அரதப் பழசான அரசுப் பேருந்துகள்!



சென்னை:தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள், ஆண்டு தோறும், அதிக லாபத்தை ஈட்டும் நிலையில், அனைத்து வசதிகளையும் கொண்ட அரசு விரைவு பஸ்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. குறைகளைக் களைந்து, பயணிகள் வசதியை முறையாக நிறைவேற்றினால், அரசு பஸ்களும் அதிக லாபம் ஈட்டும்.தமிழகத்தில், மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் வகையில், கடந்த, 1975 முதல் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, பல்லவன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் துவக்கப்பட்டது.பின்னர், 1980ல் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. விரைவு பஸ்கள், 250 கி.மீ., தூரத்திற்கு மேல் இயக்கப்படுகின்றன.

பஸ்சின் இரு பகுதியிலும், அகலமான, வசதியான இரண்டு, இரண்டு இருக்கைகள், முறையானப் பராமரிப்பு, புஷ்பேக் போன்ற வசதிகள், பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. அதே காலகட்டத்தில், ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டாலும், திருவள்ளுவர் பஸ்களிலும், பயணிகள் ஆர்வமாக பயணித்தனர்.இந்த நிலையில், 1996ம் ஆண்டு முதல், திருவள்ளுவர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில், இயங்கி வருகிறது. அதுவரை பயணிகளை அதிகம் கவர்ந்த அரசு விரைவு பஸ்கள், அதன் பின்னர் "கழுதை தேய்ந்து கட்டெறும்பு' ஆன கதையாக மாறிவிட்டது.

ஆரம்பத்தில், 272 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, இதன் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. செமி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், "ஏசி' பஸ்கள் என நவீன(!) பஸ்கள் விட்டாலும், பராமரிப்பு மட்டும் அறவே கிடையாது. புதிதாக ஒரு பஸ் இயக்கப்பட்டால், அதன் பின்னர், பராமரிப்பு என்பது கண் துடைப்பு செயலாக உள்ளது.ஒரு "டிரிப்' முடிந்ததும், பணிமனைக்கு செல்லும் பஸ்களை, வெறுமனே "வாட்டர் வாஷ்' செய்து அனுப்பி விடுகின்றனர். பஸ்சில் பயணிப்பவர்கள், பஸ்களில் பான்பராக் போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்தி, அசுத்தப்படுத்தி விடுகின்றனர். அவற்றையும் சரியாக கழுவுவதில்லை.

பஸ்களின் பிரேக் கண்டிஷன், டயர்களின் நிலை போன்றவற்றை ஆராய்ந்து, சரிசெய்வதில்லை. பஸ்களின் சீட் கவர்களை மாற்றுவதில்லை. அவற்றை சுத்தம் செய்யாமல் விட்டு விடுவதால், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.ஆரம்பத்தில், அரசு பஸ்களில் ஆர்வமாக பயணித்தவர்கள், இப்போது அரசு பஸ் என்றாலே அலறியடித்து ஓடுகின்றனர். "ஏசி' பஸ்கள் நிலையை சொல்லவே வேண்டாம். "ஏசி'யையும் மீறி, துர்நாற்ற நெடி, பயணிகள் வயிற்றை குமட்ட வைக்கும்.

வசதி உண்டு; பராமரிப்பு...?இவ்வளவிற்கும், அரசு போக்குவரத்து கழகத்திற்கு, தமிழகம் முழுவதும் டெப்போக்கள், பஸ்களை பராமரிக்க மெக்கானிக்குகள், இன்ஜினியர்கள், அதிகாரிகள் பட்டாளம் உள்ளன. பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. ஊழியர்களுக்கு பல்லாயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்தும், அரசு விரைவு பஸ்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. உயர் அதிகாரிகள் இவற்றை கண்டும், காணாமல் இருப்பதால், விபத்துகளுக்கும் பஞ்சமில்லை.வசதி வாய்ப்புள்ளவர்கள், ஆம்னி பஸ்களுக்கு மாறினாலும், நடுத்தர வர்க்கத்தினர், வேறு வழியில்லாமல் அரசு விரைவு பஸ்களைத் தான் நாடுகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள், அவர்களையும் இழக்காமல், தக்க வைத்துக் கொள்ள, பஸ்களை முறையாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

நஷ்டத்திற்கு கட்டணம் உயர்த்தப்படாதது காரணமா?கூடுதல் கட்டணத்தை பொருட்படுத்தாமல், ஆம்னி பஸ்களில் பொதுமக்கள் பயணிப்பதற்கு, அவற்றில் வழங்கப்படும் பராமரிப்பும், தூய்மையும், சொகுசும் தான் காரணம். டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர்த்தப்படாததும், நஷ்டத்திற்கு ஒரு வகையில் காரணம் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களை, தனியார் பஸ்களைப் போல், பராமரித்து இயக்கினால் பொதுமக்கள், கட்டண உயர்வை பொருட்படுத்த மாட்டார்கள்.ஆம்னி பஸ்களின் தரத்திற்கு இயக்காவிட்டாலும், குறைந்த பட்சம் ஆரம்பத்தில் இயங்கிய, திருவள்ளுவர் போக்குவரத்து கழக தரத்திற்காவது இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும்.

பஸ்களில் துர்நாற்றம் வீசாமல், மூட்டை பூச்சிகள் வராமல், தூய்மையான சீட் கவர், கண்ணாடி ஸ்கிரீன்களை மாற்றி, தூய்மையாக இயக்கினாலே பயணிகள், மீண்டும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில், பயணிக்க விரும்பி வருவர்.
லாபத்தில் இயக்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்து, பெயர் கூற விரும்பாத, அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை, லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். பழைய பஸ்களை மாற்றி, புதிதாக பஸ்கள் விட திட்டமிட்டுள்ளோம்.
பஸ்கள் குறித்து, பயணிகள் அளிக்கும் புகார்களை கவனித்து, அவற்றை முறையாக பராமரித்து வருகிறோம். இனிவரும் காலங்களில், பயணிகள் விரும்பும் வகையில், பஸ்களை பராமரித்து இயக்குவோம்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
.
ஆம்னி பஸ்கள் ஆதிக்கம்:திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் இடத்தை, தற்போது, ஆம்னி பஸ்கள் பிடித்துக் கொண்டன. ஒரு "டிரிப்' முடிந்ததும், தினசரி பஸ்களை சுத்தம் செய்து, கண்ணாடி "ஸ்கிரீன்', "சீட்' கவர்களை மாற்றுகின்றனர். பஸ்களில் வாசனை "ஸ்பிரே' தெளித்து, அலங்கார விளக்குகளை எரிய விடுகின்றனர். "மக்கர்' ஆகாத "புஷ்பேக்' சீட்களால், அதிகக் கட்டணம் வாங்கினாலும், அது குறித்து கவலைப்படாமல், ஆம்னி பஸ்களில் பயணிக்க விரும்புகின்றனர்.கொடுத்த காசிற்கு சுகமான பயணம் என்பதால், யாரும் கூடுதல் கட்டணம் குறித்து கவலைப்படுவதில்லை. ரயில்களில் இடம் கிடைக்காவிட்டால், அவர்களது அடுத்த சாய்ஸ், ஆம்னி பஸ்கள் தான். பயணிகளின் நாடியை அறிந்து கொண்ட, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், செமி ஸ்லீப்பரில் இருந்து, படுக்கை வசதி, கழிவறை என, அதிநவீன வசதி கொண்ட பஸ்களை இயக்குகின்றனர்.

1,000 கோடி ரூபாய் நஷ்டம்:ஒருவர், ஒரு ஆண்டு முழுவதும், ஒரு ரூட்டில், ஆம்னி பஸ் இயக்கினால் அடுத்த ஆண்டே, பராமரிப்பு செலவு போக, மற்றொரு ஆம்னி பஸ் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அரசு பஸ்களோ, ஒரு ரூட்டில் ஒரு பஸ் இயங்கினால், அந்த பஸ், மறு ஆண்டே, காயலான் கடைக்கு போகும் அவலம் ஏற்படுகிறது.இதன் காரணமாக, அரசு பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து, நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சட்டசபையில் பேசிய, அப்போதைய போக்குவரத்து அமைச்சர் நேரு, ஆண்டு தோறும் அரசு விரைவு பஸ்கள், ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்தார். தற்போது, டீசல் விலை உயர்வு காரணமாக, நஷ்டம் மேலும், 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்து விட்டது.

கலக்குது கர்நாடகா...!கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை, அதிநவீன பஸ்களை இயக்கி வருகின்றன. மாநகர பஸ்களிலேயே புஷ்பேக் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கின்றன. அண்டை மாநிலங்கள் உட்பட, தொலைதூர பஸ்கள், ஆம்னி பஸ்களுக்கு இணையாக உள்ளன. அந்தளவிற்கு சுத்தமாகவும், நவீன வசதிகளாலும் அம்மாநில பஸ்கள் திகழ்கின்றன. ஆனால், தமிழகத்தில் இயக்கப்படும் அதிநவீன(!) சொகுசு பஸ்கள் நிலையோ, மிகவும் பரிதாபமாக உள்ளன. அண்டை மாநிலத்தில் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களுக்கு இணையாக இயக்கப்படும் நிலையில், அதே பராமரிப்பை நமது மாநிலத்தில் இயக்க முடியாதா? அல்லது இயக்க அதிகாரிகளுக்கு மனசில்லையா என்பதே அப்பாவி பயணிகளின் கேள்வி.
நன்றி தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

  1. ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்,ஊழல்.

    எப்படி லாபம் வரும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2