கானிகாபொலியும்! ரெட்டிபாதியும் செட்டிபாதியும்! துணுக்குகள்!

படித்ததில் ரசித்தவை!

“கானிகாபொலி” என்ற ஆங்கிலச் சொல்லை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையானால் ஆங்கில அகராதியில் தேடிப்பாருங்கள். தெரியும். ‘கணக்கபிள்ளை’ என்ற தமிழ் சொல்லே ஆங்கிலேயரிடம் படாதபாடுபட்டு “கானிகாபொலி” ஆகியிருக்கிறது.

‘நம் தந்தை சொல்வதெல்லாம் சரிதான்’ என்று நாம் உணருகிற காலத்தில், ‘நீ சொல்வதெல்லாம் தவறு’, என்று சொல்ல நமக்கொரு மகன் பிறந்துவிடுகிறான்.

மனை எடுக்ககூடாத நிலங்களை முற்காலத் தமிழர்கள் மண்சோதனை மூலமாக நிர்ணயித்தனர். ஒரு முழநீள-அகல குழி தோண்டி மண்ணை வெளியே எடுத்து மீண்டும் அதே மண்ணால் மூடும்போது மண் மிகுந்தால் நல்லதென்றும் சமமாக இருந்தால் தேவலை என்றும் குறைந்தால் தீது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் உயிரினங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு சில ஊர்கள். ஆட்டையாம்பட்டி, ஆட்டுக்காரனூர், மாட்டுவேலம்பட்டி, மாட்டையாம்பட்டி, எருமைப்பட்டி, நரியனூர், குதிரைப்பள்ளம், பொய்மான் கரடு, முதலைப்பட்டி, கரடிப்பட்டி, கீரிப்பட்டி, காக்காய்பாளையம், கோழிக்கால்நத்தம்.

துறவி ஒருவர் தன் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மூதாட்டியொருத்தி ஆசையுடன் கொஞ்சம்திராட்சைபழங்களை அவரிடம் கொடுத்தாள். ஒரு பழத்தை சுவைத்த துறவி, தொடர்ந்து அத்தனை பழங்களையும் உண்டு முடித்தார். மூதாட்டி மகிழ்வுடன் சென்றபின்னர் சீடர் ஒருவர்- குருவே! எதுவானாலும் பகிர்ந்து உண்பதுதானே தங்களின் வழக்கம்? இன்று ஏன் அனைத்தையும் உண்டுவிட்டீர்கள் என்று கேட்டார்.
   “ சீடர்களே! அன்புடன் அந்த மூதாட்டி கொண்டுவந்து தந்த திராட்சைபழங்கள் அனைத்தும் புளிப்பானவை. நீங்கள் யாரேனும் சாப்பிட்டபின் முகம் சுளித்தால் அவர் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று எண்ணி, நானே அனைத்தையும் சாப்பிட்டுவிட்டேன்” என்றார் துறவி.


வடபழனியை ரெண்டாபிரிச்சி ரெட்டிப்பாதி, செட்டிப்பாதி எடுத்துகிட்டாங்கப்பா! என்றார் கோடம்பாக்க சினிமாக்காரர் ஒருவர். ரெட்டிஎன்பது நாகிரெட்டி (வாகினிஸ்டுடியோ)செட்டி என்பது ஏ.வி.மெய்யப்ப செட்டி (ஏ.வி.எம் ஸ்டுடியோ)என்பது அவர் தந்த விளக்கம்.

பணமும் தலைமுடியும் ஒன்றுதான். குறைவாக இருந்தால் வருத்தமாக இருக்கிறது. அதிகமாக இருந்தால் பாரமாக எரிச்சலாக இருக்கிறது.

டாஸ்மாக் வாசலில் இரண்டு குடிமகன்களின் பேச்சு! “நம்ம கொசப்பேட்டை கோயிந்தசாமி போனமாசம் கேரளாவிலிருந்து தங்கத்தை கடத்தி மாட்டிக்கினாம்பா!”
    “அப்பால!”
  “அப்பால அவளையே கண்ணாலம் பண்ணிக்கினான்!”

லீப் வருடம் தவிர மற்றவருடங்களில் பிப்ரவரி மார்ச் இந்த இரண்டுமாத காலண்டர்களும் மார்ச் 26ந்தேதி வரை ஒரே மாதிரியாக இருக்கும்.

கார்டூன்களை முதல் முதலாக தமிழ் பத்திரிக்கையில் வெளியிட்டவர் பாரதியார்.

வாத்தியாரின் அகிம்சை!
 எங்கள் திண்ணைக்கு எதிர் திண்ணையில் ஒரு வாத்தியார் நான்கு மாணவர்களுக்கு டியுசன் எடுக்கிறார். காற்றுவாக்கில் அங்கிருந்து கேட்ட உரையாடல்.
  “ அகிம்சையை வலியுறுத்தியது யார்?”
“தெரியாது சார்!”
“தெரியா.. தா?... இங்கே வா! காதை முறுக்கி பிச்சியெறிஞ்சா, தானா தெரியும்!”

மனைவியின் வற்புறுத்தலால் அதாவது பிரஷர் தாங்க மாட்டாமல் கணவன் வாங்கிக் கொடுப்பதால்தான் பிரஷர்குக்கர் என்று பெயர் வந்தது. #குப்பண்ணாவின் சுயசிந்தனை!

சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு சுவை உள்ளது “சாக்கரின்” ஆனாலும் இதை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. காரணம் பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்படும் செயற்கை இனிப்பு இது. தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுக்குக் கேடு. எறும்புகளுக்கு தெரிவது மனிதனுக்கு தெரிவதில்லை!.

சலித்துப்போனவர்!
வாழ்க்கையே சலித்துவிட்டதய்யா! என்றார் ஒருவர்.
  ஏன்?
‘பின்னே வீட்டுல என் மருமவளுக்கு அரிசிமாவு சலித்து,மைதாமாவுசலித்து, கடலைமாவுசலித்து, ரவைசலித்து, பூந்திமாவு சலித்து... கைசலித்துப்போய்... அட, போய்யா...! என்று அலுத்துக் கொண்டார்.

பல இதழ்களில் படித்ததின் தொகுப்பு!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்தினை கமெண்ட் செய்து திரட்டிக்களில் வாக்களித்தும் பதிவரை ஊக்குவிக்கலாமே! நன்றி!

Comments

 1. நல்ல கருத்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2