அதிர்ஷ்டமில்லாதது என புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீண்டது: பெற்றோருக்கு கம்பி
லக்னோ: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பிறந்த ஆண் குழந்தையை
அதிர்ஷ்டமில்லாதது என நம்பி உயிரோடு புதைத்த பெற்றோரை போலீசார் கைது
செய்தனர். ஆனால், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாட்களுக்குப் பின்,
உயிரோடு மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து, 450 கி.மீ., தொலைவில்
உள்ள நகரம் ஹபூர். இந்த நகரின் ஒரு பகுதியில் வசிப்பவர்கள், கடந்த சனியன்று
காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, குழந்தை ஒன்று அழும் சத்தம்
கேட்டது. எங்கிருந்த சத்தம் வருகிறது என, அவர்கள் தேடியபோது, பூமியின் மேல்
பகுதியில் எந்தக் குழந்தையும் தென்படவில்லை. பின்னர், ஒரு வழியாக
குழந்தையின் அழுகுரல் பூமிக்கு அடியில் இருந்துதான் கேட்கிறது என்பதைக்
கண்டு பிடித்தனர்.
ஆண் குழந்தை: சத்தம் வந்த பகுதியை தோண்டிய போது, அங்கு மண்ணால்
செய்யப்பட்ட ஜாடி ஒன்றில், ஆண் குழந்தை ஒன்று உயிரோடு இருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது. அந்த குழந்தைதான் அழுதுள்ளது. குழந்தை உடல் முழுவதும்
குங்குமம் பூசப்பட்டிருந்தது. ஜாடியின் அருகே பத்திக் குச்சிகளும் கிடந்தன.
பிறந்து ஆறு நாட்களே ஆன நிலையில் இருந்த, அந்தக் குழந்தையை மீட்ட அவர்கள்,
மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை
உயிரோடு இருந்ததை கண்டு வியப்படைந்த டாக்டர்களும் அதற்கு சிகிச்சை அளித்து
வருகின்றனர். குழந்தைக்கு மஞ்சள் காமாலையும், கிருமி தொற்றும்
பாதித்திருப்பதால், தற்போதைக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
மந்திரவாதி யோசனை: குழந்தையை மீட்டவர்கள் இதுபற்றி போலீசிற்கு
தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, குழந்தையின் பெற்றோரான
கிரண்பால் சிங் மற்றும் அனிதாவைக் கண்டு பிடித்தனர். அப்போதுதான் குழந்தை
இரண்டு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டதும், மந்திரவாதி ஒருவரின் பேச்சைக்
கேட்டு இதைச் செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கிரண்பால் மேலும்
கூறியதாவது: அனிதாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தை பிறந்து இறந்து விட்டது.
இரண்டு முறை கருச்சிதைவும் நிகழ்ந்துள்ளது. அதனால், இந்த முறை கர்ப்பம்
தரித்ததும், மந்திரவாதி ஒருவரை நாடிச் சென்று யோசனை கேட்டோம். அவரோ,
"பிறக்கப்போவது, துரதிருஷ்டமான குழந்தை. எனவே, அந்தக் குழந்தையை உயிருடன்
புதைத்து விட வேண்டும். அதற்கு முன்னதாக பூஜைகள் செய்ய வேண்டும். பூஜை
முடிந்தவுடன் புதைத்து விடுங்கள். அப்படி புதைத்து விட்டால், உங்களின்
துயரம் எல்லார் தீர்ந்து விடும். இனி பிறக்கப் போகும் குழந்தைகள் நல்லவையாக
இருக்கும்' என்று கூறினார். அதை நம்பிய நாங்கள் குழந்தை பிறந்தவுடன்
அவரிடம் தெரிவித்தோம். அவர் வந்து பூஜைகள் செய்த பின், குழந்தையை உயிரோடு
புதைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். ஆனாலும், புதைக்கப்பட்ட இரண்டு
நாட்களுக்குப் பின், அந்தக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டமானது
என, பெற்றோரால் கருதப்பட்ட குழந்தை மரணத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில்,
பெற்றோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். யோசனை சொன்ன
மந்திரவாதியையும் தேடி வருகின்றனர்.
நன்றி தினமலர்
Comments
Post a Comment