மழைப் பொழிவு குறித்து குழப்பமான தகவல்களைத் தரும் வானிலை மையம்-மக்கள் கடுப்பு

சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும், கொளுத்தும் வெயில் காலத்திலும் ரமணனைத்தான் மக்கள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.

அவர் கூறப் போவது என்ன என்பதை விட, அவர் சொல்வதைப் பொறுத்து லீவு போடலாமா, வேண்டாமா என்ற எண்ணம்தான் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? பெரும்பாலும் ரமணன் (இங்கு ரமணன் என்பது சென்னை வானிலை ஆய்வு மையம் என்றும் கொள்ளலாம்) சொல்வது நடப்பதில்லை என்பது மக்களின் குறையாக உள்ளது.

வரும் 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கன மழை இருக்கலாம் என்பதுதான் ரமணனின் டிரேட் மார்க் பேச்சு. இந்த வார்த்தைத் தொடர்களில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. ஆனால் அவர் மழை பெய்யும் என்று சொன்னால் மழை பெய்வதில்லை, இன்று மேகமூட்டமாக இருக்கும் என்றால் அன்றுதான் மழை கொட்டித் தீர்த்து வெள்ளக்காடாகும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

சென்னை வானிலை மையம் பெரும்பாலும் தெரிவிக்கும் வானிலை முன்னறிவுப்புகள் மகா குழப்பமாகவே இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். இன்று மழை பெய்யும் என்று ரமணன் சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் அன்று பார்த்து வெயில் வறுத்தெடுக்கும். அதேபோல இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை என்று அவர் சொன்னால் கண்டிப்பாக கையில் குடையுடன்தான் கிளம்ப வேண்டும்.இல்லாவிட்டால் அடை மழையில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்கிறார்கள் மக்கள்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துல்லியம் அந்த அளவுக்கு படு 'சிறப்பாக' உள்ளது. இந்த இடத்தில் இன்று மழை பெய்யும் என்று மேற்கத்திய நாடுகள் பலவற்றில் சரியாக கணித்துக் கூறுகிறார்கள். மழை எப்போது தொடங்கும், எங்கு லேசாக பெய்யும், எங்கு அடர்த்தியாக பெய்யும் என்பதைக் கூட படு துல்லியமாக தெரிவிக்க முடிகிறது மேற்கத்திய நாடுகளில். ஆனால் தமிழகத்தில்தான், தமிழகத்தில் என்றில்லை, இந்தியாவில்தான் இந்த துல்லியத்தைக் காண முடியவில்லை.

பொத்தாம் பொதுவாக வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், ஓரிரு உள்புற மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. சில இடங்களில் மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்று கூறினால் போதாது, துல்லியமாக அதைக் கணித்துக் கூற வேண்டும். அப்போதுதான் மக்களுக்குக் குழப்பம் ஏற்படாது என்று மக்கள் கூறுகிறார்கள்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மேக மூட்டமாக இருக்கும் என்றும் அது கூறியிருந்தது. ஆனால் சென்னையில் இன்று காலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. அதுவும் காலையில் கன மழை பெய்ததால் மக்கள் பெரும் சிரமப்பட்டு விட்டனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத்தான் பெரும் கஷ்டமாகி விட்டது. எப்படி பிள்ளைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு போவது என்பதில் மக்களுக்குக் குழப்பமாகி விட்டது.

சென்னையில் மழை பெய்யும் என்று பெரிதாக வானிலை மையம் சொல்லவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. குறைந்த காற்றழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், எந்தப் பகுதியில் மழை பெய்யும், எங்கு கன மழை இருக்கும் என்பதை துல்லியமாக சொல்ல வேண்டாமா என்று மக்கள் குறை கூறுகிறார்கள்.

இன்று மழை பெய்யும் என்றால் பெய்ய வேண்டும். இல்லாவிட்டால் சொல்லக் கூடாது. அப்படிச் சொல்வதாக இருந்தால் துல்லியமாக கணித்துக் கூற வேண்டும்.இதுதான் எங்களின் ஒரே எதிர்பார்ப்பு என்பது மக்களின் கருத்து. அதற்கேற்ப நமது வானிலை மையத்தை தரம் உயர்த்தி, துல்லியமான கணிப்புகளை வெளியிடும் வகையில் மாற்ற வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

மாறாக, வடிவேலு படத்தில் வருவது போல நடு விரலைப் பிடித்தால் மழை பெய்யும், ஆள்காட்டி விரலைப் பிடித்தால் பெய்யாது என்ற ரேஞ்சுக்கு பேசிக் கொண்டிருந்தால் மக்கள் கேலி செய்து சிரிக்கவே செய்வார்கள் என்பதை வானிலை ஆய்வு மையம் உணர வேண்டும்.

இருப்பினும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலித்துள்ளது. மையம் சொன்னபடியே அங்கு கன மழை பெய்து, பள்ளிகளுக்கும் கூட லீவு விட்டுள்ளனர். ஆனால் சென்னையில்தான் கணிப்புக்கு மாறாக கன மழை பெய்து மக்கள் குறிப்பாக மாணவர்கள் அவதிப்பட நேரிட்டு விட்டது.

இனியாவது துல்லியமாக கணிக்க முயற்சிக்கலாமே?

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2