சமூகம் எங்கே போகிறது, ரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்!

சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம் வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன. யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளலாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல பெண்களும் வர இந்த அலைபாயுதே ஒரு காரணமாக அமைந்து விட்டது.

காதல் வலையில் வீழ்ந்த பல பெண்களும் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு காதலர்களுடன் ரகசிய வாழ்க்கை வாழ்வதும், கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டு மரணத்தையோ அல்லது காதல் முறிவையோ சந்திப்பதும் அதிகரித்து விட்டது.

இப்படித்தான் சென்னையில் ஒரு பெண் யாருக்கும் தெரியாமல் சினிமாப் பட பாணியில் காதலனை ரகசிய மணம் புரிந்து கொண்டு, இந்த உறவு குறித்து ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதிரி சொல்லி வைத்து கடைசியில் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் உயிரிழந்து போயுள்ளார்.

கடலூர் தீபா -அரியலூர் பார்த்திபன்

கடலூரைச் சேர்ந்தவர் தீபா. 26 வயது. எம்.ஏ. படித்துள்ளார். அதேபோல அரியலூரைச் சேர்ந்தவர் பார்த்திபன். 27 வயது. இருவரும் சென்னை போரூரில் உள்ள விவேக் அன் கோ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தீபா பலத்த தீக்காயத்துடன் வட பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருடன் வந்த பார்த்திபனுக்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

தீக்காயத்துடன் பெண் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். தீபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வாக்குமூலம் கொடுத்தார் தீபா. அந்த வாக்குமூலத்தில் பல பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

தீபாவின் வாக்குமூலம்...

எனது சொந்த ஊர் கடலூர். நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தேன். என்னோடு பார்த்திபனும் ஒன்றாக படித்தார். பார்த்திபனின் சொந்த ஊர் அரியலூர். எங்களுக்குள் காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகள் உயிருக்கு உயிராக ரகசியமாக காதலித்தோம்.

கோவிலில் கல்யாணம் - ரகசிய வாழ்க்கை-கட்டுப்பாடான செக்ஸ்

அலைபாயுதே சினிமா பாணியில் நானும், பார்த்திபனும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தோம். எனது பெற்றோருக்கும், அவரது பெற்றோருக்கும் இந்த தகவல் தெரியாது. எனது தந்தை சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்ததால், எங்களை ஏதாவது செய்துவிடுவார் என்று பயந்தோம்.

நாங்கள் நல்ல நிலைக்கு வந்தபிறகு, எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவிக்க முடிவு செய்திருந்தோம். இதனால் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் செக்ஸ் விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை எங்களுக்குள் வைத்துக்கொண்டோம். செக்ஸ் வைத்துக்கொண்டாலும், குழந்தை உண்டாகாமல் பார்த்துக்கொண்டோம்.

அக்கம்பக்கம் கணவன் மனைவி-மற்றவர்களுக்கு அண்ணன், தங்கச்சி!

நாங்கள் இருவரும் ஒன்றாக சென்னை வந்து விருகம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம். இருவருக்கும் விவேக் அன்கோ நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வீட்டு உரிமையாளரிடமும், அக்கம்பக்கத்தினரிடமும், கணவன்-மனைவி என்று உண்மையை சொல்லிவிட்டோம்.

ஆனால் நாங்கள் வேலைபார்த்த நிறுவனத்தில் அண்ணன்-தங்கை என்று கூறிவிட்டோம். எனது தாயார் ஒருமுறை சென்னை வந்தார். அப்போது அவரிடம் பார்த்திபனை எனது நண்பர் என்று கூறி சமாளித்தேன். எனது தாயார் சென்னையில் இருந்தவரை அவரை வெளியில் தங்க சொல்லிவிட்டேன்.

ஐஏஎஸ் கனவு

எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. பயிற்சிக்கு கூட சென்றேன். ஆனால் எனது கனவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவது. பார்த்திபனும் அதே கனவில் இருந்தார். நாங்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். முதல் கட்ட தேர்வில் வெற்றிபெற்றோம். இதனால் சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டேன்.

ஆனால் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் டி.எஸ்.பி. ஆகலாம் என்று அந்த தேர்வும் எழுதினேன். ஆனால் எனது கனவை சிதைக்கும் வகையில் அன்று அந்த விபத்து நடந்துவிட்டது. இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சமையல் அறையில் படிப்பு

கடந்த சனிக்கிழமை இரவு நான் சமையல் அறையில் உட்கார்ந்து நள்ளிரவு வரை படித்தேன். சமையல் அறையில் மின்சார பல்பு பியூஸ் போய்விட்டதால், மண்எண்ணெய் காடா விளக்கை பற்ற வைத்து அந்த வெளிச்சத்தில் படித்தேன்.

பார்த்திபன் படுக்கை அறையில் தூங்கினார். அவரது தூக்கத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதாலும், ஒன்றாக இருந்தால், செக்சுக்கு அவர் முயற்சிப்பார் என்பதாலும், நான் சமையல் அறையில் படித்தேன். ஆனால் அது எனது வாழ்க்கையை சிதைக்கும் என்று தெரியவில்லை.

படித்தபடியே அப்படியே தூங்கிவிட்டேன். தூக்கத்தில் எப்படியோ, எனது கைபட்டு காடா விளக்கு என்மீது விழுந்து தீப்பிடித்தது. நான் அணிந்திருந்த நைட்டி உடை எரிந்துவிட்டது. அந்த தீ எனது மார்பு முதல், அடி வயிறுவரை எரிந்து தீக்காயம் ஏற்பட்டுவிட்டது.

வலி தெரிந்து நான் தூக்கத்தைவிட்டு எழுந்து சத்தம்போட்டேன். சத்தம் கேட்டு, பார்த்திபனும் ஓடி வந்தார். அவர் என்னை காப்பாற்ற முயன்றதில் அவருக்கும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. எனது கவனக்குறைவால்தான் இந்த விபத்து நடந்து விட்டது. என்னை உயிர் பிழைக்க வைத்து, கடவுள் எனது கனவை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார் தீபா.

வாக்குமூலம் கொடுத்த அவர் திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். பிரேதப் பரிசோதனைக்கு தீபாவின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போதுதான் பலருக்கும் பார்த்திபனும், தீபாவும் ரகசிய கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்த கதை தெரிந்து அதிர்ந்தனர்.

விபத்தா... கொலையா?

தீபாவின் வாக்குமூலத்தில் பல குழப்பங்கள் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். பார்த்திபன் மீதும் போலீஸாருக்கும் சந்தேகம் உள்ளது. பார்த்திபனைக் காப்பாற்றுவதற்காக தீபா பொய்யான வாக்குமூலம் கொடுத்தாரா என்றும் சந்தேகம் உள்ளது.

விபத்து என்று தீபா சொன்னாலும், அவரது உடலின் முக்கால்வாசிப் பாகம் தீப்பிடிக்கும் வரையா அவர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார் என்றும் சந்தேகம் வருகிறது.
தீபாவும், பார்த்திபனும் கணவன், மனைவி போல வாழ்க்கை நடத்தி வந்திருப்பதால் ஆர்ஓடி ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபா, பார்த்திபனின் வாழ்க்கை, சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது என்ற கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2