திரி ரோஸஸ்! கடன் காரன் ஆன ரஜினி!

 த்ரி ரோஸஸ்! கடன்காரன் ஆன ரஜினி!  மகசேசேவிருது பெறும் தமிழர்! உறுதியில்லா சீடன்!

ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன் - சூப்பர் ஸ்டார் ரஜினி


சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாகும் கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு திடீரென வந்தார் ரஜினி.
பிரபு மகன் விக்ரம் பிரபுவை வாழ்த்தி ரஜினி பேசியதாவது:
இப்போதெல்லாம் நான் எந்த விழாக்கள், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். எதிரியே கிடையாது. எனக்கு நான்தான் எதிரி.
ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று ஒப்புக் கொண்டால், அந்த நிகழ்ச்சி முடியும்வரை அதே சிந்தனையில் டென்ஷனாக இருப்பேன். எந்த விஷயத்திலும் அப்படித்தான்.
இன்னொன்று, உடலில் முழுமையான எதிர்ப்பு சக்தி திரும்பும்வரை விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என டாக்டர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வர இயலாது என்றுதான் கூறினேன். ஆனால் நேற்று பிரபு எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னார்கள்.
நான் அவருக்குப் போன் செய்து, என்னால விழாவுக்கு வரமுடியலியேன்னு வருத்தமா இருக்கு. நீங்க அழைப்பிதழ் கொடுத்திருக்கீங்க. எனக்கு மனசுக்கு சங்கடமா இருக்கு... என்று கூறினேன். 'உங்களுக்கு அழைப்பிதழ் தருவது என் கடமை.. விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும்' என்றார்.
எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. யோசித்துப் பார்த்தேன். சிவாஜி வீட்டு விழா. நாம போகாம இருக்கிறது சரியில்ல... என்ற முடிவு செய்து, பிரபுவுக்கு மட்டும் காலையில் போன் செய்து, நான் விழாவுக்கு வருகிறேன் என்றேன். வந்து விட்டேன்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.
ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்.
என் ரசிகர்கள், என் மீது அன்பு செலுத்தி பிரார்த்தனை செய்த மக்களைப் பற்றி நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்ளை நான் சந்திக்கக் கூட இல்லை. அது எனக்கு மிகுந்த சங்கடமாக உள்ளது.
காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போலத்தான் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாதவனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கிறேன். இந்த அன்பை நான் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
என்னைப் போன்ற கலைஞர்கள், பர்மார்மன்ஸ் - படங்களில் நடித்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம்தான் ஓரளவு இதை திருப்பிச் செலுத்த முடியும். அப்படி நான் சில படங்களைச் செய்ய, அதற்கான உடல் பலம் தேவை. நான் ஒரு இயக்குநர் அல்ல, எழுத்தாளர் அல்ல. நடிகன். உடல்தான் அதற்கு மூலம். எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இளைய தலைமுறை நடிகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்வேன். வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இல்லாவிட்டால், ஒரு படம் சரியாகப் போகாத டென்ஷன், மன அழுத்தம் காரணமாக அடுத்த படத்தில் கவனம் சிதறிவிடும்.
சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்கு இந்த கலையுலகமே கை கொடுக்கும். அவருக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். எதற்காகவும் அவர் பயப்பட தேவையில்லை.
சிவாஜி பற்றி எல்லோரும் நிறைய சொன்னார்கள். எனக்கும் சொல்ல நிறைய இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். படையப்பா ஷூட்டிங்கின்போது நிறைய நேரம் அவருடன்தான் இருந்தேன்.
ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார்..."நீ புத்திசாலிடா.. உன்னால காலரைத் தூக்கிவிட்டு நடக்க முடியும். ஆனால், காலரைத் தூக்கினா பட்டன் கழன்டுடும்னு உனக்குத் தெரிஞ்சிருக்கு. அதான் அப்படியே இருக்கேன்"னு சொன்னார். அதைத்தான் விக்ரம் பிரபுவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்...," என்றார்.


தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருதுமணிலா: 2012ம் ஆண்டுக்கான ரமோன் மகசாசே விருது பெறுபவர்களின் பெயர்கள் மணிலாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் 6 பேரில் தமிழகத்தில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் குழந்தை பிரான்சிஸும் ஒருவர்.
ரமோன் மகசாசே விருது கடந்த 1957ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் 3வது அதிபரின் நினைவாக இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த சேவை நிறுவனம் அல்லது சேவையில் ஈடுபடும் நபருக்கு வழங்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நிறுவனம் ரமோன் மகசாசே விருதை வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது மணிலாவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை பிரான்சிஸ்(65), தைவானைச் சேர்ந்த சென் ஷூ சு, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ரொமுலோ டேவிட், வங்க தேசத்தைச் சேர்ந்த சையதா ரிஸ்வானா ஹசன், கம்போடியாவைச் சேர்ந்த யாங் சைங் கோமா, இந்தோனேசியாவைச் சேர்ந்த அம்ரோசியஸ் ருவின்ட்ரிஜாடோ ஆகிய 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகசாசே விருது வழங்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற இவர் கடந்த 1979ம் ஆண்டு இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
அதன்மூலம் கிராமப்புற பெண்களின் வறுமையை போக்கி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த குழந்தை பிரான்சிஸ் உதவி செய்து வருகிறார். அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் தற்போது கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 8,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
குழந்தை பிரான்சிஸ்சின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இந்த நிறுவனத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.
பிரான்சிஸுடன் தைவான், பிலிப்பைன்ஸ், வங்கதேசம், கம்போடியா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கும் இந்த ஆண்டு மகசாசே விருது வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மணிலாவில் நடக்கும் விழாவில் இந்த 6 பேருக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

மனதில் உறுதி வேண்டும்!!!

 

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.
அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.
அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.
துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.
பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.
அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.
இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது.

நன்றி} தட்ஸ் தமிழ்.

 டிஸ்கி} படித்த செய்திகளை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

 1. ரஜினியின் பெருந்தன்மை...
  சிறந்த சமூக சேவகர்...
  சிறப்பான கதை...

  அசத்திட்டீங்க நண்பரே !

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அனைத்து தளங்களுக்கும்சென்று அசராமல் கருத்திடும் தங்கள் பணி சிறக்கட்டும்! நன்றி நண்பரே!

   Delete
 2. நல்ல கதம்பம் நண்பரே...வாழ்த்துக்கள் அந்த தமிழருக்கு...

  ReplyDelete
 3. பெருந்தன்னையின் சிகரம் ரஜனி மக்கள்சேவையின் விருதும் துறவியின் தீர்க்க தருசனமும் கலந்து சிறப்பான பதிவு நண்பா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2