பாடம்! சிறுகதை!
பாடம்
டிகிரி முடித்து
வேலைக்கு அலைந்த்து அலைந்து கால்கள் கூட தேய்ந்து விட்டது ஆனால் வேலைதான்
கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களை கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர
வேலைக்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை!.
இன்னும் எத்தனை
நாள்தான் வீட்டில் இண்டர்வியுவிற்கும் அப்ளிகேசன் போடவும் காசு கேட்டுக்
கொண்டிருப்பது. வெளியில் சென்றால் பார்ப்பவர்களின் பார்வையே நக்கலாக தென்பட்டது
கணேஷிற்கு.
இன்று கூட கம்பெனி ஒன்றிர்கு இண்டர்வியுவிற்கு
போய் ஏமாந்து திரும்பினான். நூற்றுக்கணக்கான நபர்களை வரவழைத்தவர்கள் எம்.எல்.ஏ
சிபாரிசோடு வந்தவனுக்கு வேலைக் கொடுத்துவிட்டு மற்றவர்களை திருப்பி
அனுப்பிவிட்டார்கள். ச்சே இதென்ன பிழைப்பு ஃபைலை தூக்கிக் கொண்டு வேலை கிடைக்குமா
என்று அலைந்து கொண்டு அனைவரும் கேலியாக பார்க்கிறார்கள். இன்று தான் கடைசி. இனி
வேலை தானே கிடைத்தால் கிடைக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்! நாமாக அலைந்தால்
கிடைக்கவில்லையே தாமாக எங்கே கிடைக்கப்போகிறது? என்று சிந்திக்காமல் சலித்துக்
கொண்டான் கணேஷ்.
அப்போது ராமசாமி தாத்தா எங்கோ சென்று
திரும்புவதை பார்த்து, எங்க தாத்தா போய் வர்ரீங்க? வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி
வர்ரீங்களே? என்று விசாரித்தான்.
நான் வேலை பார்த்த ஆபிசுக்குத் தான் தம்பி
பென்ஷன் கேட்டு போயிட்டு வரேன்!.
என்ன தாத்தா அவங்கதான் ஒரேப்பிடியா பென்ஷன்
எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களே அப்புறம் எதுக்கு வெட்டியா அலைஞ்சிட்டு
வர்ரீங்க?
ராமசாமித் தாத்தா வேலைப் பார்த்தது ஒரு
தனியார் கம்பெனி ரிட்டையர் ஆனதும் டாட்டா காண்பித்து விட்டது. இவர் பென்சனுக்கு
நடையாக நடக்கிறார். இவரைப்போல பலர். ஆனாலும் கம்பெனி அசைந்து கொடுக்க
மறுக்கிறது.அதனால் தான் அப்படி கேட்டான் கணேஷ்.
என்ன தம்பி இப்படி சொல்லிட்டீங்க? கம்பெனி
ரூல்ஸ்படி அவங்க கட்டாயம் பென்சன் தந்து ஆகனும் முடியாதுன்னு சொல்ல முடியாது.
தாத்தா உங்களுக்கு இருக்கிற வசதிக்கு இந்த
பென்சன் பிச்சை காசு. வந்தா வருது வராவிட்டால் போகுதுன்னு விடாமா இந்த வயசான
காலத்தில வெயில்ல அலைஞ்சிகிட்டு இருக்கீங்களே?
தம்பி சிறுதுளிதான் பெரு வெள்ளம்! நாற்பது
வருசமா சம்பாதிச்சதாலே இப்ப வசதியா இருக்கேன்! நான் வசதியா இருக்கிறதாலே எனக்கு சேரவேண்டியதை
விட்டுக் கொடுத்திட முடியுமா? தானா எதுவும் கனியாது தம்பி! நாலுகல்லு
அடிச்சாத்தான் ஒரு கல்லுல மாங்கா விழும்! அதான் விடாம முயற்சி பண்ணிகிட்டு
இருக்கேன்! எனக்கு நம்பிக்கை இருக்கு தம்பி! நான் கட்டாயம் பென்சனை வாங்கிடுவேன்!
அது வரை முயற்சியை விடமாட்டேன்! ஆமாம் தம்பி இன்னிக்கு இண்டர்வியுவிற்கு போனியே
என்ன ஆச்சு? என்றார்.
இன்னிக்கு தோல்விதான் தாத்தா! ஆனா நாலைக்கு
வெற்றிதான் என்றான் கணேஷ் பாடம் கற்றவனாக.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் அன்பர்களே!
Comments
Post a Comment