சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
சகல சௌபாக்கியம் தரும்
வரலஷ்மி விரதம்!
சிராவண மாதம் (ஆடி
அல்லது ஆவணி) பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள்
அனுஷ்டிக்கும் விரதம் வரலஷ்மி விரதம் ஆகும்.
சுமங்கலிகள் அன்றைய தினம்
உபவாசமிருந்து பக்திசிரத்தையாக வீட்டை மெழுகி கோலமிட்டு ஒரு மண்டபம் அமைத்து
அம்மண்டபத்தில் முதலில் ஒரு அடி சதுரமாக நெல்லைப் பரப்பி அதன் மீது ஒரு
தாம்பாளத்தில் அரிசியை பரப்பி அதன் மீது ஒரு வெள்ளி அல்லது செப்பு குடத்தை வைத்து
அதை அரிசி அல்லது ஜலத்தால் நிரப்பி மாவிலைக் கொத்து தேங்காய் வைத்து கலசத்தில்
அம்பாள் முகம் வரைந்து முடிந்தால் தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்து
புஷ்பங்களால் அலங்கரித்து சந்தனம் அட்சதை புஷ்பங்களால் வரலஷ்மி தேவியை அர்ச்சித்து
நோன்பு கயிறு சார்த்தி கொழுக்கட்டை, அப்பம், சுய்யம், வடை, பாயசம்,இட்லி, சாதம்,
பருப்பு நெய், தயிர், பழவகைகள் படைத்து வழிபட வேண்டும்.
இதன் பின்னர் அஷ்டலஷ்மிகளை வழிபாடு செய்து
அர்சித்து கற்பூர தீபம் ஏற்றி வணங்கி நோன்பு கயிறு அணிந்து கொள்ள வேண்டும். இந்த
நோன்புக் கயிறில் மஞ்சள் தடவி ஒன்பது முடிச்சிட்டு புஷ்பம் கட்டி கலசத்தில் வைத்து
பூஜித்து கையில் கட்டிக் கொண்டு மற்ற சுமங்கலிகள் உடன் பூஜை செய்தால் அவர்களுக்கு
கட்டி விட வேண்டும்.
கலசத்தில் ஒன்பது வெத்தலை, ஒன்பது பாக்கு,
ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்கள் இட வேண்டும்.நெய் பந்தம் ஆரத்தி செய்தல் வேண்டும்.
இந்த பூஜை முடித்தபின் மறுநாள் கலசத்தை எடுத்து பத்திரமாக வைத்திருந்து அதில் இட்ட
அரிசியில் மறு வெள்ளியன்று பொங்கல் செய்து அம்மனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
கலசம் அலங்கரித்த பின் ஹாலில் தாம்பாளத்தில்
வைத்து ஆரத்தி காட்டி வரலஷ்மி தேவியை ஆவாஹனம் செய்து தன் இல்லத்திற்கு வருமாறு
அழைத்துப் பாடி பூஜையறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பூஜையறையில் மண்டபத்தில்
வைத்து முதலில் விநாயகர் பூஜை செய்து பின் சங்கல்பம் செய்து கொண்டு வரலஷ்மி விரத
பூஜை செய்ய வேண்டும்.
லஷ்மி
ஸ்தோத்தரம், மற்றும் துதிகளை பாடி பூஜை செய்யலாம். வசதியுள்ளவர்கள் இதற்கென உள்ள
புரோகிதர்களை அழைத்தும் பூஜை செய்து கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் சுமங்கலிகளுக்கு
தாம்பூலம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும்.
விரதம்
அணுஷ்டிப்பவர்கள் ஒரு வெற்றிலை ஒருபாக்கு சுண்ணாம்பு சேர்க்காமல் கடித்து மெல்ல
வேண்டும். அப்பொழுது வாய் சிவக்காமல் இருந்தால் இந்த விரதத்தை அனுஷ்டிக்க கூடாது.
விரதம் முடிந்தபின். பிராமணன், சன்யாசி,
தெய்வம்,பிரம்மச்சாரி, சுவாசினி, என ஐந்து நபர்களுக்கு நைவேத்தியம் செய்த
பட்சணங்களை வாயன தானம் செய்ய வேண்டும். அதன் பின்னரே தன் உபவாசம் முடிக்க
வேண்டும்.
விரதக் கதை!
முன்னொரு காலத்தில் சிவனும் பார்வதியும்
சொக்கட்டான் ஆடும் பொழுது யார் ஜெயித்தார்கள் என்று சண்டை வந்தது. அப்போது
அங்கிருந்த சித்ர நேமி என்ற கணதேவதை நியாயம் கேட்டார்கள். அவன் ஒரு தலைப் பட்சமாக
சிவன் ஜெயித்ததாக கூறினான். பார்வதி கோபம் கொண்டு அவனை குஷ்ட ரோகியாக ஒளியிழந்து
தவிப்பாயாக என்று சபித்து விட்டாள்.
பின்னர் சிவபெருமான் அவனுக்கு சாப விமோசனம்
தருமாறு பார்வதியிடம் கேட்க பார்வதியும் எப்பொழுதுஅழகிய தடாக தீரத்தில்
தேவகன்னிகைகள் புண்ணியமான விரதத்தை அனுஷ்டிப்பார்களோ அப்பொழுது உன் சாபம் நீங்கும்
என்று கூறினாள்.அதன் பிறகு சித்ர நேமி ஒரு தடாக கரையில் குஷ்ட ரோகியாக வசித்து
வந்தான்.
பல காலத்திற்கு பிறகு அங்கு தேவ கன்னிகைகள்
வந்து தேவி பூஜையில் ஈடுபடுவதைக் கண்டு
தன்னைப்பற்றி கூறி தாங்கள் அனுஷ்டிக்கும் விரதம் பற்றி கூறுமாறு கேட்டான்.
அவன் மேல் பரிதாபம் கொண்ட கன்னிகைகள் தாங்கள் அனுஷ்டிப்பது வரலஷ்மி விரதம்.
சூரியன் கடகத்தில் இருக்கும் போது கங்கையும் யமுனையும் சேரும் காலத்தில்
துங்கபத்திரா நதிக்கரையில் சிராவண மாதத்தில் சுக்லபக்ஷத்தில் வெள்ளிக்கிழமையில்
முறைப்படி மஹாலஷ்மியை பற்றியதான இந்த விரதத்தை தொடங்க வேண்டும். என்று விரதம் பற்றி
கூறினார்கள்.
அவர்கள் செய்த பூஜையை கண்ட சித்ரநேமிக்கு
குஷ்டம் நீங்கி மீண்டும் கைலாயம் சென்றான். பார்வதி தேவியும் இந்த விரதத்தை
அனுஷ்டித்து ஷண்முகரை பெற்றாள்.விக்ரமாதித்தன் இவ்விரதம் அணுஷ்டித்து
நந்தனிடமிருந்து ராஜ்யம் பெற்றான். நந்தனின் மனைவி அனுஷ்டித்து பிள்ளைப்பேறு
பெற்றாள். குண்டினம் என்ற நகரத்தில்
வசித்த சாருமதி என்ற பெண் இவ்விரதமிருந்து சகல சௌபாக்கியமும் பெற்றாள்.
லஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும்
பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்தபின் வைகுந்தம் சேருவாள்.
எல்லா சுக்லபட்ச வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மியை முறைப்படி பூஜிப்பவர்கள் வாழ்நாள்
முழுதும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அவர்கள் குடும்பம் தழைக்கும்
இந்த விரதக்கதையை படிப்பவர்கள் கேட்பவர்களும்
வரலஷ்மியின் அருளால் தனதான்ய சம்பத்துடன் சௌக்கியமாக வாழ்வார்கள்!
சகலவரும் வரலஷ்மியை வணங்குவோம்! வரம் பெற்று
இன்பமாக வாழ்வோம்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!
திரட்டிகளில் இணைத்து பிரபல படுத்துங்கள்!
படமும் பதிவும் அருமை...
ReplyDeleteநன்றி....
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteamman maathamaana aadi mathaththil nalla pathivu...
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் பின் தொடர்கைக்கும் நன்றி!
Deleteஎங்கள் வீட்டிலும் வரலக்ஷ்மி விரத பூஜை செய்யப் பட்டது.விளக்கமும் படங்களும் நன்று.இன்றைய தினத்திற்கு பொருத்தமான பதிவு
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு நன்றி!
Delete