ஒலிம்பியாவில் உறங்கும் இருதயம்! தினமலர் கட்டுரை!

ஒலிம்பிக் உற்சாகம் லண்டன் நகரில் இப்போதே கரை புரண்டு ஓடுகிறது. "ஒரு தலைமுறையின் உத்வேகம்' என்ற குறிக்கோளுடன் 30வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 27ல் துவங்குகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவிக்க வீரர், வீராங்கனைகள் தயாராக உள்ளனர். ரசிகர்களோ தடகள சாதனைகளை கண்டு களிக்க ஆவலாக காத்திருக்கின்றனர். அதற்கு முன் ஒலிம்பிக் வரலாற்று அதிசயங்களை வரும் நாட்களில் அறிவோம். பழங்கால ஒலிம்பிக்போட்டிகள் கி.மு., 776 முதல் கி.பி., 393 வரை கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நடந்தன. கிரேக்க கடவுள் "ஜீயசை' கவுரவப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் ஆடையில்லாமல் பங்கேற்க வேண்டும். வெறுங்கால்களில் ஓட வேண்டும். கிரேக்கர்களுக்கு மட்டுமே அனுமதி. போட்டிகளில் பங்கேற்கவோ...பார்க்கவோ பெண்களுக்கு அனுமதி இல்லை என நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. கிரேக்க மண்ணில் ரோமானியர்கள் ஆதிக்கம் துவங்கியதும் ஒலிம்பிக் அழியத் துவங்கியது. கி.பி., 393ல் ஒலிம்பிக் போட்டிக்கு ரோமானிய பேரரசர் தியோடாசியஸ் ஒட்டுமொத்தமாக தடை விதித்தார். ஆயிரத்து 500 ஆண்டுகளுக்குப்பின், ஒலிம்பிக் போட்டிக்கு புத்துயிர் கொடுத்தார் பிரான்ஸ் கல்வியாளர் பியரி டி கோபர்ட்டின். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை 1894ல் நிறுவினார். இவர், நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஒலிம்பிக் பிறந்த கிரீசில் 1896ல் முதலாவது நவீன ஒலிம்பிக்கை நடத்திக் காட்டினார். 1937ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். உடல் லாசேன் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. தனது இருதயம் ஒலிம்பியாவில் இருக்க வேண்டும் என்பது தான் கோபர்ட்டினின் கடைசி ஆசை. இதன்படி ஒலிம்பிக் போட்டிக்கு உயிர் கொடுத்த இவரது இருதயம் ஒலிம்பியாவில் புதைக்கப்பட்டது.முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரீசில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடந்தது. இதில், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் பங்கேற்றன. அமெரிக்க வீரர் ஜேம்ஸ் கானொல்லி டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் முதல் தங்கம் வென்றார். கிரீஸ் மக்கள் போட்டிகளுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அமெரிக்கா 11 தங்கப் பதக்கங்களையும், போட்டியை நடத்திய கிரீஸ் 10 தங்கங்களையும் தட்டிச்சென்றன.கடலில் நீச்சல் போட்டி: ஹங்கேரி வீரர் ஆல்பிரட் ஹாஜோஸ் சிறுவயதாக இருக்கும் போது அவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்து விட்டதால், நீச்சலின் அருமையை உணர்ந்து கொண்டார். அந்த காலத்தில் நீச்சல் போட்டிகளுக்கு நீச்சல் குளம் இல்லை. படகில் அழைத்து சென்று குறிப்பிட்ட தூரத்தில் விட்டுவிடுவார்கள். அங்கிருந்து நீச்சல் அடித்து கரைக்கு திரும்பி வர வேண்டும். 1896ல் நடந்த போட்டியில் 1200 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் திரும்பி கரைக்கு வந்த ஒரே வீரர் ஆல்பிரட்தான். "என் உடல் நடுங்கியது. குளிரில் வெடவெடத்தது.வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால் கரைசேர்ந்தேன்' என்றார் ஆல்பிரட்.மாரத்தான் பெருமை: மாரத்தான் போட்டிகளை அறிமுகம் செய்த கிரீஸ் நாட்டில் நடக்கும் முதல் ஒலிம்பிக் விழாவில், வெற்றியை இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்க அந்நாட்டு ரசிகர்களுக்கு மனம் இருக்குமா? கிரீஸ் வீரர் ஸ்பைரிடான் லூயி அதிவேகமாக ஓடி முதலில் வந்தார். இவருக்கும் அடுத்து வந்த வீரருக்கும் ஏழு நிமிட இடைவெளி. கூடியிருந்த ஒரு லட்சம் பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது.

நன்றி தினமலர்.

டிஸ்கி} தினமலரில் நான் படித்த செய்தி சுவாரஸ்யமாக இருந்தமையால் மற்றவர்களும் படிக்க இங்கே தந்துள்ளேன்! 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2