நூலகத்தை இடமாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பு! - தமிழறிஞர்கள்

 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நூலகத்தை ஜெயலலிதா இடம்மாற்றியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என செவ்வாய்கிழமையன்று முதல்வர் ஜெயல்லிதா அறிவித்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் டிபிஐ வளாகத்திற்கு மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சியினரும் எழுத்தாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் அஇஅதிமுக அரசு அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுவதாக குற்றம் சாட்டினர்.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது.

நூலகத்திற்கு இடையூறு

டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது.

எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பாகும் என தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், சிலம்பொலி சு. செல்லப்பன், க.ப. அறவாணன், பொன். கோதண்டராமன், மு.பி. பாலசுப்பிரமணியன், இரா. குமாரவேலன், மு. தங்கராசு, தி. இராசகோபாலன், பா. வளன் அரசு, இராம. குருநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை :

அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அண்ணாவுக்குச் செய்யும் அவமதிப்பாகும். மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் அவற்றின் தொடர்ச்சி அறுந்து போகாமல் வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர மாற்றும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அப்படி மாற்றிக் கொண்ட போனால் வளர்ச்சி இலக்கை எட்ட முடியாமல் போகும். இந்தோனேசியா போன்ற நாடுகளில் இப்படிப்பட்ட மரபுகள் பின்பற்றப்படுகின்றன.

ரூ. 200 கோடியில் நூலகத்துக்கு என்றே வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்ற நினைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல, என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நன்றி தட்ஸ் தமிழ்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!