தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை!


டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் நெருக்கடியால் தான் எனது ஏர்செல் நிறுவன பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றேன் என்று ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் சிவசங்கரன் சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தபோது அதைத் தராமல் காலதாமதம் செய்த தயாநிதி மாறன், பின்னர் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்ற பின்னர் அதற்கு 14 மண்டலங்களில் லைசென்ஸ் ஒதுக்கித் தந்தார் என்றும் சிவசங்கரன் கூறியுள்ளார்.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் சேவையில் பல நூறு கோடி முதலீடு செய்திருப்பது தெரியவந்தது.

இந் நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுடன் ஒத்துழைக்குமாறு மேக்ஸிஸ் நிறுவனத்திடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு சிபிஐ விரைவில் கடிதம் அனுப்பவுள்ளது.

இதை ஏற்று மேக்ஸிஸ் ஒத்துழைப்பு தராவிட்டால், அந்த நிறுவனம் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிகிறது.

அதே போல தயாநிதி மாறனிடமும் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விரைவிலேயே விசாரணையை ஆரம்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக சிவசங்கரன் கூறிய புகார்களுக்கு தயாநிதி மாறனிடம் சிபிஐ விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதற்காக அவர் விரைவிலேயே சிபிஐ முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்படுவார் என்று தெரிகிறது.

சஞ்சய், வினோத் ஜாமீன் மனுக்கள்-பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு:

இந் நிலையில் 2ஜி ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள யுனிடெக் வயர்லெஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா மற்றும் ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த மனுக்கள் குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எச்.எல்.டாட்டூ ஆகியோர் உத்தரவிட்டனர். முன்னதாக இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதை எதிர்த்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தான் கடந்த 108 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளதாகவும் சந்திரா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!