கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி
கல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் 27வது கிலோ மீட்டரில் காரனோடை பாலத்தை அடுத்திருப்பது பஞ்சேஷ்டி. பஞ்சேஷ்டிக்கு மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகு தலமான நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலம் குஸஸ்தலை நதிக்கும் ஆரண்ய நதிக்கும் இடையில் அமைந்த புண்யாரண்ய க்ஷேத்திரமாகும். முற்காலத்தில் நெல்லி மரங்கள் அடர்ந்து நெல்லிவனமாக இருந்த தலம் வாலி பூஜித்தமையால் வாலி வனம் என வழங்கப் பட்டது
இராஜராஜா சோழன் ஆட்சிக் காலத்தில் இது இகணைப்பாக்கம் என்று வழங்கப்பட்டது என்பது இவ்வூர் கிராம தேவதை கோயிலில் கிடைத்த கல்வெட்டு மூலம் அறிகிறோம். இகணன் என்றால் பிரம்மன்.இவ்வாலயத்தில் உள்ள விநாயகரை பிரம்மன் வழிபட்டகாரணமாக இகணைப் பாக்கம் என்று பெயர் பெற்றது ஒரு ஊர் வளர்ச்சி அடையும் போது கிராம நத்தமாக அழைக்கப் படும் இடத்தில் குடியிருப்புகள் தோன்றும் அது அவ்வூரின் நத்தம் என்று வழங்கப்படும் அது போல இகணைப்பாக்கத்து வளர்ச்சியில் நத்தம் பெரும் பங்காற்றி மூலப் பெயரான இகணைப்பாக்கம் மறைந்து போனது.
தல வரலாறு| ஓம் எனும் பிரணவப்பொருள் தெரியாததால் பிரம்மனின் தலையில் குட்டி சிறையில் அடைக்கிறார் பாலசுப்ரமணியன். அவ்வாறு பிரம்மா சிறைபட்ட இடம் ஆண்டார் குப்பம்.பின்னர் பிரம்மனுக்கு பிரணவம் உபதேசமாகி சிருஷ்டித் தொழிலை துவக்கினார். ஆனால் மனம் லயிக்கவில்லை. சிருஷ்டிக்க முடியவில்லை. காரியம் தடைபட கலங்கினார் பிரம்மா. தந்தையின் கவலையறிந்து கை கொடுக்க முன் வந்தார் நாரதர். அங்கே தகப்பனுக்கு உபதேசித்து தகப்பன் சாமி ஆனார் ஷண்முகர். இங்கே பிரம்ம குமாரன் நாரதர், நான்முகனுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஐயனே! முழு முதற்கடவுளான கணபதியை மறந்தீர்,காரியம் தடைபட்டது. அவரை வணங்கி படைப்புத் தொழிலை தொடங்குவீர்! நீர் சிறைபட்ட இடத்திற்கு தென் மேற்கே நெல்லி வனத்தில் உள்ள சிவாலயத்தில் தங்கி கணபதியை குறித்து தவம் செய்வீராக! ஆனைமுகன் அருள் கிடைக்கும் என்று கூறியருளினார்.பிரம்மாவும் நெல்லி வனம் வந்து இங்கே கணபதியை குறித்து தவம் செய்தார். கணபதி காட்சி கொடுத்து பிரம்மனுக்கு காரியசித்தி அளித்தார். அதுமுதல் கணபதியின் நாமம் ஸ்ரீகாரியசித்தி கணபதி ஆகிற்று.பிரம்மனுக்கு சித்தி அளித்த இக்கணபதியை வழிபடுவோர் காரியங்களும் சித்தியாகும் என்ற வரமும் தந்தருளினார் காரியசித்தி கணபதி.
ஸ்ரீ காரிய சித்தி உருவ அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது.அபூர்வமானது. பொதுவாக கணபதி பீடம் பெருத்து உடல் அகன்று பாசம் அங்குசத்துடன் காணப்படுவார். ஆனால் இங்குள்ள ஸ்ரீகாரிய சித்தி கணபதி அடிப்பீடம் குறுகி இடையில் சற்று அகன்று நுனியில் கூர்மையாகவும் தாமரை மொட்டைப் போல் அமைந்துள்ளது. மேல் வலக்கையில் மழுவையும் மேல் இடக்கையில் ருத்திராட்சமும் கீழ் வலக்கையில் தந்தமும் கீழ் இடக்கையில் மோதகமும் ஏந்தி முக்கண்ணுடன் தாமரை பீடத்தின் மீது அமர்ந்து தொந்தியின்றி காணப்படுகிறார். இத்தகைய தோற்றத்துடன் கணபதி வேறு எங்கும் இல்லை.
திருமணத் தடை பரிகார ஸ்தலம்| ஸ்ரீகாரிய சித்தி கணபதிக்கு ரோஜா மாலை சாற்றி பச்சரிசியும் வெல்லமும் தலா 1கிலோ படைத்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சணை வழிபாடு செய்து சூரை தேங்காய் செலுத்தி வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும்
இவ்வாலயத்தில் மூலவரான வாலீஸ்வரரரை வழிபட ராகு கேது தோஷங்கள் நீங்கும். முருகரையும் அவர் எதிரே உள்ள மகாவிஷ்ணுவையும் சங்கு தீபம் ஏற்றி தயிர் சாதம் நிவேதனம் செய்து அர்ச்சனை வழிபாடு செய்ய மாமியார் மருமகள் பிரச்சனை நீங்கும்.
அர்த்தநாரிஸ்வாரராக உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். பிரதோஷ வழிபாடு செய்தால் சுருட்டபள்ளி பள்ளிகொண்டீஸ்வரரை வழிபாடு செய்வதின் மும்மடங்கு பலன் ஏற்படும்.
இன்னும் பலச் சிறப்புகள் கொண்ட இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்து சுமார் 70 வருடங்கள் ஆகிவிட்டதால் கிராம மக்களும் ஆலய அர்ச்சகரும் ஆன்மீக அன்பர்களும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து திருப்பனிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஆலயத்தை நீங்களும் ஒருமுறை தரிசித்து இறைவன் திருப்பணிகளில் ஈடுபட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் பெறுவீராக!
ஆலயம் செல்லும் வழி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் கும்முடி பூண்டி பொன்னேரி வழியாக செல்லும் பேருந்துகளில் பஞ்சேஷ்டி எனும் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் அங்கிருந்து 2கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. பஸ் ஆட்டோ வசதி இல்லை.
பஸ் ரூட் 132,133,131,90, 58சி,113, 112ஏ பி,
செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் மாநகர பேருந்துகள் 557,558ஏ,பி,சி,533,536,547,
ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து ஆலயத்திற்கு ஆட்டோ வசதி உண்டு கட்டணம் ரூ 100.
நத்தம் வாருங்கள்! நான்முகனுக்கு அருளிய கணபதியின் பாதம் பணியுங்கள்!வாழ்வில் எல்லா வளமும் பெருங்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!
Comments
Post a Comment