அந்த நாள் ஞாபகம்!
அந்த நாள் ஞாபகம்!
இன்று மதிய வேளையில் வீட்டிற்கு முன்னால் வயல் வெளியை நோக்கியபோது ஒரு ஐந்து வயது சிறுவன் தன்னுடன் இரண்டு சிறுமிகளை அழைத்துக்கொண்டு வரப்புகளில் நடந்து கொண்டிருந்தான். அதில் ஒரு சிறுமி வரப்பு சேற்றில் சிக்கி நடக்க தடுமாற அச்சிறுவன் அவளை பாதுக்காப்பாக கைப்பிடித்து அழைத்து சென்றான். இந்த காட்சி எனக்குள் அந்தநாள் ஞாபகத்தை ஏற்படுத்திவிட்டது.
அந்த நாள் சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன் நான் பாலகனாய் இருந்த போது நடந்த ஞாபகங்கள் தான். சிறு வயதில் நான் என் அம்மா வழி தாத்தாவின் ஊரான ஆசான பூதூரில் தங்கி படித்து வந்தேன். அவ்வூருக்கு இன்று மினி பஸ் வசதி வந்து விட்டாலும் அன்று சாலை வசதி கூட சரிவர கிடையாது. அத்தகைய ஊரிலே சுமார் ஒரு 35 வீடுகள் தான்.
ஏதாவது பொருள் வாங்க வேண்டுமானால் பெரும்பேடு அல்லது மெதூர் சென்றுதான் வாங்கி வர வேண்டும். மெதூர் செல்ல மூன்று மைல்கள் சுமார் 4.1/2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும். ஆனால் பெரும்பேடு அருகில் இருந்தது. ஆனால் அவ்வூருக்கு செல்ல வயல் வரப்புக்கள் தான் வழி.
பெரும்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு பஸ் வசதியும் உண்டு ஒரு நாளைக்கு சுமாராக 10 ட்ரிப் பஸ்கள் பெரும்பேடு வந்து போகும். அங்கு ஒரு முருகன் ஆலயம் இருப்பதால் பக்தர்கள் மற்றும் அருகில் பல சிற்றூர்கள் இருப்பதால் பேருந்து நிரம்பி வழியும்.இந்த பெரும்பேட்டிலிருந்து ஆசான பூதூருக்கு வயல் வரப்புக்கள் தான் பாதை!
ஆங்காங்கே பாசனக் கால்வாய்கள் வேறு. சற்று தொலைவு ஏரிக்கரையோரமாக நடந்து சென்று வயல் வெளியில் நுழைந்துவிட்டால் ஊர் போய் சேரும் வரை வயல் வரப்புக்கள் தான்!. அருமையாக இருக்கும் வரப்புக்களில் நடக்க வயல்களில் மேயும் நண்டுகளையும் வயல் களையும் ரசித்த வாறே கால்வாய்களில் இறங்கி கால்களை நனைத்துக் கொண்டு கதிர் பிடிக்கும் சமயம் அந்த கதிர்களை பிடுங்கி முனைப் புள்ளின் பாலை சாப்பிட்டு கொண்டு பயணிப்பது ஒரு சுகம்.
அறுவடை காலத்தில் அந்த வயல் வெளிகள் ஆளையே மறைத்து நிற்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கும். ஏரியில் இருந்து வரும் பாசனக் கால்வாயில் நீர் தெளிவாக ஓடும் சமயம் அள்ளிக் குடித்தால் அதன் ருசியே தனி!
சரி விஷயத்திற்கு வருவோம்! அந்த சிறுவனைப் போல் நானும் சிறுவனாக இருந்த காலத்தில் என் தங்கைகள் ஊரிலிருந்து என்னை பார்க்க ஆசான பூதூருக்கு வருவதுண்டு. அவர்களை அந்த வரப்புக்களில் நான் தான் அழைத்துச் செல்வேன் மூன்று தங்கைகள் புடை சூழ எங்கள் ஊர்வலம் அருமையாக இருக்கும்.
ஒரு சமயம் குறுக்கு வழியில் அழைத்துச் செல்கிறேன் என ஒரு வழியில் அழைத்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. சற்றே ஆழமான கால்வாய். நான் முன்னே இறங்கி நடக்க என் தங்கைகள் இறங்க பயப்பட்டார்கள். பின்னர் ஒரு வழியாய் அவர்களை சமாதான படுத்தி என் கையை ஒருவள் பிடிக்க அவள் கையை மற்றவள் பிடிக்க என அந்த கால்வாயைக் கடந்தோம் என்ன எங்கள் சட்டைகளெல்லாம் நனைந்து போயின. இந்த நினைவு இன்று அந்த சிறுவனைப் பார்த்ததும் வந்து விட்டது.
காலப் போக்கில் இன்று அனைவருக்கும் திருமணமாகி எங்கெங்கோ வசித்தாலும் ஒரு சிறு நிகழ்வு என்னை முன்னோக்கி செலுத்தி பழைய நினைவுகளை அசை போடவைத்துச் சற்றே சந்தோஷப் படுத்தியது.
இதுபோன்று இளமைக் கால நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் அந்த நினைவுகள் திரும்பும் சமயம் அந்த நாளும் திரும்பிடாதோ என்று ஏங்க வைக்கும் கடந்த கால நினைவுகளை அசை போடும் எண்ணற்ற நண்பர்களுக்கு இது போன்ற பதிவுகள் இதமளிக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
அருமை
ReplyDelete