பேனாவைக் காணோம்! பாப்பா மலர்!
பேனாவைக் காணோம்!
எட்டாம் வகுப்பு அறையில் மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் குழுமி இருந்தனர் அப்பொழுது ராஜா உள்ளே நுழைந்தான். அவனது பாக்கெட்டில் புத்தம் புதிய ஹீரோ பேனா. மறு வினாடி ராஜாவை கும்பல் சூழ்ந்து கொண்டது. ராஜா புதுப் பேனாவா? கொஞ்சம் கொடு! பார்த்துட்டு தரேன் என்று ஆளுக்கு ஆள் மாறி மாறி கேட்டனர்.
இதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கோபி. இந்த மாதிரி பேனா நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணியது அவன் மனம். கோபி பிறர் பொருளை கவர்வதில் வல்லவன். சாமர்த்தியமாக மாட்டிக் கொள்ளாமல் தப்பிவிடுவான்.
‘இண்டர்வெல்’லின் போது ராஜா பேனாவை பாக்ஸில் வைத்து பையில் வத்துவிட்டு வெளியே போவதை பார்த்தான் கோபி. உடனே சென்று பேனாவை எடுத்து யாருக்கும் தெரியாமல் தன் பையில் வைத்துக் கொண்டான் கோபி.
‘இண்டர்வெல்’ முடிந்ததும் வகுப்பு தொடங்கியது. ஆங்கில ஆசிரியர் வைத்த தேர்வை எழுத பேனாவை எடுக்க பையில் கைவிட்ட ராஜா அதிர்ந்தான். பாக்ஸ் காலியாக இருக்க ‘சார் பையில் வைச்சிருந்த என் புதுப்பேனாவைக் காணோம் என்று ஆசிரியரிடம் முறையிட்டான்.
ஆசிரியரோ, ராஜா நல்லா யோசிச்சுப்பாரு பேனாவை பையிலதான் வச்சியா? இல்ல சட்டையில சொருகி கிட்டு போய் எங்காவது விட்டுட்டியா? என்றார்.
‘இல்ல சார் பையிலதான் வைச்சேன் நல்லா ஞாபகம் இருக்குது இந்த பாக்ஸுக்குள்ள வைச்சு மூடி பையில் வச்சிட்டுதான் பாத் ரூம் போனேன் வந்து பார்த்தா பேனாவைக் காணோம்’ என்றான்.
‘அப்படியா! நம்ம கிளாஸ் பசங்க எடுத்திருக்க மாட்டாங்கண்ணு எனக்கு நம்பிக்கை இருக்கு! ஆனாலும் சந்தேகத்தை தீர்த்துக்க நீ எல்லார் பேக்கையும் செக் பண்ணிடு என்றார் ஆசிரியர்.
ராஜா ஒவ்வொரு பையாக செக் பண்ண கோபிக்கு வியர்த்தது. தப்பு பண்ணிவிட்டோமோ? ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான் அடி பிண்ணி எடுத்து விடுவாரே இத்தனை பேர் முன்னால் அசிங்கப் பட வேண்டுமே என்று அச்சப்பட்டான் கோபி. அவனுடைய பையை ராஜா செக் பண்னிய போது அவனுக்கு இதயம் படபடவென அடித்துக்கொண்டது. ஆனால் ராஜா கோபியை குற்றம் சாட்டவில்லை. அடுத்த பையை செக் செய்ய சென்று விட்டான்.
‘சார் யார் பையிலும் என் பேனா இல்லை சார்!”
‘அப்ப எங்க போயிருக்கும் டெஸ்ட் எழுத கஷ்டப்பட்டுகிட்டு பேனா எடுத்து வராம பொய் சொல்றியா? என்னோட நேரத்தையும் வேஸ்ட் பண்றியா? ஐ சே யூ கெட் அவுட் மை கிளாஸ்! என்று கத்தினார் ஆசிரியர்.
மவுனமாக வகுப்பறையை விட்டு வெளியேறினான் ராஜா. மற்ற மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
உணவு இடைவேளை. ‘ராஜா என்னை மன்னிச்சிடு!’ என்று ராஜாவின் காலில் விழுந்தான் கோபி. “கோபி என்ன இது என்னோட கால்ல போயி விழுந்திகிட்டு நீ என்ன பெரிய தப்பு பண்ணிட்டே என்னோட கால்ல விழறதுக்கு!” என்று கடிந்து கொண்டான் ராஜா.
‘ராஜா நானா தப்பு செய்யலை? நான் என்ன தப்பு செஞ்சேன்னு உனக்காத் தெரியாது. உன்னோட பேனாவை திருடின என்ன கால்ல விழ வேண்டாமுன்னு தடுத்ததோட என்ன தப்பு செஞ்சேனு கேட்டு என்னை தலை குனிய வச்சிட்டியே ராஜா! என் பையில உன் பேனாவை பார்த்தும் ஆசிரியரிடம் காட்டி கொடுக்காம நீ தண்டணை வாங்கிகிட்டியே இது உன்னோட உயர்ந்த குணத்தை காட்டுது. அதுக்கு மதிப்பு கொடுத்து இனி யார் பொருளையும் நான் திருட மாட்டேன். இந்தா உன் பேனா” என்று பேனாவை நீட்டினான் கோபி.
“கோபி நீ திருந்தினது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! நான் உன்னை காட்டிக் கொடுக்காததுக்கு காரணம் இருக்கு! ஒருமுறை நீ திருடன்னு பேர் வாங்கிட்டா இனி எப்ப எங்க எது காணாம போனாலும் உன்னைத்தான் சந்தேகப்படுவாங்க! மேலும் நல்ல பேர் எடுப்பது கஷ்டம் கெட்ட பேர் வாங்கிறது ரொம்ப ஈஸி! ஆசிரியர் நம்ம மாணவர்கள் மேல திருட மாட்டாங்கன்னு நல்ல மதிப்பை வச்சிருக்கார் அதை அந்த நம்பிக்கையை உடைக்க நான் தயாரா இல்ல. அதனாலதான் நான் உன்னை காட்டிக் கொடுக்கலை . இந்த பேனா மேல ஆசைப் பட்டுதானே எடுத்தே! நீ திருந்தினதுக்கு பரிசா நீயே இந்த பேனாவை வச்சிக்க என்றான் ராஜா!.
கண்களில் நீர் தளும்ப ராஜா! என்று அவனை அனைத்துக் கொண்டான் கோபி!
அறவுரை!
திரிகடுகம்
பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்
இல்லற முட்டாது இயற்றலும்-வல்லிதின்
தாளின் ஒருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை.
நல்லாதனார்.
விளக்கம்| பல நல்ல நூல்களை கற்றலும் பகுத்துண்டு இல்லறத்தை குறைவில்லாது நடத்துதலும் ஊக்கத்துடன் முயற்சி கொண்டு செய்வதற்குரிய செயல்களை செய்து முடித்தலும் ஆகிய இம்மூன்றும் சிறந்த கல்வியாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
வேர் இல்லாத தாவரம் காளான்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
Comments
Post a Comment