மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஹெலிகாப்டர்: "பாசக்கார தந்தை'யின் ஏற்பாடு
குழந்தைகளை மகிழ்விக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாசமான
பெற்றோர் வரிசையில், "பாசக்கார' தந்தை ஒருவர், தனது மகளின் மஞ்சள் நீராட்டு
விழாவிற்காக, ஹெலிகாப்டரில் அழைத்து வந்து, தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்திய நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் விஜயகுமார். அப்பகுதியில் நர்சரி பள்ளி
ஒன்றை நடத்தி வருகிறார். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பது
இவரது எண்ணம். அதுவும், தனது குழந்தைகள் சாதனையாளர்களாக, பிறரால்
கவனிக்கத்தக்கவராக மாற்ற வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் தயாராக
இருக்கும், "பாசக்கார' தந்தை இவர்.கடந்த 2006ம் ஆண்டு இவரது மகன் கேத்ரேஷ்
மூன்று வயதாக இருக்கும்போது, அண்ணாசாலையில் மாருதி வேனினை ஓட்ட வைத்தார்.
தற்போது தனது மகள் பிரகீர்த்தனாவின் (13) மஞ்சள் நீராட்டு விழாவை,
வித்தியாசமாக நடத்தியுள்ளார்.
இதற்காக, வாடகை ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து, மீனம்பாக்கத்தில் இருந்து,
விழா நடந்த புளியந்தோப்பு வரை அழைத்து வரச் செய்து புதுமை படைத்துள்ளார்.
நேற்று மாலை கார் மூலம் பிரகீர்த்தனா மீனம்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டு,
ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்,
புளியந்தோப்பில் உள்ள சர்ச் மைதானத்தில், தரையிறங்கியது. மைதானத்தில்
தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, ஹெலிகாப்டர் இறங்க வசதி
செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பிற்காக, போலீசார், தீயணைப்பு வாகனம்,
ஆம்புலன்ஸ் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஹெலிகாப்டர்
தரையிறங்குவதை பார்க்க ஏராளமானவர்கள் ஆர்வத்தோடு திரண்டனர்.
இந்த ஏற்பாட்டிற்கான காரணம் குறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது, ""என்
மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை, புதுமையாக நடத்த திட்டமிட்டேன். அதற்காக
ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, அவரை விழா நடக்கும்
மைதானத்திற்கு அழைத்து வந்தேன்'' என்றார்.
Comments
Post a Comment