எட்டணா காசும் என்னோட அனுபவங்களும்!

எட்டணா காசும் என்னோட அனுபவங்களும்!


எட்டணா இது ஒரு காலத்துல பெரிய காசு! ஒரு காலத்துல என்னா? என்னோட சின்னவயசுல கூட எட்டணாவுக்கு நிறைய பொருட்கள் வாங்கலாம். சின்ன வயசுல ஒரு பன்னிரண்டு பதிமூனூ வயசு இருக்கும் தாத்தா எனக்கு பாக்கெட் மணியா எட்டணாவை தருவார். நல்லா பெரிசா செப்புல கெட்டியா இருக்கும் அந்த காசு! அதுக்கு பத்து மிட்டாய் தருவான் கடைக்காரன். புளிப்பு மிட்டாய் அதை சாப்பிட்டுகிட்டே பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்துடுவேன். ஆனா இன்னிக்கு எட்டனா ரொம்பவே இளைச்சி போய் கிடைக்கு!
   நான் பார்த்த முதல் எட்டணாவுக்கு அப்புறம் கொஞ்சம் மெலிசா ஆனா அதே சைசிக்கு மீண்டும் செப்புல வந்தது எட்டணா இது கொஞ்சம் டிசைனாவும் இருந்துச்சு. அப்பவும் அதன் மதிப்பு குறையலை! கொஞ்ச நாள் கழிச்சு அதுக்கும் வச்சானுங்க ஆப்பு. குரொமியத்தால் ஆன புது எட்டனா பள பளன்னு புதுசா விட்டாணுங்க அப்பதான் பிடுச்சுது சனி!
   எட்டணா மட்டுமில்ல! ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் எல்லாம் குரோமியம் ரூபாவா மாறியது சைசும் போச்சு மதிப்பும் போச்சு ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாம போச்சு! பத்துகாசு இருபது காசு காணாமலே போச்சு! இப்ப லேட்டஸ்டா இருபத்து காசும் செல்லாதுன்னு அறிவிச்சாங்க!
  அது கிடக்குது விட்டா! இப்ப புதுசா ரூபா அச்சிட்டவங்களுக்கு என்ன தோணுச்சோ ரூபாய் தான் சரிஞ்சிகிட்டே போவுதுன்னு எட்டணா சைசுக்கு ஒரு ரூபாயும் ரூபா சைசுக்கு ரெண்டு ரூபாயும் நாலணா சைசுக்கு எட்டணாவையும் அடிச்சி வைச்சிட்டாங்க இதுல பாவம் பெரிசுங்க இது ரூபாவா? இல்ல எட்டணாவான்னு தெரியாம முழி பிதுங்கி நிற்குதுங்க!
    காலையில் பால்காரர் கிட்ட பால் வாங்கறது வழக்கம்! யோவ் இதுஎல்லாரும் செய்யறதுதானேன்னு கேக்காதீங்க விசயதுக்கு வரேன் எங்க ஊர்ல ஜெர்சின்னு ஒரு பால் போடுறான். அரை லிட்டர் 21 ரூபாய். உண்மையான விலை 19 ரூபாய்தான் பால் எடுத்துவந்து வீட்டுக்கே போடுறதாலே டெலிவரி சார்ஜ் இரண்டு ரூபா! கடையிலயும் அந்த விலைக்குதான் விற்கறாங்க! 21ரூபாய்க்கு ரெண்டு பத்துரூபா தாளும் ரெண்டு எட்டணா காசும் கொடுத்திட்டு வந்தோம் ஒரு ரெண்டு மூணு நாளா. தீடிர்னு நேத்து பால்காரர் எட்டனா காசுகளை திருப்பி கொடுத்திட்டார். ஒரு ரூபாயா கொடுங்க என்றார். என்னடா  என்றால் எட்டணா செல்லாதாம்? எப்போது அறிவித்தார்கள் என்றேன். அதெல்லாம் தெரியாதுங்க யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க! நீங்க மட்டும்தான் இப்படி சில்லறையா கொடுக்கிறீங்க ஒரு ரூபாயா கொடுங்க என்றார். எதற்கு வீண் சர்ச்சை அப்புறம் பால் போடாவிட்டால் வீட்டில் நமக்கு டின் கட்டி விடுவார்கள் என்று சும்மா இருந்து விட்டேன்.!


    அப்புறம் மளிகை கடைக்கு சென்று சில சாமன்களை வாங்கினேன். ஐம்பத்து மூன்று ரூபாய் ஆனது. அங்கு ஐம்பது ரூபாய் தாளுடன் இரண்டு ரூபாயும் ரெண்டு ஐம்பது காசுகளை நீட்டினேன். வாங்கிய கடைக்காரர் சில்லறை இல்லேன்னா பரவாயில்லைங்க என்று தாரளமாக அந்த ரெண்டு ஐம்பது காசுகளை திருப்பி தந்தார். ஏங்க சரியாத்தானே கொடுத்தேன் இந்த காசுக்கு என்னங்க? என்றேன். அது ஓடலீங்க என்றார். கொய்யாலே அது எப்படிடா ஓடும் அதென்ன பி.டி உஷாவா  என்று மனதில் வைதபடி அங்கிருந்து ஒரு டீக்கடைக்குச் சென்று ஒரு டீ வாங்கிவிட்டு எட்டு ரூபாய் என்றது மறுபடி ஐந்து ரூபாய் ரெண்டு ரூபாய் மற்றும் ரெண்டு ஐம்பது காசுகளை தந்ததும் என்னை புழுவைப்போல பார்த்தார் கடைக்காரர். பின்னர் சார் எந்த காலத்துல இருக்கீங்க இது செல்லாது வேற தாங்க என்றார். ஏம்பா நல்லாத்தானே இருக்கு என்றேன். நல்லாத்தான் இருக்கு ஆனா இது செல்லாது என்றார். ஏன் கவர்மெண்ட்ல சொல்லலியே என்றேன். யோவ் காலங்கார்த்தால  பிரச்சனை பண்றதுக்கே வர்றியா ? சரி சரி இடத்தை காலி பண்ணு என்றார் கடைக்காரர் முறைப்புடன்.
   டவுன் பஸ்ஸில் ஏறி ஏழு ரூபாய் டிக்கெட்டுக்கு இதேமாதிரி இரு இரண்டு ரூபாய் இரு ஒருரூபாய் மற்றும் இரு எட்டணாக்களை கொடுத்தேன். அந்த கூட்டத்திலும் கண்டக்டர் என்னை முறைத்து அந்த ரெண்டு காசுகளை கையில் திருப்பித் தந்து யோவ் இந்த டகால்டி தானே வேணாம்கிறது வேற காசை எடு என்றார். என்ன சார் சரியாத்தானே கொடுத்தேன்  என்றபோது. சரியா எங்க கொடுத்தே செல்லாக்காசை இல்ல கொடுத்து என்னை ஏமாத்த பார்த்த என்றார்.
   ஐம்பது காசு செல்லாதா?
என்னது! அப்படின்னா உனக்குத்தெரியாதா என்பது போல ஒரு வித்தியாசமான ஜந்துவைப்போல என்னைப்பார்த்த கண்டக்டர் யோவ் வில்லங்கம் பண்ணாதே பீக் அவர் இருந்தா கொடு இல்லேன்னா அடுத்த ஸ்டாப்புல இறங்கிக்க என்றார்.


  அங்கிருந்து இறங்கி ஒரு பெட்டிக்கடையினுள் நுழைந்தேன். இரண்டு சாக்லேட்களை கையில் எடுத்துக்கொண்டு விலை என்ன என்றேன். ஒரு ரூபா என்றார் கடைக்காரர் ரெண்டு எட்டணாக்களை நீட்ட அவனா நீ என்பது போல பார்த்த அவர் சாக்லெட்டை வெச்சிட்டு கிளம்பு என்றார். ஏன் சார்  என்ன என்றேன். பின்ன வில்லங்கமா செல்லா காசை நீட்டி வம்பு பண்றீங்களேன்னார் அவர் இது எப்பத்திலிருந்து செல்லாம போச்சு! ஒரு நியுசும் வரலியே என்றேன். சரியான நியுசென்ஸ் என்பது போல நினைத்த அவர். இதெல்லாம் கவர்மெண்டு சொல்லிகிட்டு இருக்குமா சார் ஐம்பதுகாசுக்கு இன்னிக்கு என்னா மதிப்பு இருக்கு சார் அதான் வியாபாரிங்க நாங்களா முடிவு பண்ணி வாங்கறது இல்லேன்னார்.

  அங்கிருந்து கிளம்பி வரும்போது பிச்சைக்காரன் ஐயா தர்மம் பண்ணுங்க என்றான். கையில் இருந்த எட்டணாக்களை எடுத்தேன். அதைப் பார்த்த அவன் சார் நீங்களே வச்சிக்கிங்க ஒரு டீ வாங்கி தரமுடியுமா என்றான். இல்ல ஒரு அஞ்சு ரூபா கொடுங்க என்றான். வெறுத்துப் போய் வீட்டுக்கு வந்தேன்.
  அங்கு என் மேசை மீது என்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தன சில ஐம்பதுகாசு பில்லைகள்!
  தெரியாமத்தான் கேக்கறேன்! ஐம்பது காசுக்கு மதிப்பில்லை என்றால் அந்த பில்லைகளை ஏன் வெளியிட வேண்டும்? மக்களிடம் இருக்கும் ஐம்பதுகாசுகள் அப்படியே புழக்கம் இல்லாமல் போனால் அதை என்ன செய்வது? செல்லாக்காசு என்று இப்படி அந்த காசை மக்களே புறக்கணிப்பது சரியா? விளங்க வில்லை! என்னிடம் ஒரு ஐம்பது ரூபாய்க்கு இந்தசெல்லாகாசுகள் சேர்ந்துவிட்டன. என்னசெய்வது?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!


Comments

  1. பத்திரமா போட்டியிலே வச்சு பூட்டுங்க. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு ரூபாவும் இப்படித்தான் ஆகப்போகுது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2