அன்னா ஹசாரே கைது! நாடு முழுவதும் போராட்டங்கள்!


டெல்லி: வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் தொடங்கவிருந்த அன்னாவை மத்திய உள்துறையின் உத்தரவின் பேரில், டெல்லி காவல்துறை கைது செய்து சிறையில் போட்டு விட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அன்னா கைது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளையும், ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைக் கூட இந்த மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா என்ற கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

அன்னா கைது செய்யப்பட்ட விதமும் மக்களை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. அவரது கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தலைநகர் டெல்லியில் அலை அலையாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.அதேபோல நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு பேரணி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியினரும், பெரும் திரளானோரும் இணைந்து பேரணி நடத்தினர். நாயுடு அன்னா கைது குறித்துக் கூறுகையில், அமைதியான முறையில், ஜனநாயகமுறையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அராஜகமானது, சட்டவிரோதமானது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்

மேலும் அவர் கூறுகையில், அன்னா கைது செய்யப்பட்டதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசு என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்றார் கோபமாக.

லக்னோவில்

.பி. தலைநகர் லக்னோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினர்.

மகாராஷ்டிராவில்

அன்னாவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவிலும் போராட்டம் வெடித்துள்ளது. மாநிலம் முழுவதும் மறியல்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடந்து வருகின்றன.

ஹஸாரேவின் சொந்த ஊரான அகமது நகர் மாவட்டம் ராலேகான் சித்தியில் மக்கள் சாலைகளில்திரண்டு போராட்டத்தில் குதித்தனர். மேலும் கால்நடைகளுடனும் அவர்கள் சாலைமறியலில்ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அன்னாவின் நண்பரான 73 வயது தத்தா அவாரி கூறுகையில், ஒட்டுமொத்த கிராமும் இன்று பந்த் அனுசரிக்கிறது. நாங்கள் அன்னாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளோம் என்றார்.

மும்பையில் ஆங்காங்கு பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. அதில் ஈடுபட்டவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு மும்பையில், ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் மேதா பத்கர் கலந்து கொண்டார்.

புனேவில், போலீஸ் நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் கூட்டம் நடந்தது. அதேபோலநாசிக்கிலும் கண்டனப் பேரணி நடந்தது.

நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நிதீஷ் குமார், அர்ஜூன் முண்டா கண்டனம்

பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன் முண்டா ஆகியோர் அன்னா கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் போராட்டம்

தமிழகத்திலும் ஆங்காங்கு ஹஸாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்துள்ளன. இருப்பினும் வட மாநிலங்களைப் போல பெரிய அளவில் நடைபெறவில்லை.

மதுரையில் 50க்கும் மேற்பட்டோர் கூடி உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையிலும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதேபோல கோவை உள்ளிட்ட சில இடங்களிலும் ஹஸாரே ஆதரவாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் சார்பில் அமைதி வழியில் போராட்டங்கள் நடந்துள்ளன.

நாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

இதற்கிடையே அன்னா கைதுக்குக் கண்டனம் தெரிவித்து நாளை நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த அன்னா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து வக்கீலும், அன்னா அணியின் முக்கியஉறுப்பினர்களில் ஒருவருமான பிரஷாந்த் பூஷன் கூறுகையில், இந்தியா கேட்டிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி நாளை மாபெரும் பேரணி நடத்தவுள்ளோம். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். மக்கள் அனைவரும் திரண்டு வந்து இதில் பங்கேற்று தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

நாடு முழுவதும் மக்கள் தங்களது கோபங்களை அமைதியான போராட்டங்கள் மூலம் காட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் உத்தரவின் பேரில்தான் அன்னாவைக் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள்தான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். டெல்லி போலீஸ் இந்த முடிவை எடுக்கவில்லை. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள சிலரே இதைச் செய்துள்ளனர்.

மிசா சட்டத்தில் கைது செய்ததைப் போல அன்னாவைக் கைது செய்துள்ளது போலீஸ். இது சட்டவிரோதமானது என்றார் அவர்.
நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!