கர்வம் பிடித்த கிளி! பாப்பாமலர்!

கர்வம் பிடித்த கிளி!

செல்வபுரி என்ற சிற்றூரின் எல்லையில் ஒரு பெரிய மாமரம் வளர்ந்து இருந்தது. அந்த அழகிய மாமரத்தின் கிளைகள் விரிந்து இலைகள்பச்சை பசுமையாக இருந்தது. பூக்களும் கனிகளும் நிறைந்த அந்த மாமரத்தில் பறவைகள் சில கூடு கட்டி வாழ்ந்து வந்தன. அந்த மாமரத்தில் ஒரு கர்வம் கொண்ட கிளியும் வசித்துவந்தது.
   அது எப்போதும் தன் அழகையும் தன்னுடைய பேச்சு திறமையையும் எண்ணி பெருமைப் பட்டுக் கொள்ளும். இங்கு வசிக்கும் மற்ற பறவை இனங்களை அது சுத்தமாக மதிப்பதே இல்லை! அவை தன்னுடன் வசிக்க லாயக்கற்றவை என்று அது எண்ணியது.மற்ற பறவைகளை கிளி சற்றும் லட்சியம் செய்வது இல்லை! தன்னுடைய அழகின்மீது கர்வம் கொண்ட அது அழகே ஆபத்தாக முடியும் என்பதை அறியாமல் மற்ற பறவைகளை ஏளனம் செய்து கொண்டு இருந்தது.
    அங்கு வசிக்கும் மற்ற பறவைகள் எல்லாம் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கிளி விரும்பியது. எனவே அது மற்ற பறவைகளை அடிக்கடி வம்புக்கு இழுத்து கடுஞ்சொற்களை கூறி அவமான படுத்திவந்தது. கிளியின் குணம் அறிந்த மற்ற பறவைகள் அதனிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டன. கிளியை கண்டாலே கூண்டில் போய் அடங்கிக் கொண்டன. இது கிளிக்கு மேலும் கர்வத்தை கொடுத்தது. தன்னை கண்டு மற்ற பறவைகள் பயப்படுவதாக அது நினைத்துக் கொண்டது.
   அந்த கிளி வசித்த கிளைக்கு பக்கத்து கிளையில் காகம் ஒன்று வசித்துவந்தது. வயதில் மூத்த அந்த காகம் கிளிவசிப்பதற்கு முன்பிருந்தே அந்த மரத்தில் வசித்துவந்தது. அதற்கு கிளியின் செய்கை பிடிக்காது ஆனாலும் தன் வேலையை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும். இந்த காகத்தை வம்பிழுத்து பார்க்க கிளி நினைத்தது,
   ஒருநாள் கிளி, ஏ கறுப்பு காகமே! என்னைப் பார் என் சிவந்த மூக்கும் பச்சை உடம்பும் மெத்தென்ற இறகுகளும் எவ்வளவு அழகு? நீயும் உன் கறுப்பு உடம்பும் கரகரத்த குரலும்! என்னைப்போல் உன்னால் பேசமுடியுமா?நீ என் பக்கத்து வீட்டுக்காரன் என்பதில் எனக்கு அவமானமாக உள்ளது. உன்னால்தான் இந்த இடத்திற்கே அசிங்கம்! நீ இங்கிருந்து சென்று விட்டாயானால் இடம் சுத்தமாகும் என்று வம்பிழுத்தது!.காகம் பதில் ஏதும் பேசாமல் மவுனித்தது. உடனே கிளி ஏ திமிர் பிடித்த காகமே நான் கேட்டதற்கு பதில் சொல்! ஏன் மவுனமாய் இருக்கிறாய்? உனக்கு அவ்வளவு திமிரா எனக்கு மரியாதை தரமாட்டாயா? என்று கத்தியது.
   உடனே காகம், ஏய் கிளியே நீதான் மரியாதை இல்லாமல் பேசுகிறாய்! நீ வருவதற்கு முன்பிருந்தே இங்கு வசிப்பவன் நான். அத்துடன் வயதிலும் மூத்தவன்.கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பை கொடுத்திருக்கிறான். அதே சமயம் பலவீனத்தையும் கொடுத்து இருக்கிறான். வீணாக பெருமைப் பட்டுக் கொள்ளாதே! நீ அழகாய் இருந்தாலும் உன்னை யாரும் கூப்பிட்டு உணவளிப்பது இல்லை! ஒரு பண்டிகை விசேஷ தினங்களில் எங்களைத்தான் கூப்பிட்டு உணவளிக்கிறார்கள் மனிதர்கள். அதை புரிந்து கொள் என்று மூக்குடைத்தது காகம்.
  அப்போதும் அடங்காத கிளி ஏ காகமே என்னையே எதிர்த்து பேசுகிறாயா? உன்னை கூடிய விரைவில் விரட்டுகிறேன் பார் என்றது. என்னை விரட்ட உன்னால் முடியாது! உண்மையை சொன்னால் உனக்கு உறுத்துகிறது. நாம் ஒன்றுபட்டால் நம் பகைவர்களிடமிருந்து தப்பிக்க முடியும் உன் அகந்தையை விட்டொழி என்றது காகம்.
  ஆனால் கிளியோ ஆணவத்தை விடாமல் போதும் உன் அறிவுரை காது கிழிகிறது என்று வெறுப்பேற்றியது. காகம் இதை திருத்த முடியாது என்று பறந்து சென்றுவிட்டது.
  அப்போது அந்த மரத்தின் அடியில் வேடுவர் இருவர் வந்தனர். ஆ அழகிய பச்சைக் கிளி இதை பிடித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பேசிக் கொண்ட அவர்கள் சிறிது தானியங்களை கீழே எறிந்து வலை விரித்தனர்.
   கிளிக்கு மிகவும் சந்தோஷம்! காகத்தை கூப்பிட்டு உணவளிக்கிறார்கள்! ஆனால் நமக்கோ தேடிவந்து கொடுக்கிறார்கள்! சாப்பிடுவோம் என்று கீழே இறங்கியது. அப்போதுதான் திரும்பிய காகம், ஏ கிளியே என்ன செய்கிறாய்? தெரிந்துதான் செய்கிறாயா? இது பகைவர்கள் விரித்த வலை! வீணாக மாட்டிக் கொள்ளாதே என்று தடுத்தது.
   கிளியோ ஆணவத்தில் முட்டாள் காகமே என்னை தேடிவந்து உணவளித்தது உணக்கு பொறுக்கவில்லை! உன் பேச்சை கேட்க முடியாது! ஓடிப்போ என்று கீழே குதித்து தானியங்களை கொத்த ஆரம்பித்து வலையில் சிக்கிக் கொண்டது.
  அப்போது காகம் கிளியே! சொன்ன பேச்சை கேட்காமல் ஆணவத்தால் வலையில் சிக்கிக் கொண்டாயே என்று வருந்தியது. வலை வீசியவர்கள் வந்து கிளியை கூண்டில் அடைக்க தன் அழகே தனக்கு எதிரியானதை முதன் முதலில் உணர்ந்தது கிளி!
  இப்போது வருந்தி என்ன பயன்?


உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் மிக உயரமான மலை நந்தா தேவி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!