Wednesday, July 18, 2012

ஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரிசனம்!

ஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரிசனம்!

பிதுர்களுக்கு உகந்த நாள் அமாவாஸ்யை. இதில் உத்தராயண புண்ய காலத்தில் வரும் தை அமாவாஸ்யையும், தட்சிணாயண புண்ய காலத்தில் வரும் ஆடி அமாவாஸ்யையும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக புண்ணிய நதிகளிலும் தீர்த்தங்களிலும் நீராடி தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுகின்றனர். தென் மாவட்டங்களில் காவிரிக்கரையில் இந்த பிதுர் தர்ப்பணம் வெகு விமரிசையாக நடைபெறும். நதிகள் இல்லாத ஊர்களில் புண்ணிய க்ஷேத்திரங்களில் இந்த பிதுர்கடன்செலுத்துவார்கள்.

   அந்த வகையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சன்னதியில் தங்கி அமாவாஸ்யைத் தர்ப்பணம் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபடுவது காலந்தொட்டு நடந்து வருகிறது. திருவள்ளூரில் எம்பெருமான் சயனக்கோலத்தில் எழுந்தருளி இருப்பது கண்கொள்ளா காட்சி ஆகும்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும் திருவள்ளூர்.
   திருமங்கைஆழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. பிரதி அமாவாஸ்யை தினங்களில் இங்குள்ள ‘ஹிருத்தாப நாசினி’ என்னும் திருக்குளத்தில் நீராடி குளத்தில் பால் சேர்த்தல் வெல்லம் கரைத்தல், உப்பு மண்டபத்தில் பெருமாள் திருப்பாதத்தில் உப்புசேர்த்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபடுதல் விசேஷமானது.

ஸ்தல வரலாறு.
    ஆதிகாலத்தில் புரு புண்யர் என்ற அந்தணர் தனது மனைவியுடன் பத்ரிகா ஆஸ்ரமத்தில் வசித்துவந்தார். அவருக்கு குழந்தை இல்லாமையால் “சாலியங்ஞம்” என்ற யாகத்தை செய்தார். அதன் பலனாக பகவான் அருளால் ‘சாலிஹோத்திரர்’ என்ற பிள்ளையை பெற்றனர்.  பிள்ளை வளர்ந்ததும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் தீர்த்த யாத்திரை சென்றனர். விஷாரண்யம் என்னும் இவ்விடத்திற்கு வந்ததும் சாலிஹோத்திரர் தவம் செய்ய உத்தேசித்து, அன்று காலையில் சேகரித்த நெல்லை சமைத்து நான்கு பாகமாக்கி அதிதியின் வருகைக்காக காத்திருந்தார். அப்போது பகவான் ஒரு கிழ அந்தணர் ரூபத்தில் வந்தார். அவரை சாலிஹோத்திரர் வரவேற்று உபசரித்தார். அவர் அளித்த உணவு போதாமல் நான்கு பாக உணவையும் அந்தணர் உண்டுவிட்டார். மகிழ்ச்சி அடைந்த சாலிஹோத்திரர் ஹிருத்தாப நாசினியின் வடகரையில் ஒரு வருடம் வரை உணவின்றி தவம் செய்தார்.
   ஒருவருடம் முடிந்ததும் முன்போலவே நெல்லை சேகரித்து நான்குபாகமாக உணவு சமைத்து அதிதியின் வருகைக்காக காத்திருந்தார்.பகவானும் கிழவர் ரூபத்தில் வந்து முன்போலவே பசி மிகுதியினால் உணவு முழுவதையும் உண்டுவிட்டு களைப்பு மேலிட படுத்து உறங்க “எவ்வுள்” என்று சாலிஹோத்திரரிடம் வினவினார்.
      சாலிஹோத்திரர் தன் பர்ணசாலையை காட்டி அதில் படுக்குமாறு கூறினார்.அதன்படி தெற்கு தலைவைத்து சாய்ந்து படுத்தார்பகவான். அப்போது சுபசகுனங்கள் தோன்றின.பகவான் தன்னுடைய சுய உருவத்தினை சாலிஹோத்திரருக்கு காட்ட அவர் மகிழ்ந்தார்.பகவானை இங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டிக்கொண்டார்.பகவானும் மகிழ்ந்து இங்கே தங்குவதாக வரமருளினார்.
 ‘எவ்வுள்’ என்று சாலிஹோத்திரரிடம் கேட்டமையால் “திருஎவ்வுள்ளூர்”என்றபெயரில் இந்த க்ஷேத்திரம் வழங்கும் என்றுவரம் தந்தார்.
   பகவான் சாலிஹோத்திரரிடம் வந்து தங்கிய தினம் அமாவாஸ்யை என்பதால் இத்தலம் அமாவாஸ்யை விரதச் சிறப்பு பெற்றது.

   108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான இத்தலம் சென்னையிலிருந்து 54கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ அகோபிலமட பரம்பரை மிராசை சேர்ந்தது.ஸ்ரீ வீரராகவபெருமாள் புஜங்க சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். வசுமதி, கனகவல்லி என்ற தாயார்களிருவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

   சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் பேருந்துகள் திருவள்ளூர் வழியாக செல்லும். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில்கள் திருவள்ளூர் வழியாக செல்லும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.கி.மீ தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஆட்டோ வசதிகள் உண்டு.
   அருமையான திருத்தலமான அமாவாஸ்யை நாயகன் வீரராகவப்பெருமாள் தலமான திருவள்ளூருக்கு சென்று ஒருமுறை வழிபட்டு வரலாமே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்டுகளை தாராளமாக அள்ளி வீசி உற்சாகப்படுத்துங்கள்!

4 comments:

 1. தரிசனம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி!

   Delete
 2. நல்லதொரு நாளில் நல்ல பதிவு...விளக்கமாக...

  பகிர்வுக்கு நன்றி...
  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி! தங்கள் தளம் சென்று படித்துவிட்டுதான் வருகிறேன்! நன்றி தனபாலன்!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...