வைகாசி விசாகத் திருநாள்!
வைகாசி விசாகத் திருநாள்!
உமா கோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித
லலாடகம்
ஹிரண்ய குண்டலம் வந்தே
குமாரம் புஷ்கரஸ்ரஜம்!
முருகன் குமரன் குகனென்று
மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு
என்றருள்வாய்!
பொரு புங்கவரும் புவியும்
பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.
இன்று வைகாசி விசாகத்திருநாள்
முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். பால்குடம், காவடி எடுத்து தமிழ் கடவுள்
முருகனை பக்தர்கள் வழிபடும் சிறப்பான நாள் வைகாசி விசாக நன்னாள்!
சூரபத்மன் தேவர்களை கொடுமைப் படுத்தி இந்திர லோகத்தை
தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தை போக்கும்
படி படைப்புக் கடவுள் பிரம்மனை நாடினர். வேதங்களின் பிறப்பிடமான பிரம்மன் அவர்களுக்கு
அபயம் தந்து, தேவர்களே! உங்களாலோ என்னாலோ சூரபத்மனை அழிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும்
ஆலோசனைப் படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார்.
அது என்ன? என்று அவரை ஆவலோடு நோக்கினர் தேவர்கள்.
சிவகுமாரனால்தான் சூரபத்மனுக்கு
அழிவு என்பது எழுதப்பட்ட விதி! நீங்கள் மன்மதனை நாடுங்கள்! அவனது மன்மத பாணம் நிஷ்டையில்
இருக்கும் சிவனை எழுப்பட்டும். என்றார் பிரம்மா.
தேவர்களும் மன்மதனை நாடி தங்களை காக்க சிவனை எழுப்பும்
படி கூறினர். தன்னுடைய இனத்தவரின் அழிவை தடுக்க தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மன்மதனும்
சிவன் மீது மன்மத பாணம் பொழிய ஒத்துக் கொண்டான்.
மன்மதனின் ஆற்றல் மிக்க பாணங்கள் சிவனை எழுப்பியது.
சிவனின் சுட்டெறிக்கும் பார்வையில் மன்மதன் மாண்டு போனான். அதே சமயம் சிவனின் கண்களில்
இருந்து தோன்றிய ஆறு சுடர்கள் கங்கை நதியில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தன. அங்கிருந்த
ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அந்த
நாளே வைகாசி விசாக நன்னாள்.
பின்னர் கார்த்திகேயன் ஆனதும் சூரபத்மனை அழித்து
தேவயானை, வள்ளியை மணந்து ஆறுபடை வீடுகளில் அருளாட்சி புரிவதும் நாம் அறிந்ததே!
வைகாசி விசாகத்தன்று, அதிகாலையில் நீராடி சுத்தமான
ஆடை உடுத்தி பால் பழம் மட்டும் அருந்தி அல்லது முழு விரதமாக இருந்து விரதத்தை மேற்கொள்ள
வேண்டும்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவண பவ!
என்னும் மந்திரம் உச்சரித்து நாள் முழுதும் ஜெபிக்க வேண்டும்.
திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், போன்ற முருகர் பாடல்களை
பாராயணம் செய்தல் வேண்டும்.
முருகன் ஆலயங்களுக்கு சென்று
விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
மலைக்கோயில்களில் மலையை
வலம் வருதல் சிறப்பாகும்.
வைகாசி விசாக விரதம் மேற்கொள்பவர்களுக்கு
புத்திர தோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க வெற்பை
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிய வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!
ஆறுபடை வீடுகளில் முதல்
படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு குடைவரைக் கோயில். இங்கு முருகன் குடைவரை
சிற்பமாக இருப்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சார்த்தி வழிபடுவார்கள். அங்குள்ள
வேலுக்குத்தான் அபிஷேகங்கள் நடைபெறும்.
ஆறுபடை வீடுகள் அறிவீர்கள்!
ஏழாம்படை வீடு தெரியுமா?
கோவை அருகே உள்ள மருதமலை முருகன் ஆலயம் ஏழாம் படை
வீடு என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் வழிபட்ட முருகர் இவர்.
இரண்டு கரங்களுடன் பழநி முருகனை போல கையில் தண்டத்துடன் இடது கையை இடுப்பில் வைத்தபடி
தண்டபாணியாக காட்சி தரும் இவருக்கு தலைக்கு பின் புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை
அணிந்துள்ளார். தினமும் ராஜ அலங்காரம், விபூதி காப்பு, சந்தன காப்பு அலங்காரத்துடன்
காட்சி தருவார் மருதமலை முருகன்.
வைகாசி விசாக நன்னாள் முருகர்
ஆலயங்களில் விசேசமாக கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் முருகர் ஆலயங்களுக்கு சென்று
வழிபட்டு இறையருள் பெறுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சிறப்பான நாளில் சிறப்பான பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...
ReplyDelete