வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...? தினமணி கட்டுரை!

கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான் என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
"சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே -
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது -
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் - இந்த
நிட்காமிய ஞானம் - என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!
நன்றி: தினமணி

டிஸ்கி} தினமணியில் வந்த கட்டுரையை தட்ஸ் தமிழில் படித்துவிட்டு என்னை தொடர்பவர்களும் அறிந்து கொள்ள பகிர்ந்து கொள்கிறேன்! கவிஞர் வாலிக்கும் சர்ச்சைகளுக்கும் என்றும் பஞ்சமில்லை! இந்த எண்பது வயதிலும் அவர் மீது எழுந்துள்ள சர்ச்சை இது!  என்ன சொல்கிறார் பார்ப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. உங்கள் ஆதங்கம் நியாயமானதே
    மறுப்பதற்கு வாய்ப்பில்லாது போன
    மறைந்தவர்கள் குறித்து சிறுமைப்படுத்திப்பேசுதல்
    அழகல்ல
    நல்ல கட்டுரையை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றிவாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  2. நல்ல கட்டுரையை அறிமுகம் செய்தற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  3. வாலிப கவிஞர் வாலியின் வரலாறு அறிந்தேன் பகிர்வு அருமை

    ReplyDelete
  4. வாலி பணத்துக்காகஎழுதுபவர்.சாவி எழுத்தை தவமாக கொண்டவர்

    ReplyDelete
    Replies
    1. வலைப்பூ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  5. இங்கேதான் முழுமையாக இந்த கட்டுரையை வாசிக்கிறேன் நண்பரே!

    எனது எண்ணத்தை அப்படியே மேலே சிபி பிரதிபலித்திருக்கிறார்!

    ReplyDelete
  6. அறியாத விடயங்கள் பலவற்றை தங்கள் கட்டுறை மூலம் அறிய உதவியதற்கு நன்றி..

    ReplyDelete
  7. ஒப்பிடுவது என்பது ....ம்ஹீம்.... எனக்குப் பிடிக்கவில்லை...
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்...
    நன்றி...

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  8. சாவி ஸாருடன் பழகிய எவருக்கும், அவரின் குணநலன்களை நன்கறிந்த எவருக்கும் கவிஞர் வாலி மேல் கோபம் வருவது நியாயமான ஒன்று. உண்மையில் இப்போது உயிருடன் இல்லாத ஒருவரை அவதூறாக எழுதுவதும். நீங்கள் சொன்னதுபோல அறைந்ததை பெருமையாகச் சொல்லிக் கொள்வதும் அவரது வயதுக்கும் அறிவுக்கும இழுக்குத்தான் சேர்க்கிறது.

    ReplyDelete
  9. வயதாகி விட்டதல்லாவா வாய் தவறி ஏதாவது சொல்லத்தான் செய்வார்கள்.
    நம்முடைய மனம் கவர்ந்தவர்கள் இது போல் நடந்து கொள்வது வருத்த்மளிப்பது இயற்கையே.இது போன்ற சொற்கள் தனது மதிப்பை குறைக்கும் என்பததை வாலி அறியாதது துரதிர்ஷ்டமே!

    ReplyDelete
  10. வந்து கருத்தளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2