கட்டண உயர்வும் கலங்கும் மக்களும்!


கட்டண உயர்வும் கலங்கும் மக்களும்!

ஜெயா அரசு பஸ் கட்டணத்தையும் பால் கட்டணத்தையும் உயர்த்தியதும் உடனடியாக ஆதரவாக ஓர் பதிவிட்டேன்! அதற்கு பிராயசித்தமாக ஒர் பதிவு இது! இப்பொழுதும் எனது கருத்தில் மாற்றமில்லைதான் கட்டண உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்தான்! விலைவாசி அசுர வேகத்தில் ஏறிவரும் வேளையில் பொதுத்துறை நிறுவனங்கள் கடனில் மூழ்கும் இந்த நிலையில்தான் கட்டண உயர்வு மக்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது!
    இந்த சுமை மக்களுக்கு பழகிப் போன ஒன்றுதான் என்றாலும் தாங்க கூடிய அளவில் இருக்கிறதா என்று சற்று சிந்தித்து பார்த்திருக்கலாம் அம்மா! அம்மா என்று பெயரிருந்தால் போதுமா? அந்த பெயரின் அர்த்தம் கருணை அல்லவா? எதையும் தடாலடியாக தைரியமாக அணுகுவது என்பது உங்கள் பலமாக நீங்கள் கருதினாலும் அதுவே உங்கள் பலவீனமாக அமைந்து விடுகிறது!
    காரிலும் இரு சக்கர வாகனங்களிலும் பயணிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு சுமையாக தெரிய வாய்ப்பில்லை! நானும் ஒரு இரு சக்கர வாகனன் என்ற முறையில் பெட்ரோல் விலை மாதத்திற்கு ஒரு முறை ஏறும் போதெல்லாம் புலம்பித் தீர்த்துவிட்டு சொகுசு பயணத்தை விட முடியாது தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்! ஆனால் பேருந்து இது ஏழைகளின் போக்குவரத்து சாதனம் அல்லவா? அதனால் தானே பொதுத்துறை நிறுவனமாயிருக்கிறது! இல்லையென்றால் தனியாருக்கு தாரை வார்த்திருக்கலாமே?
    திடீரென முன்னறிவிப்பில்லாமல் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி கலங்க வைத்துவிட்டது தமிழக அரசு. பத்து ஆண்டுகளாக உயர்த்தவில்லை சரி ஒத்துக் கொள்கிறோம்! அதற்காக பத்து மடங்காக உயர்த்தினால் எப்படி இதுதான் இப்பொழுது மக்களின் கேள்வி? உயர்த்துங்கள் சுமக்க நாங்க ரெடி ஆனால் எவ்வளவு சுமக்க முடியுமோ அவ்வளவுதானே சுமக்க முடியும்? அளவுக்கு மீறி பாரம் ஏற்றினால் அச்சு முறிந்து போகாதா? என்கிறார்கள் மக்கள்?
   இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை அரசு? எங்களுக்கு கலெக்சன் பேட்டா உயர்த்தி தரவில்லை என்று டிரைவர்களும் கண்டக்டர்களும் வேறு இப்போது களத்தில் குதித்து உள்ளனர்.
   சென்னை மாநகரில் 3200 பேருந்துகள் ஓடுகின்றனவாம்! அதில் வெறும் எண்ணூறு பேருந்துகள் மட்டுமே சாதாரண பேருந்துகள் இந்த பேருந்துகளின் தான் சாதாரண கட்டணம் வசூலிக்க படுகிறது. எல்.எஸ்.எஸ். பிபி பேருந்துகள் நீக்கப்பட்டு விட்டன. ஏழுவகை இப்போது நான்கு வகையாக பிரிக்கப்பட்டு கட்டணக் கொள்ளை அடிக்கப் படுகிறது!
    சாதாரணபேருந்தை விட எக்ஸ்பிரஸ்களில் ஒன்றறை மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது டீலக்ஸ்களில் சொல்லவே வேண்டாம். சாதாரணபேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க படவேண்டும். மக்களில் சிலர்தான் சொகுசை எதிர்பார்க்கின்றனர். அவர்கள் பேருந்துகளை நாடுவது இல்லை! தினமும் பஸ்களில் பயணிப்பவர்கள் நடுத்தர மக்களும் ஏழைகளும் தான்! அவர்கள் இந்த உயர்வை எப்படி தாங்குவார்கள் என்று சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும். நான்கு ரூபாய் கட்டணம் 11 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது சென்றுவர எட்டு ரூபாய் இருந்தாலே போது மானதாக இருந்தது இன்று போகவே கூடுதலாக ஏழு ரூபாய் தேவைப்பட்டால் எப்படி சமாளிப்பார்கள்?
     பாரத்தை ஏற்றாமல் சுமையாக ஏற்றுங்கள் ஒரெ மொத்தமாக கட்டணத்தை திணிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக திணியுங்கள்! இந்த கட்டண உயர்வுகளால் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் பொலிவு பெற்று விடுமா? கட்டாயமாக இல்லை? இப்போதே கமிசன் உயர்த்தி கொடி பிடிப்பவர்கள் சம்பளம் உயர்த்த கோருவார்கள் அடுத்து அடுத்து ஊழியர்கள் களத்தில் குதித்து கொண்டேதான் இருப்பார்கள் போதிய நிர்வாக திறமை அற்றவர்கள் இந்த துறைகளில் ஊடுருவியதன் காரணமாகவே இந்த துறைகள் நசித்து போயுள்ளன. சுயலாபம் கருதி ஊழல் மிகுந்த இந்த நிறுவனங்கள் சீரடைய வேண்டுமானால் அடி மட்டத்திலிருந்து மாற்றம் தேவை அதை செய்ய தயாராக உள்ளதா அரசு?
பத்து ஆண்டுகளாக ஒரே கட்டணம் செலுத்தி பழகியவர்களை திடீரென கட்டணங்களை உயர்த்தி முழிபிதுங்க செய்துவிட்ட அரசு சற்றே சிந்தித்து கட்டண விகிதங்களை சற்றே மாற்றி அமைத்து குறைத்து ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்.
  பால் என்றதும் தான் பால் விலையும் ஞாபகம் வருகிறது! இதிலும் அதிகாரிகளின் பேச்சை கேட்டு கொள்முதல் விலைகுறைவாகவும் விற்பனைவிலை அதிகமாகவும் உயர்த்தி அட்டூழியம் செய்துள்ளது அரசு. பால் அத்தியாவசிய பொருள் இதில் லிட்டருக்கு ஆறேகால் ரூபாய் உயர்த்தி அடி வயிற்றில் அடித்துவிட்டது இந்த அரசு. பால் வற்றிப் போன தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம்பி இருந்தது ஆவினைத் தான்.
  ஆனால் அதுவும் இப்படி ஏறிப் போக தலையில் துண்டு விரித்துக் கொண்டு முடங்கிப் போயுள்ளனர் மக்கள்! பலபேரின் கூலிகள் உயர்ந்துள்ளது நியாயமே ஆனால் அதற்கேற்ப விலைவாசியும் உயர்ந்து அல்லவா நிற்கிறது? இலவசங்களை கொடுத்து விலைவாசியை ஏற்றுவது எந்த விதத்தில் நியாயம்?
    உங்கள் பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் மூழ்கடிக்க வேண்டாம் அதே சமயத்தில் எங்கள் வாழ்க்கையையும் குழி தோண்டி புதைக்க வேண்டாம் என்பதுதான் இன்று மக்களின் கோரிக்கை! இது முதல்வரின் காதுகளில் விழுமா? இல்லை இதற்கும் கோர்ட்தான் தீர்ப்பளிக்குமா? என்பது போக போகத் தெரியும்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!