சூரிய மின்விளக்கு தபால் நிலையங்களில் விற்பனை!




தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, தபால் நிலையத்தில், சூரிய மின் விளக்குகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. திட்டம் துவங்கிய ஐந்து மாதத்தில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மின் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அமெரிக்க நிறுவனம்:தபால் துறை, வர்த்தக நடவடிக்கைகளில் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்று, சூரிய மின் விளக்கு விற்பனைத் திட்டம்.
"டி-லைட்' என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கடந்தாண்டு நவம்பரில், முதன்முதலில், சென்னை அடுத்த செங்கல்பட்டில், சூரிய மின் விளக்கு விற்பனைத் திட்டத்தை, தபால்துறை துவக்கியது; பின், தமிழகம் முழுவதும் உள்ள கிராமப் பகுதிகளில் விரிவுபடுத்தியது.தமிழகத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டு காரணமாக, இத்திட்டத்திற்கு தற்போது, எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
லாபகரமான திட்டம்:இதுகுறித்து, செங்கல்பட்டு தபால் கோட்ட கண்காணிப்பாளர் தர்மன் கூறியதாவது:முதல் கட்டமாக, கிராமப் பகுதிகளில் மட்டும், சூரிய மின் விளக்கு விற்பனைத் திட்டத்தை, தபால் துறை அமல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு காரணமாக, இதுபோன்ற சூரிய மின் விளக்குகளை, மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர்.வருவாய் நோக்கில் செயல்படும் தபால் துறைக்கு, இந்தத் திட்டம் லாபகரமாக இருக்கும். திட்டம் துவங்கிய ஐந்து மாதத்தில்,
செங்கல்பட்டு கோட்டத்தில் மட்டும், 10 லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து நிலையங்களிலும்...:இதுகுறித்து, சென்னை நகர மண்டல வர்த்தகப்பிரிவு உதவி இயக்குனர் அமலசந்திரன் கூறியதாவது:திட்டம் துவக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே, கையிருப்பில் உள்ள அனைத்து சூரிய மின் விளக்குகளும், விற்றுத் தீர்ந்துவிட்டன. குறைந்த விலையிலான, இந்த சூரிய மின் விளக்கு விற்பனைத் திட்டத்தை, தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
விற்பனை இடங்கள்:திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய தலைமைத் தபால் நிலையங்களிலும்; திருக்கழுக்குன்றம் உட்பட சில குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் கிடைக்கும்.
என்னென்ன மாடல்கள்?
இத் திட்டத்தின் கீழ், மூன்று வகையான சோலார்




விளக்குகள், விற்பனை செய்யப்படுகின்றன.
1) டி-லைட் எஸ் 250 (விலை: ரூ.1,699)* 50 ஆயிரம் மணி நேரம் எரியக்கூடியது.
* ஒரு வருடம் உத்தரவாதம்.*அலைபேசி, 1.3 வாட் திறன் கொண்ட, "பாலிகிரிஸ்டலின்' சோலார் தகடையும் சார்ஜ்செய்யலாம்.
*சி.எப்.எல்., பல்புகளை காட்டிலும், 30 - 50 சதவீதம், அதிக வெளிச்சத் திறன் உடையது.
2) டி-லைட் எஸ்10 (விலை: ரூ.549)
*ஆறு மாதம் உத்தரவாதம்.
* எளிதில் உடையாதவாறு, ஏ.பி.எஸ்., பிளாஸ்டில் வடிவமைக்கப் பட்டது.
*அதிகபட்சம், 8 - 10 மணி நேரம் எரியக் கூடியது.
*இரவில், ஒளியை பரவலாக பரவச் செய்யும் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப் பட்டது.
3) டி-லைட் எஸ்1 (விலை: ரூ.399)
* ஆறு மாதம் உத்தரவாதம் கொண்டது.
இந்த மூன்று மாடல்களில், 549 ரூபாய் விலை கொண்ட மின் விளக்குகள், அதிகளவில் விற்பனையாகி உள்ளன.
- பா.சேதுராமன் -

நன்றி தினமலர் 

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2