இந்தியாவின் சிற்பிகளே! இதோ ஓர்நிமிடம்! பாப்பா மலர்!

இந்தியாவின் சிற்பிகளே! இதோ ஓர்நிமிடம்!
   இந்தியாவின் சிற்பிகளே!
   இளைய பாரதங்களே!
   தமிழகத்தின் தம்பிகளே!
   தலைநிமிர்ந்து செவிசாய்ப்பீர் ஓர் நிமிடம்!
 
   பச்சை பசும் பயிர்களிலே
   இச்சையுடன் வளர்ந்திடுமே களை!
   களைஎடுக்கா வயல்
   களை இழக்கும்!
   விளையுள் குன்றி விலைகுறைந்து போகும்!

   விடலைப் பருவமதில் விரட்டி வந்து சேர்ந்திடுமே
   வீணாண பழக்கமெல்லாம்!
   மனம் போன போக்கினிலே நிதம் போனால்
   நிச்சயம் வேதனைதான் மிச்சம்!
 
   வெள்ளைத்தாளினிலே சிந்திவிட்ட மைபோல
   வெள்ளை உள்ளமதில் கள்ளம் சேரலாமோ?
   பூவோடு சேர்ந்திட்ட நாறும் மணக்கும் ஆனால்
   புழுதியிலே கலந்திட்ட சந்தனம்தான் வாசம் வீசுமா?

   கரும்பாய் இனிக்கும் அரும்புகளே!
   எறும்பின் சுறுசுறுப்பை மறந்து
   எருமைகளாய் மாறலாமோ?
  
   பகலவனைக்கண்ட பனி போல
   அகலட்டும் உந்தன் அலட்சியபோக்கு!
   விழலுக்கு இரைத்த நீரைப்போல
   வீணாகிப் போகலாமா உன் வாழ்வு?

   எத்தனையோ செல்வங்கள் விளைந்தாலும்
   அத்தனையிலும் பொன்னுக்கே முதலிடம்
   பூமியிலே!
  
   எத்தனையோமாந்தர்கள் மண்ணில் உதித்தாலும்
   அத்தனைபேரிலும் கற்றவனுக்கே முதல்மரியாதை!

  பள்ளத்தில் தேங்கும் தண்ணீர்போல உன்
  உள்ளத்தில் தேங்கிடாதோ கல்வி?
  புத்தகத்தை பெரும்சுமையாய் கருதிடாதே!
  நித்தமும் நீ அதை வாசிப்பதால் வந்திடுமே உயர்வு!

  ஓர் ஆணி கழன்றியதை ஒதுக்கியதால்
  ஓர் நாடே அடிமையானது!
   சோம்பலதனை விரட்டி சாம்பலாக்கி
  ஆம்பல் பூவென மலர்வீரே!

மக்களின் மனதில் ஈரமிருந்தால்
மாநிலமும் ஈரமாகும்!
மாணாக்கன் உன்னிடத்தே அறிவு
ஊற்றெடுத்தால் மாநிலமும்
 சிறப்பாகும்!
உறக்கம் உன் வாழ்வின் இறக்கம்!
மடி உன்  உயர்வை தடுக்கும் இடி!

மழைக்கு முளைக்கும் காளான்களாய்
மாறிடாமல் மாநிலம் காக்கும்
விழுதுகளாய் மாறிடுவீர்!
கங்குகரை காணாது எங்கும் பொங்கி
எப்போதும் உயர்வினையே எட்டிடுவீர்!

 தீயவனுக்கு உதவினால் தீமையே பலன்! ஈசாப் நீதிக்கதை!

குளிர் காலத்தில் ஒருநாள் ஒரு பாம்பு பனியில் விரைந்து சுருண்டு கிடந்தது. அதன் உயிர் போய்விடுமோ என்ற நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் அவ்வழியே வந்த குடியானவன் ஒருவன் இதனைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அவன் அப்பாம்புக்கு உதவிட நினைத்தான். பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். குடியானவனுடைய உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள உணர்வு பெற்றது. அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய குடியானவன் மார்பைப் பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த குடியானவன் தன் செய்கைக்காக வருந்தினான். பாம்பைப் பார்த்து " ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்றான்.

நீதி} தீயோருக்கு உதவினால் தீமையே கிடைக்கும்!

உங்களுக்குத் தெரியுமா?
 இந்திய அணு அறிவியலின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா.
பலா மரத்தின் தாயகம் இந்தியா.
ஜீன்ஸ் துணியை முதலில் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2