மணியை மாற்றிய மகாத்மா! பாப்பா மலர்!

மணியை மாற்றிய மகாத்மா!

அன்பார்ந்த மாணவர்களே நமது பள்ளியில் சுதந்திர தின விழாவையோட்டி ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்த உள்ளோம் திறமை உள்ள ஓவியம் வரையத்தெரிந்த மாணவர்களும் தத்தமது ஓவியங்களையும் கண்காட்சியில் வைக்கலாம். சிறந்த ஓவியத்துக்கு பரிசு உண்டு. பள்ளி ப்ரேயரில் அறிவித்தார் தலைமை ஆசிரியர்.
   ஓவியத்திறமை உள்ள மாணவர்கள் தத்தமது கைத்திறமையை காட்டி படம் வரைய ஆரம்பித்தார்கள். கண்காட்சியில் வைப்பதற்காக, அதில் மணியும் ஒருவன். அவன் சுமாராக படம் வரைவான். கண்காட்சிக்காக சில படங்களை வரைந்தான்.ஆனால் ஒன்றுமே அவனுக்குத் திருப்தி அளிக்க வில்லை. கண்காட்சியில் எப்படியும் பரிசினை பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி அவனுள் பிறந்தது.
மீண்டும் படங்களை வரைய ஆரம்பித்தான் ஆனால் எதுவுமே அவனுக்கு பிடிக்க வில்லை.
    அப்போது அவனுக்கு ஓவியர் விநாயகம் ஞாபகத்திற்கு வந்தார் அவர் ஒரு சிறந்த ஓவியர். ஆனால் வறுமையின் காரணமாகத் தெருவில் படம் வரைந்து அதற்கு கிடைக்கும் காசைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார். மணியும் எப்போதாவது அவரது படங்களைப் பார்த்துவிட்டு தன் கையில் கிடைத்த காசை தருவதுண்டு.
அந்த பழக்கத்தில் அவரை சந்தித்த மணி தான் ஐம்பது ரூபாய் தருவதாகவும் சுதந்திர தினத்திற்காக அழகான படம் ஒன்று வரைந்து தருமாறு கேட்டுக் கொண்டான் அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு வரைந்து கொடுத்தார்.
  விநாயகம் வரைந்த அப்படம் பாரதமாதா கையில் கொடியேந்தி நிற்க இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் இன பேதமின்றி கைகோர்த்து நிற்பதாக அழகாக இருந்தது ஐம்பது ரூபாய் கொடுத்து அதை பெற்றுக் கொண்ட மணி இனி எனக்கெ பரிசு என்று பெருமிதப் பட்டான். ஆனால் அவனது மனசாட்சி அவனை இடித்துரைத்தது. மணி பரிசுக்காக மற்றவர் படைப்பை உன் படைப்பென்று கூறலாமா?நான் தான் காசு கொடுத்து வாங்கி விட்டேனே என்று சமாதானப் படுத்திக் கொண்டான் மணி.
   கண்காட்சியிலும் அப்படத்தை வைத்துவிட்டான். எல்லோரும் அவனைப் பாராட்டி உன் படத்திற்குத்தான் பரிசு என்று கூறியபோது அவனுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது..
  கொடியேற்றி முடித்ததும் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் ஒருவர் பேசினார். அன்பார்ந்த குழந்தைகளே! நான் உங்களுக்கு தேசப்பிதாவின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை கூறுகிறேன். சிறுவயதில் அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது பள்ளிக்கு ஆய்வாளர் வந்தார். அவர் காந்தியை ‘கெட்டில்’ என்ற ஆங்கில வார்த்தையை எழுதும்படி கூறினார். காந்திக்கு அதற்கு ‘ஸ்பெல்லிங்க்’ தெரியவில்லை. ஆசிரியர் பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதும் படி சைகை செய்தார். ஆனால் காந்தி மறுத்துவிட்டார்.
   மற்றவனை பார்த்து காந்தி எழுதி இருக்கலாம் ஆனால் மறுத்தார் ஏன்? தமக்குச் சொந்தமில்லாததை தம்முடையது என்று சொல்ல அவரது மனசாட்சி மறுத்தது. அதனாலே அவர் உலக உத்தமராக உயர்ந்தார். இவ்வாறு அவர் சொல்லிக்கொண்டே போக மணியின் மனம் கூசியது.
  காந்தி பக்கத்துப் பையனை பார்த்து எழுதவே கூசினார். ஆனால் நானோ மற்றவரின் பொருளை எனது என்று சொந்தம் கொண்டாடுகிறேனே! நானும் ஒரு மனிதனா? அவன் தலைகுனிந்தான்.
  ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசு மணி! என்று அறிவிப்பு முழங்க, மணி, சார் அந்த படத்த நான் வரையலை! எனக்கு பரிசு வேண்டாம் என்றான். என்னப்பா சொல்றே? ஆசிரியர் கேட்க நடந்த அனைத்தையும் கூறினான் மணி.
    என்னை மன்னிச்சிடுங்க சார்! பரிசுக்கு நான் தகுதியானவன் இல்லை. இனி இவ்வாறு செய்யமாட்டேன் என்றான் கண்ணீருடன்!

   மணி நீ கண்டிப்பா பரிசுக்குத் தகுதியானவன் தான்! இத்தனை பேர் முன்னால நீ உண்மையை ஒத்துகிட்டு உயர்ந்தவன்னு நிரூபிச்சு இருக்கே! படம் வரைந்தவருக்கு கட்டாயம் பரிசு உண்டு அது போல உண்மையை ஒத்துக்க ஒரு தைரியம் வேண்டும் . அந்த தைரியம் உன்கிட்ட இருக்கு! திருந்திய உனக்கும் பரிசு உண்டு என்றார் தலைமை ஆசிரியர்.
 மணி கண்ணீருடன் அவர் காலில் விழுந்தான். அங்கே போட்டோவில் மகாத்மா புன்னகை சிந்தியபடி அவனை ஆசிர்வதித்தார்.
  வாய்மையே வெல்லும்!


அறவுரை

நாலடியார்

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி  வாளர் இடைப்புக்கு – மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே  இராஅது
உரைப்பினும் நாய் குரைத்தற்று
       ---சமண முனிவர்கள்

விளக்கம்| கல்வியறிவு இல்லாத ஒருவன் கற்றோர் கூடிய அவையில் புகுந்து ஏதும் பேசாது இருப்பானாயின் நாய் ஒன்று சும்மா இருப்பது போலாகும் அவன் ஏதாகிலும் ஒன்றை பேசினாலும் அது நாய் குரைத்ததை போன்றதாகும்.

உங்களுக்குத் தெரியுமா?
 
1500 ஆண்டுகள் பசுமையாக வாழும் மரம் ஓக்.

தங்கள் வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

  1. சிறுவர்களுக்கான படைப்புலகம் இருக்க இருக்கச் சுருங்கி வரும் இந்நாளில், இணையம் வழியே சிறுவர்களுக்கு இலக்கியத்தை வழங்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் என்னுடைய உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!

    கதை நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஓவியர் ஒருவர் வரைந்த படத்திற்கும் சிறுவன் வரைந்த படத்திற்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களாகவா இருக்கிறார்கள் நம் ஆசிரியப் பெருமக்கள்?...

    மேலும், கதையில் கதை மாந்தர்கள் பேசும் இடங்களில் பேச்சுத் தமிழையே பயன்படுத்தினால், படிப்போருக்கு அந்நியத் தன்மை ஏற்படாமல் இருக்கும். இதைக் குறையாகச் சொல்லவில்லை என்னுடைய ஒரு சிறு ஆலோசனையாகத்தான் முன்வைக்கிறேன்.

    அடுத்து, கதையின் தொடக்கத்தில் 'பிரேயர்' என்று ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளீர்கள். கடவுள் வாழ்த்து என்றே குறிப்பிட்டிருக்கலாமே! கதை மாந்தர்கள் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் தூய தமிழையே பயன்படுத்துவது நல்லது என்பது என்னுடைய ஆலோசனையாக இல்லாமல் ஒரு வேண்டுகோளாகவே கேட்டுக் கொள்கிறேன்!

    தொடரட்டும் உங்கள் சிறுவர் இலக்கியச் சேவை!

    நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  2. உண்மையிலும் உண்மை. உண்மையை நாலு பேருக்கு
    முன்பு ஒத்துக்கொள்ள ஒரு தைரியம்வேனும்தான்.
    அந்தப்பையனும் உயர்ந்தவந்தான்.

    ReplyDelete
  3. இ.பு.ஞானப்பிரகாசன் said...

    சிறுவர்களுக்கான படைப்புலகம் இருக்க இருக்கச் சுருங்கி வரும் இந்நாளில், இணையம் வழியே சிறுவர்களுக்கு இலக்கியத்தை வழங்கும் உங்கள் முயற்சிக்கு முதலில் என்னுடைய உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்!

    நன்றி ஐயா! தங்கள் பாராட்டிற்கும் ஆலோசனைகளுக்கும்!

    ReplyDelete
  4. Lakshmi said...

    உண்மையிலும் உண்மை. உண்மையை நாலு பேருக்கு
    முன்பு ஒத்துக்கொள்ள ஒரு தைரியம்வேனும்தான்.
    அந்தப்பையனும் உயர்ந்தவந்தான்.
    தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!