வருகிறது மீண்டும் காவிரி பிரச்சணை!


தமிழக மின் பிரச்னைக்கு முக்கிய தீர்வாக அமையும், குந்தா நீரேற்று மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது. குந்தா நதி, காவிரியின் கிளை நதிக்கும், கிளை நதி என்பதால், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என, மத்திய அரசு காரணம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா நதியில், அவலாஞ்சி-எமரால்டு மற்றும் போர்த்திமந்து அணைகளுக்கு மத்தியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில், 500 மெகாவாட் மின்திறனில், 4 யூனிட்டுகள் கொண்ட நீரேற்று மின்நிலையம் அமைக்க, தமிழக மின்வாரியம் திட்டமிட்டது. இதற்கான அனைத்து ஆய்வுகளும், 2007ல் முடிந்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்காக விண்ணப்பித்த போது, குந்தா திட்டம், அணைகளில் மேற்கொள்வதால், மத்திய நதிநீர் ஆணைய அனுமதி வேண்டுமென மத்திய அரசு கூறியது. இதுகுறித்து ஆய்வுசெய்த மத்திய நதிநீர் ஆணையம், குந்தா திட்டம், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை எனக் கூறி, அனுமதி மறுத்ததால், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: குந்தா நீரேற்று மின்நிலையம், தமிழக மின் பிரச்னைக்கு தீர்வு தரும் திட்டம். இதில், மின்சாரத்தைச் சேமித்து வைத்து, பயன்படுத்த முடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்ளவுள்ளோம். குந்தா நதி, நீலகிரி மலையில் உற்பத்தியாகி ஓடி, காவிரியின் கிளை நதியான பவானியில் கலக்கிறது. காவிரியின் கிளை நதிக்கும் கிளை நதியாக, குந்தா இருப்பதால், இது மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னை என, மத்திய நதிநீர் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. திட்டத்தை நிறைவேற்ற, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவை மாநிலங்களிடம் தடையில்லா அனுமதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமென, மத்திய நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, மூன்று மாநிலங்களுக்கும், பல முறை கடிதம் எழுதி விட்டோம். புதுவை மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது. மற்ற மாநிலங்கள், அனுமதி மறுத்து விட்டன.
மத்திய நதிநீர் ஆணையத்திற்கு, பல முறை கடிதங்களையும், விண்ணப்பங்களையும் அனுப்பி விட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்திற்கு, 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. காற்றாலைகளில், 6,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தாலும், அவற்றை பல நேரங்களில் பயன்படுத்த முடியவில்லை. அதுபோன்ற நேரங்களில், காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு, ஒரு அணையிலிருந்து, மேலே உள்ள அணைக்கு தண்ணீரை ஏற்றி, தேவைப்படும்போது, அந்தத் தண்ணீரை திறந்து விட்டு, மின்சாரம் தயாரிக்கலாம். இந்த முறைப்படி, ஏற்கனவே பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், கடம்பாரை நீரேற்று மின்நிலையம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதேபோன்ற திட்டத்தைத் தான், தற்போது குந்தா நீரேற்று மின் திட்டத்திலும் அமல்படுத்த உள்ளனர்.

இதில், சோகத்திலும் சோகம் என்னவென்றால், திட்டத்திற்கு அனுமதி தருவதாக மத்திய அரசு அறிவித்து, 2007ல் தமிழக அதிகாரிகளை டில்லிக்கு வரவழைத்தது. தமிழக மின்துறை அதிகாரிகள், அனுமதி வாங்கிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, "ஸ்வீட் பாக்ஸ்கள், பூங்கொத்துகள்' ஆர்டர் செய்து, விமானத்தில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னை என, அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழக மின்துறை அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தமிழகம் திரும்பினர்.
தற்போது, மாநிலங்களிடம் அனுமதி பெற்றாலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்ட பின்பே, அனுமதிக்க முடியும் என, மத்திய அரசு மறுத்து விட்டதாக, தமிழக எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சட்டசபையில் தீர்மானம்: தமிழகத்தின் பல்வேறு மின் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் அனுமதி மறுப்பு, அனுமதிக்கப்பட்ட நிலக்கரி வழங்காமை, நிதியுதவி தராதது, குந்தா மின்திட்டத்திற்கு புது வகையான காவிரி பிரச்னையை உருவாக்கியது என, மத்திய அரசு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. இதையொட்டி, மின் திட்டங்களுக்கான தடைகளை விலக்கக் கோரி, சட்டசபையில், மத்திய அரசை வலியுறுத்தி சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து, மின்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!