அம்மா ஏன் எழுப்பலே? பாப்பா மலர்!

அம்மா ஏன் எழுப்பலே?

காலை 8.மணி, பள்ளிக்கு குழந்தைகளும் அலுவலகத்திற்கு பெற்றோர்களும் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருக்கும் நேரம். வேணி கத்தினாள். “அம்மா என் டிபன் பாக்ஸ் ரெடியா?” அம்மா அடுக்களையில் இருந்தே குரல் கொடுத்தாள். “வேணி இரண்டே நிமிஷம் இதோ ரெடி பண்ணிடறேன்.”
    “அம்மா எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு நீ எப்ப டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி எப்ப தலைவாரி நான் எப்ப ஸ்கூலுக்கு போறது? எனக்கு நீ ஒன்னும் செய்ய வேண்டாம் நான் கிளம்பறேன்” கத்தினாள் வேணி.
   ‘ஏய் வேணி நீ என்ன நினைச்சுண்டிருக்கே மனசுல? நான் ஒருத்தி எத்தனை வேலை செய்யறது நீ கூட மாட உதவறயா? நானே தானே எல்லா வேலையும் தலையில கட்டிண்டு செய்யறேன்.” “உன்னை காலையில எழுப்பறதுல இருந்து புத்தகம் ரெடி பண்ணி குளிக்க தண்ணி எடுத்துவச்சு தலைவாரி டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி அனுப்பறவரைக்கும் எல்லாம் நானே செய்யறேன்.” இதுல ஒரு வேலையாவது நீயா செஞ்சுக்கறியா? உன் வேலையைக் கூட நான் தான் செய்ய வேண்டியிருக்கு நான் என்ன மிசினா? கொஞ்ச நேரம் ஆனா பொறுத்துக்க கூடாதா?  என்று கேட்டபடி டிபன் பாக்ஸுடன் வந்தாள் வேணியின் தாய் கமலா.
    வேணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “என்னம்மா நீ பேசிகிட்டே போறே? நாளையில இருந்து நீ என் வேலை எதுவும் செய்ய வேண்டாம் எல்லாம் நானே பார்த்துக்கறேன். பெரிசா பீத்திக்கற?” என்றபடி சூளுரைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள் வேணி.
    அப்படியா சங்கதி! நாலைக்கு ஒரு நாள் உன்னை திண்டாட விட்டால் உனக்கு அம்மாவின் அருமை புரியும் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள் கமலா.
    மறுநாள் காலை அதிகாலையில் கமலா வேணியினை எழுப்பாமல் விடவே ஏழு மணிவரை தூங்கியவள் அவசர அவசரமா எழுந்து வந்து அம்மா ஏன் எழுப்பலை? என்று கத்தினாள். என்னம்மா சவால் விட்டது மறந்து போச்சா? நீ நேத்து யாரும் என்னோட வேலையை செய்ய வேண்டாம் நானே பாத்துக்கறேன்னு சொன்னதா ஞாபகம் என்று குத்தினாள் தாய்.
    தாயை முறைத்தவாறே பல்தேய்த்து காபியை தேடினாள். அம்மா காபி கொடு! “நீயே போட்டு குடி” என்று பதில் வரவே குளியலறைக்கு சென்றாள்.அங்கு வென்னீர் இல்லை. அம்மா ஏம்மா வென்னீர் போடலை? அது உன் வேலையாச்சே நீதான் போட்டுக்கணும் என்றூ பதில் வர நொந்து பச்சை தண்ணிரீல் குளித்து டிபன் சாப்பிட வந்தாள்.
   அம்மா டிபன் எடுத்து வை என்று நா வரை வந்ததை அடைக்கி கொண்டு இருந்த இட்லியை வாயில் போட்டுக்கொண்டு தானே தலை வார ஆரம்பித்தாள். சரியாக வகிடு எடுக்க முடியாமல் திணறி எப்படியோ வாரிக்கொண்டு நிமிர்ந்தாள் மணி 9ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அதுக்குள்ளே மணி ஆயிடுச்சா என்று இறைந்து கிடந்த புத்தகங்களை வாரிக்கொண்டு பள்ளிக்கு ஓடினாள் வேணி.
   பள்ளியில் அவளுக்கு ஒரு இடி காத்திருந்தது. ஒரு பாட வேளைக்குத்தேவையான நோட்டு எடுத்து வர மறந்திருந்தாள். எப்போதும் அம்மாதான் பாடவேளை பார்த்து புத்தகம் எடுத்து வைப்பாள் இன்றோ இவளே அவசர கதியில் எடுத்து வரவும் நோட்டை மறந்து விட்டு வெளியில் நின்றாள்.
   மதிய உணவும் எடுத்து வர மறந்து போகவே மற்ற பிள்ளைகள் கொடுத்த சிறு உணவை உண்டு மாலை பள்ளி விட்டு சோர்வாக வந்தாள் வேணி.
    இப்பொழுதுதான் அன்னையின் அருமை அவளுக்கு புரிந்தது இன்று ஒருநாளிலேயே இவ்வளவு மறந்துவிட்டு அவதிப் படுகிறோமோ தினம் தினம் நம்முடைய வேலைகளை அலுக்காமல் செய்யும் அம்மாவை அதட்டி மிரட்டுகிறோமே! தன் செயல் எவ்வளவு மோசமானது என்று வருந்தினாள். தாயின் முகத்தில் விழிக்கவும் வெட்கப்பட்டு  தலை குனிந்தவாறே தன்னுடைய அறைக்கு சென்று படுத்து விட்டாள் வேணி.
  கமலாவுக்கு மகளை படுத்தியது போதும் என்று தோன்றியது. சோர்வுடன் திரும்பிய மகளை பார்த்த தாயுள்ளம் பதறியது. கட்டாயம் மகள் திருந்தியிருப்பாள் மதிய உணவு கூட எடுத்து செல்ல வில்லையே என்று வருந்தியபடி மகளுக்கு பிடித்த மசால் தோசையை செய்து எடுத்துக் கொண்டு மகளின் அறைக்குள் நுழைந்தாள்.
  சோர்வுடன் படுத்துக் கிடந்த மகளின் கால்களில் இருந்த ஷூவை கழற்றினாள் கமலா. திடுக்கிட்ட எழுந்த வேணி தாயைக் கண்டதும் கண்ணில் நீர் மல்க அம்மா என்னை மன்னிச்சுடும்மா! இனி உன் கூட ஒத்தாசையா இருப்பேன் உன் அருமை இன்னிக்குத்தான் புரிஞ்சது என்று கூற ச்சீ அழாதே இந்தா முதல்ல இந்த தோசையை சாப்பிடு என்று தோசையை தந்த தாய் மகளை தேற்றினாள்.
  வேணி இப்பொழுதெல்லாம் தன் தாயை அதிகாரம் பண்ணுவதே இல்லை. தாய்க்கு வேலையில் உதவும் நல்ல பெண்ணாகிவிட்டாள்.


அறவுரை!

ஆசாரக்கோவை!

   நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும்
   இருந்தக்கால் ஏலாமை ஏகார் பெருந்தக்கார்
   சொல்லின் செவிக்கொடுத்து கேட்டீக மீட்டும்
   வினாவற்க சொல்லொழிந்தக் கால்.
                             -பெருவாயின் முள்ளியனார்.
விளக்கம்
      ஆசிரியர் முன் அடங்கியிருத்தல்,பாடம் கற்பிக்காதபோது சும்மா இருத்தல், ஆசிரியர் ஆணையில்லாமல் வெளியே எழுந்து போகாதிருத்தல்,ஆசிரியர் கூறுவதை காது கொடுத்து கேட்டல்,திரும்ப சொல்லுதல்,ஆசிரியர் சொல்லாத போது மீண்டும் கூறுமாறு வினவாமலிருத்தல், நல்ல மாணவர்களின் செயல்களாம்.

உங்களுக்குத் தெரியுமா?

மனித முகத்தில் உள்ள எலும்புகள் பதினான்கு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

  1. தாய் இல்லாத போது தான் தாயின் அருமை புரியும் சார் நீங்க ரொம்ப புரிய வச்சுட்டிங்க .........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2