சென்ரியுவாய் திருக்குறள் 11-15

குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.
மு. உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

தளிரின் சென்ரியு

அமிழ்தம் உண்டும்
இறக்கின்றன
மரங்கள்.

அமிழ்தாகிய மழையை உண்டும் வெட்டப்பட்டு இறக்கின்றன மரங்கள்.

உயிர்கள் உய்ய
வானம் பெய்யும்
அமிழ்தம்!


 
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.
மு. உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

தளிர் சென்ரியு

ஆக்குவித்து
ஆகுதியாகும்
மழை!

உணவுப்பொருளை விளைவித்து உணவாகவும் ஆகும் மழை!
ஆகுதி= உணவு

விளைநிலம்
விவசாயியின் உணவு
மழை!

விளைபொருளுக்கும் விவசாயியிக்கும் உணவாகக் கூடியது மழை!

குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.
மு. உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

தளிர் சென்ரியு


பொய்த்த மழை
தவித்தது
பசித்த வயிறுகள்

மழை பொய்த்தால் பசியால் உலகம் தவிக்கும்.

ஆழீ நீர்
அகற்றுமா
ஆழியின் பசி!

கடலளவு நீர் இருப்பினும் உலகத்தின் பசியை கடலால் தீர்க்க முடியாது

குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
மு. உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 14

வெடித்த நிலம்
மழுங்கிய ஏர்
பெய்யா மழை!

மழை பெய்யாவிட்டால் நிலம் வெடித்து ஏர் மழுங்கி கிடக்கும்

குன்றிய மழை
குதூகலித்தன
பூண்டுகள்!

மழை குன்றியமையால் விளை நிலத்தில் புல் பூண்டுகள் மண்டின.

குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
மு. உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.


தளிர் சென்ரியு


நன்மை தீமை
நன்றாய் தருகிறது
மழை!

மழையால் விளைச்சல் பெருகி நன்மை! அதே சமயம் தொற்று நோய்கள் பரவி தீமையும் ஏற்படுகிறது.

மகிழ்வு வருத்தம்
ஒருங்கே சேர்ந்தது
மழை!

மழையால் சிலருக்கும் மகிழ்வும் சிலருக்கு வருத்தமும் ஏற்படுவது இயல்பு
 தங்கள் வருகைக்கு நன்றி கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2