான் அறிமுகப்படுத்தினான் என்றால்
மிகையாகாது.
அப்போது ஆசான பூதூரில் என் தாத்தா வீட்டில்
படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக விடுமுறை நாட்களில்விளையாட வரும் இளங்கோ என்ற
செல்லா வரவில்லை! மறுநாள் ஏண்டா வரலை! என்று கேட்டேன் வோர்ல்ட்கப் கிரிக்கெட்
டிவியில பார்த்தேன்! அதான் வரலைடா என்றவன், நாளைக்கு ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச்
இருக்கு நீயும் வா பார்க்கலாம் என்று அழைத்துச் சென்று காட்டினான்.
கிரிக்கெட்டின் அரிச்சுவடியை அவன் தான்
கற்றுக் கொடுத்தான். கவாஸ்கர் கபில்தேவ், அமர்நாத் ஸ்ரீகாந்த், சித்து, பின்னி
கிரன்மோரே வெங்சர்க்கர் ,ரவிசாஸ்திரி என்றுபிளேயர்களையும்
அறிமுகப்படுத்திவைத்தான். ஸ்ரீகாந்த் உன்னைப்போல ஐயிருதான்! ஆனா முட்டை மட்டன்லாம்
சாப்பிடுவான்! அதான் பின்னி எடுக்கிறான் என்று ஏதோ அறிந்தவன் போல் விளக்கம்
தருவான்.
கிரிக்கெட் பார்த்த நாங்கள் கிரிக்கெட்
விளையாட ஆரம்பித்தோம். அங்கு போதுமான மைதான வசதிகள் இல்லாததால் கோயில் பின்புறம்
சிறிய இடத்தில் ஆட ஆரம்பித்தோம். சிறிய இடமாதலால் பந்தை உருட்டிவிட்டு ஆடினோம்.
எங்களுக்கு பேட்டாக தென்னை மட்டைகள், தாத்தாவின் பழைய மர செருப்புக்கள் உதவின.
அப்போது ரப்பர் பந்துகள் 1ரூபாய் விற்றன. அதை வாங்க எங்களுக்கு காசு கிடைக்காது.
பெரும்பாலும் நான் தான் வாங்கி வருவேன். இப்படி எங்கள் கிரிக்கெட் வாழ்க்கை
தொடங்கியது. இரண்டு டீம் பிரித்து ஆட வேண்டும் என்பதால் பெண்களையும் உடன் சேர்த்து
ஆடுவோம் அப்படியும் பத்துவிக்கெட் வேண்டுமாதலால் சிலருக்கு இரண்டு விக்கெட் என்று இரண்டுமுறை
ஆடவிடுவோம்.
ஆசானபூதூரில் இருந்து நான் நத்தத்திற்கு
பெயர்ச்சி ஆனதும் சிறிது நாள் எனது கிரிக்கெட் வாழ்க்கை தடைபட்டது. இங்கு எனது
சகோதரிகளுடன் ஆடிக் கொண்டிருந்தேன். இப்படி ஒரு ஆறுமாத காலம் கழிந்ததும் இங்கும்
எனக்கு நண்பர்கள் சேர்ந்தார்கள். அவர்களுடன் இங்குள்ள கோயிலில் தரையில் பந்தினை
உருட்டிபோட்டு விளையாடி வந்தோம். நான் ஒன்பதாம் வகுப்பு சேர்ந்த சமயம் அங்கு வந்த
எங்கள் ஊர்பையன் கருணா, உங்க டீமுக்கும் எங்க டீமுக்கும் பெட் மேட்ச்
வைச்சுக்கலாமா என்று அழைத்தான். நண்பர்களுடன் கலந்து ஒத்துக் கொண்டேன்.
ஒரு ஞாயிற்று கிழமையில் எங்களூர் குளக்கரையில்
போட்டி என்று தீர்மானமானது. எங்களிடம் பேட் இல்லை! பந்துதான் உள்ளது என்றதற்கு
கருணா பேட் எடுத்துவருவதாக கூறினான். ஐந்து ரூபாய் பந்தயக்காசாக முடிவானது. டாஸ்
வென்று பேட் செய்ய முடிவெடுத்தேன். அதற்கு முன் உங்களுக்கு பவுலிங் போட ஆளில்லை
அதனால் எங்கள் டீம் பையன் நாகராஜை அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தான் கருணா.
அவனும் வேண்டா வெறுப்பாக வந்து சேர்ந்தான்.
கருணாவிற்கு நாங்கள் வெத்து வேட்டு என்று
நன்றாக தெரியும். எங்களுக்கு மட்டை பிடிக்கவும் தெரியாது. பந்துவீசவும் தெரியாது
என்பதை நன்கு அறிந்தே போட்டிக்கு அழைத்தான். நாங்களும் இப்படியே தரையில் உருட்டி
விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி கபில்தேவ் கவாஸ்கராய் உருவெடுப்பது என்று
போட்டியில் கலந்து கொண்டோம்.
முதன் முதலில் அப்போதுதான் பந்து வீசி ஆட
உள்ளோம்! பேட் செய்ய தீர்மாணித்த என்னை தடுத்து பவுலிங்க் செய்யலாம் என்று ஆலோசனை
கூறினான் நண்பன் ஜெயேந்திரகுமார். எப்படியோ தட்டு தடுமாறி பந்து வீசினோம் நாங்கள்.
இது ஓவரே அல்ல மாங்கா பால்! என்று அவனது டீம் ஏளனம் செய்ய அந்த டீமிலிருந்து வந்த
நாகராஜிம் வேண்டா வெறுப்பாக போட பீல்டிங்கிலும் நாங்கள் பதட்டத்தில் சொதப்ப பத்து
ஓவர்களில் அறுபது ரன்களை அவர்கள் குவித்து விட்டனர்.
அடுத்துநாங்கள் ஆடினோம்! மரத்தால் ஆன அந்த
பேட்டை தூக்கவே சிரமப்பட்டனர் எங்கள் வீரர்கள் நாகராஜ் மட்டும் சற்று நின்று
ஆடினான். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் திரும்ப நான் சற்று போராடினேன். நானும்
ஹிட் விக்கெட்டாகி அவுட்டாக தோல்வியை தழுவினோம் நாங்கள்
ஐந்து ரூபாயை கருணாவிடம் மனமில்லாமல்
கொடுத்தேன்! இன்னொரு மேட்ச் வச்சிக்கிலாமா? ஜெயிச்சா உன் காசு உனக்கே வந்திரும்
தோத்தா அப்புறமா காசு கொடு என்று தூண்டில்
போட்டான் கருணா. இல்லைடா கடனெல்லாம் வேண்டாம்! அடுத்தவாரம் திரும்பவும் மேட்ச்
வச்சிக்கலாம் என்றேன் சூடுபட்ட பூனையாக!
அதுமுதல் அவன் ருசி கண்ட பூனையாக துரத்த நான்
சூடுபட்ட பூனையாக தள்ளி போட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் விதி யாரை விட்டது. ஒரு
கோடைக் கால ஞாயிறில் குளத்தங்கரையில் பசங்க விளையாடுவதை பார்க்க சென்றேன். ஆள்
குறையுது நீயும் வாடா! என்று அழைத்தனர்.
மிட்விக்கெட் திசையில் பீல்டிங் நின்றிருந்தேன்! ஒருவன் அடித்த பந்து கைக்கு நேராக
வர கேட்ச் என்று ஒரே சத்தம் பதட்டத்தில் கைவிட்டேன்! பந்து கையில் பட்டு எகிறியது!
பார்த்து கொண்டிருந்த ஒருவர் கையை விரித்து காட்டி இப்படி பிடிச்சா நிக்குமா?
என்று ஏளனம் செய்ய அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பேட்டிங்கிலும் நான் ஒன்றும்
பெரிதாக சாதிக்க வில்லை ஒரு ஏழோ எட்டொ ரன்கள் தான் எடுத்தேன்! எங்கள் டீம்
தோல்வியையை தழுவியது.
எனக்கு வருத்தமாகி போய்விட்டது. அன்று மாலை
மீண்டும் மேட்ச். காலையில் என்னை சேர்த்துக் கொண்ட டீம் இப்போது தள்ளிவைத்தது.
கருணாதான் சேர்த்துக் கொண்டான் முதலில் அவனது டீம் பவுலிங்க் செய்ய எதிரணியில்
முக்கிய வீரனாக நாகராஜ் இருந்தான். முதல் ஓவரிலேயே நாகராஜ் பந்தை தூக்கி அடிக்க
சுமார் இருபதடி தூரம் ஓடிவந்து ஒரு மின் கம்பத்தின் ஸ்டே வயர் தடுக்கினாலும்
அதையும் தாண்டி அந்த கேட்ச்சை நான் பிடிக்க கருணா ஓடோடி வந்து என்னை தழுவிக்
கொண்டான். அந்த போட்டியில் மேலும் சில கேட்ச்களை நான் பிடிக்க ஒரே நாளில்
ஹீரோவாகிப் போனேன் நான்!
அடுத்த பதிவில் மீண்டும் தொடர்கிறேன்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment