பத்தினி சமைத்த கோழிக்கறி!
பத்தினி சமைத்த கோழிக்கறி!
ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனது மனைவி சரியான சோம்பேறி! எந்த வேலையும் ஒழுங்காக செய்யமாட்டாள். சரியான தூங்குமூஞ்சியும் கூட. நாள் தோறும் உழவன் காலையில் வயலுக்குச் சென்றுவிடுவான். நண்பகலில் உணவை அவனது மனைவி எடுத்து வருவாள்!அவள்தான் சோம்பேறியாயிற்றே நேரத்துக்கு உணவு எடுத்து வரமாட்டாள்.இதனால் தினமும் சண்டைதான்.
ஒரு நாள் மாலை நேரம் வயலில் இருந்து வீடு திரும்பினான் உழவன். தான் வாங்கி வந்திருந்த கோழியை மனைவியிடம் தந்தான். எனக்கு கோழிக்கறி என்றால் உயிர்! உனக்குத் தெரியுமல்லவா? நாளைக்கு நீ ஒரு படி அரிசி போட்டு சோறு செய். அத்துடன் இந்த கோழியை நன்றாக சமைத்து எடுத்துவா! வழக்கம் போல தாமதம் ஆனால் உன்னை தொலைத்து எடுத்துவிடுவேன் என்று கூறினான் உழவன்.
மறுநாள் காலையில் வழக்கம் போல உழவன் வயலுக்குச் சென்றுவிட்டான். அவன் சென்ற பிறகு படுத்த உழவனுடைய மனைவி நண்பகல் வரை நன்கு தூங்கிவிட்டாள்.ஐயோ! கணவனுக்குச் சாப்பாடு கொண்டு செல்ல வேண்டுமே! சமைப்பதற்கு நேரம் இல்லையே அவன் நன்றாக அடிப்பானே என்று சிந்தித்தாள் அவள்.
கூடைக்குள் ஒருபடி அரிசியைக் கொட்டினாள். அதனுள் உயிருள்ள கோழியை வைத்து நன்றாக மூடி எடுத்துக்கொண்டு கணவனின் வயலுக்குச் சென்றாள். கோழிக்கறி சாப்பிடும் ஆவலில் இருந்த உழவன் நீண்ட நேரமாகியும்சாப்பாடு வரவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்தான். சோம்பேறிக்கழுதை! இன்று உனக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன் என்று கறுவிக் கொண்டான்.
கூடையுடன் அசைந்தாடி வந்த மனைவியை கோபத்துடன் பார்த்தான் உழவன். மாலைப்பொழுதாகிவிட்டது. மனைவி கூடையை இறக்கியதுதான் தாமதம். ஏன் இவ்வளவு நேரம் இனி இப்படி தாமதமாக வருவாயா? என்று நையப்புடைத்தான் உழவன்/
அழுத அவன் மனைவி கோழிக்கறி வேக இவ்வளவு நேரமாகிவிட்டது! உங்களுக்காக கஷ்டப்பட்டு சமைத்த என்னை இப்படி அடித்துவிட்டீர்களே! கணவன் சொல் தவறாத பத்தினி நான் என்பது உண்மையானால் கூடையில் உள்ள சோறு அரிசியாகட்டும் கோழிக்கறி கோழி ஆகட்டும் என்று கத்தினாள்.
கூடையைத் திறந்த உழவன் அதற்குள் அரிசியும் உயிருள்ள கோழியும் இருப்பதை கண்டு மிரண்டு போனான். நீ பத்தினிதான்! இனி உன்னை அடிக்கவே மாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று மன்னிப்பு கேட்டான் மனைவியின் தந்திரம் அறியாமல்!
தன் சூழ்ச்சி பலித்தது கண்டு மகிழ்ந்தாள் மனைவி!
பேராசிரியர் ஜோதியின் சாமர்த்திய கதைகளிலிருந்து பகிரப்பட்டது.
தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment