சுகாதாரம் பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்க!

சுகாதாரமின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். தூய்மையான சுற்றுப்புறம் மட்டுமல்லாது தங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்தும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் கடமை என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தைநல மருத்துவர்கள்.

குளிப்பது, பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் உணவு உண்ணும்போது கை கழுவியபின்பே சாப்பிடவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு அறிவுறுத்தவேண்டும்.

இந்தியாவில், கைகளை ஒழுங்காக கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோயால் வருடத்திற்கு 5 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதே காரணத்திற்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதனால் வளரும் நாடுகள் மற்றும் பின்தங்கிய நாடுகளில் கை கழுவுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

சுகாதாரமான பழக்கங்கள்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருப்பதே. ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococus Aureus) என்ற கிருமி நகங்களின் இடுக்குகளில் ஒட்டிக்கொண்டு உணவருந்தும் சமயம் உட்சென்று குடலில் பல்கிப் பெருகி நோயைத் தோற்றுவிக்கிறது.

குழந்தைகள் மணலில் விளையாடும் போதும், மலம் கழித்துவிட்டு வரும்போதும், கை கால்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சரியான முறையில் கை, கால்களை சுத்தம் செய்வதால் மட்டுமே அழிக்க முடியும்.

கைகழுவ கற்றுக்கொடுங்க

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு தான் பல் துலக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும், உடனே கைகழுவுதல் வேண்டும். சமைத்த பின்பு கூட பெண்கள் கைகளை கழுவுவது நல்லது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவு கொடுப்பதற்கு முன்பும், அவர்களது கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்பே கொடுக்க வேண்டும். இந்த பழக்கத்தை அவர்கள் சீராக கடைப்பிடிக்கும்படி செய்ய வேண்டும்.

மலம் கழித்தபின் சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது. கைகளை அவசர அவசரமாக 2-3 வினாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 30 வினாடியாவது கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இந்த முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலே, நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.

thanks to thats tamil

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2