கப்சிப் விஜயகாந்த்! அம்மா மீது பயமா? அட்றா சக்கை பிளானா?


கப்சிப் விஜயகாந்த்! அம்மா மீது பயமா? அட்றா சக்கை பிளானா?

ஆனந்த விகடன் கட்டுரை.

தேர்தல் முடிந்து முடிவும் அறிவிக்கப்பட்ட பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு முதல்வராக தமிழ்நாடு சட்டமண்றத்தில் உட்காருவார்கள். அவருக்கு எதிர் வரிசையில் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவராக் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்கள் அமர்வார்கள்!’ என்று கோவையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மேடையில் ஜெயலலிதா முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னார். அவர் சொன்னதுதான் நடந்தது.ஜெயலலிதா முதல்வர் ஆனார். விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவர் ஆனார். முதல்வர் செயல்படுகிறார். ஆனால் எதிர்கட்சித் தலைவர் செயல் படுகிறாரா? இதுதான் இன்றைய அரசியலின் பிரதான கேள்வி!.
        கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது போயஸ் கார்டனில்,சிறுதாவூரில் கொடநாட்டில் ஜெயலலிதா நிம்மதியாகப் பதுங்கி கொண்டரோலை இப்போது விஜயகாந்த் கைப்பற்றிவிட்டதாகவே தெரிகிறது. எதிர்கட்சித்தலைவர் பதவி என்பது சட்டமன்றத்தை பொறுத்தவரையில் அது முதலமைச்சருக்கு இணையான பொறுப்பு. சபையில் யார் பேசும் போதும் முதல்வர் குறுக்கிடலாம். முதல்வர் எழுந்தால் பேசிக்கொண்டிருப்பவர் உடனடியாக உட்கார வேண்டும். அதைப்போலத்தான் எதிர்கட்சி தலைவரும் யார் பேசும் போதும் குறுக்கிடலாம். அவர் எழுந்தால் மற்றவர்கள் உட்கார்ந்துவிடுவார்கள். இன்னும் சொன்னால் முதல்வர் பேசும் போதும் தயக்கம் இல்லாமல் குறுக்கிட்டு கேள்விகள் கேட்கக் கூடிய அதிகாரம் எதிர்கட்சித் தலைவருக்கு உண்டு. அவ்வளவு அதிகாரம் பொருந்திய பதவியை விஜயகாந்த் ‘சும்மா’ வைத்திருப்பதின் சூட்சுமம் என்ன?
     சட்டசபையில் மிக முக்கியமான நிகழ்வு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது.அன்றையதினம் விஜயகாந்த் சபைக்கே வரவில்லை. அடுத்தடுத்த நடந்த விவாதங்களிலும் அவர் பங்கேற்க வில்லை. எதிர்கட்சித் தலைவர் பேசியே ஆகவேண்டிய அன்று மட்டும் விஜயகாந்த் வந்தார். அன்றும் ‘அம்மா’வை விமர்சிக்கவில்லை. பொதுவாகவே, எப்போதும் இலவசங்களைவிஜயகாந்த் எதிர்ப்பார். கடந்த ஆட்சியில் கருணாநிதியை காய்ச்சி எடுத்ததே இலவசங்களை வைத்துத்தான். ‘அரிசி ரெண்டு ரூபாய்க்கு கொடுத்தா கொழம்பு வைக்க இருபத்தஞ்சுரூபா வேணுமே’ என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி தீயாக பரவியது அதை மறந்து விட்டு இப்போது விஜயகாந்த் சொல்வதை வாசியுங்கள்..
    2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஏழை நடுத்தரமக்கள் பயனடையும் வகையில் இலவச அரிசி,கிரைண்டர்,மிக்சி,மின்விசிறி, கறவை மாடுகள்,ஆடுகள், லேப்டாப் கம்ப்யூட்டர், வேட்டி சேலை என சுமார் 50 இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் இல்லை என்று கூறுவோர், கண் இருந்தும் பார்க்க மறுக்கும் கருத்துக் குருடர்கள் ஆவார்கள்.முன்னால் முதல்வர் கருணாநிதியின் மொழியில் கூற வேண்டுமானால் கண்ணைமூடிக்கொண்டு இந்த் பட்ஜெட்டை பாராட்டி மகிழலாம்.அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் உள்ளன” என்று விஜயகாந்த் சொல்ல சொல்ல பூரிப்பில் முகம் மலர்ந்து கொண்டே இருந்தார் முதல்வர் ஜெயலலிதா!
      ஜெ. முதல்வரானதும் ஏற்பட்ட முதலாவதும் பெரியதுமான சறுக்கல் சமச்சீர் கல்வி விஷயத்தில் நடந்தது.ஜூன்4ம் தேதி இந்த ஆண்டுக்கான படிப்பை தொடங்கி இருக்க வேண்டிய பிள்ளைகள் ஆகஸ்ட் 9வரை என்ன படிப்பது என்று தெரியாமல் மலங்கமலங்க விழித்துக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தின் அனைத்துகட்சிகளும் இந்த விஷயத்தில் கொந்தளித்தன. அதிமுக கூட்டணியில் அசைக்க முடியாத வகையில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த போராட்டத்தை தயக்கமில்லாமல் முன்னெடுத்தது. ஆனால் அப்போதும் விஜயகாந்த் மௌனமாகவே இருந்தார். கேப்டன் டீவியின் மெயிலில் மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கூட, ‘நாங்கள் கேட்டது குதிரை, கருணாநிதி தந்தது கழுதை’ என்று மையமாகப் பதில் சொன்னார். சமச்சீர் கல்வியை அவர் ஆதரிக்கிறாரா,இல்லையா என்பது தெரியாமல் இருந்தது அந்த பதிலில்.
      இப்போது கூட சட்டசபையில் அவர் பேசும் போது,சமச்சீர் கல்வி என்ற பெயரால் கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பாடதிட்டம் மட்டுமே கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த காலக்கட்டத்தில் வரவேற்கக் கூடியது என்றாலும், அது உண்மையில் சமச்சீர்க் கல்வி கிடைக்க வழி வகுக்குமா என்பதே என் கேள்வி” என்று கேட்டது சுற்றி வளைத்து எந்த முடிவுக்குமே வர முடியாத வார்த்தைகளின் கோவையாக அமைந்து விட்டது.
    இயல்பில் விஜயகாந்த் வெள்ளந்தியாக பேசக்கூடியவர். அடுக்கு மொழியோ, அலங்கார வார்த்தைகளொ இல்லாமல் மனதில் பட்டதை அப்படியே சொல்லக்கூடியவர், ‘என்னை மாதிரிதான் மற்ற கட்சிகளும் பேசனும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசனும் அவுங்களைத்தான் மக்கள் நம்புவாங்க. நான் தயவு தாட்சண்யம் பார்க்கமா நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்காம, மக்களுக்கு இன்னிக்கு என்னத்தேவையோ அதைப்பத்தி நான் மட்டும் தான் பேசுறேன். எனக்கு எந்த பயமும் இல்லை” என்று சொல்லிக் கொண்ட விஜயகாந்த் இன்று அளவுக்கு மேல் அடக்கி வாசிப்பதற்கு காரணம் உள்ளாட்சித் தேர்தல்!
    “உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது கேப்டன் செயல்படுகிறார். அது வரை இந்தக் கூட்டணியில் எந்த சிக்கலோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார். ஐன்றைக்கு அதிமுகவுடன் அமைக்கப்பட்ட கூட்டணி மிக மனப்பூர்வமாக அமைக்கப்பட்டது. அந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மிகத்தீவிரமாக தீராத யோசனைகளில் கேப்டன் ஆழ்ந்து இருந்தார். பல்வேறு சாதக பாதகங்களை அலசிய பிறகுதான் கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கோபக் கொந்தளிப்பு காட்டியபோது கூட கேப்டன் அமைதியாகத்தான் இருந்தார்
    ‘ஒரு கூட்டணிக்குள் போயாச்சு. கேட்ட தொகுதி கிடைக்கலைன்னு வெளியே வந்தால் சில்லியா இருக்கும் அவங்க கிட்ட நம்ம கோரிக்கையை வைப்போம்’னு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் சாந்தமாக பதில் சொன்னார்.
  ‘விஜயகாந்த் வேகமா இருப்பார்னு பார்த்தா நம்மை விட பக்குவமா இருக்காரே!’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் ஒருவர் கமெண்ட் அடித்துவிட்டுப் போனார். அதை அடக்கம் என்று சொல்ல முடியாது கூட்டணி தர்மம்,கட்டுப்பாடு என்றும் சொல்லலாம். இப்போதும் தேவையில்லாமல் கேப்டன் எந்த கமெண்டும் அடிப்பது இல்லை. அதற்காக அவர் ஜெயலலிதாவின் அடிமையாக மாறிவிட்டார் என்று சொல்ல முடியாது. சொல்ல வேண்டிய ஆலோசணைகளைப் பக்குவமாகச் சொல்கிறார். என்று தே.மு.தி..க வட்டாரம் சொல்கிறது.
      “இன்றைக்கு 29 பேர் தான் எம்.எல்.ஏக்களாக ஆகி இருக்கிறார்கள். 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எதையும் அனுபவிக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கி,கைக்காசைப் போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்ன பதவிகளாவது வாங்கித் தர வேண்டும் என்று விஜயகாந்த் துடிக்கிறார். தேவை இல்லாமல் கூட்டணியில் குழப்பம் செய்து வெளியே வந்தால் என்ன ஆகப் போகிறது? எனவேதான் ஒரு மௌன சாட்சியாக இருந்து அத்தனையையும் தனது கேமராவில் பதிவு செய்து கொண்டு வருகிறார். இதை பயம் என்று சொல்கிறார்கள் சிலர். பிளான் என்கிறார்கள் சிலர். எதுவாக இருந்தாலும் விஜயகாந்துக்கு நன்மைதான்” என்றும் அவரது மனம் அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.
    ஆக்சன் ஹீரோ திடீரென குடும்ப செண்டி மெண்ட் படத்தில் நடித்தால் போரடிக்கும் அல்லவா? அப்படித்தான் இருக்கிறது விஜயகாந்தின் நடவடிக்கைகள்.
‘எப்பவுமே அடிதடியிலே நடிச்சுட்டே இருந்தா... எனக்கும் போரடிக்காதா?’ என்று விஜயகாந்த் சொல்வார்.
  நமக்கு எல்லாம் சினிமாதானே!
    ப. திருமா வேலன்.
 நன்றி ஆனந்த விகடன் 24-8-11

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

  1. 30 ஆண்டுகளாக கேப்டனுக்காக ரசிகர் மன்றம் நடத்தி எதையும் அனுபவிக்காத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கட்சி தொடங்கி,கைக்காசைப் போட்டு இன்று வரை கட்சியை வளர்த்து வரும் நிர்வாகிகள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் சின்ன பதவிகளாவது வாங்கித் தர வேண்டும் என்று விஜயகாந்த் துடிக்கிறார்

    நல்லா இருக்குது நம்ம நாட்டு நிலமை அரசியலை business மாத்திட்டாங்களே

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2