வீட்டை நகர்த்தி வைக்கிறார்கள்! கோவையில் அதிசயம்!


 கோவையில், முப்பது ஆண்டு பழமையான கட்டடம், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, அப்படியே பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில் இருக்கும் வீட்டை, எவ்வளவு தூரத்திலும் கொண்டு சென்று அமைத்து விடும் வசதிகள் உள் ளன. ஆனால், நம் நாட்டில் அத்தகைய வசதிகளும், சாத்தியக்கூறுகளும் குறைவு. ஆனாலும், வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தவோ, சிறிது தூரம் நகர்த்தவோ முடியும் என்ற நிலையை, சமீபத்திய தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளன.ஹரியானாவை சேர்ந்த பொறியாளர்கள், ஜாக்கி மற்றும் சிறிய ரக ரயில் வீல் பயன்படுத்தி, ஒரு கட்டடத்தை உயர்த்தவோ, நகர்த்தவோ செய்து வருகின்றனர். இம்முறை, இந்தியாவின் பல நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு, முருகன் மில் அருகே வசிப்பவர் தங்கவேலு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமான வீட்டை, 50 அடி தூரத்துக்கு பின்நோக்கி நகர்த்தும் பணி, முடியும் தருவாயில் உள்ளது.
இது குறித்து, பணியை மேற்கொண்டு வரும் டி.டி.பி.டி., நிறுவன நிர்வாக இயக்குனர் சுசில் ஷிசோடியா கூறியதாவது:
முன்னோர் கட்டிய வீடுகளில், நவீன உத்திகளை பயன்படுத்தி, தேவையான மாற்றங்கள் செய்தால், வீட்டின் ஜீவன் மாறாமல் இருக்கும். பழைய வீடுகளை, உயர்த்துவது, சிறிது தூரம் நகர்த்துவது போன்ற பணிகளும் அத்தகையது தான். முதல்முறையாக ஹரியானாவில் இத்தகைய முயற்சியை மேற்கொண்டோம். அந்த முயற்சியில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, இந்தியாவின் பல நகரங்களிலும் செய்து வருகிறோம்.தற்போது கோவையை சேர்ந்த தங்கவேலுவின் பழைய வீட்டை, 50 அடி தூரம் பின்னோக்கி நகர்த்தும் பணியை, கடந்த பிப்., மாதம் துவங்கினோம். 400 டன் எடை கொண்ட 2,400 சதுரடி பரப்பிலான வீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளை பயன்படுத்தி, நகர்த்தும் பணியில் ஈடுபட்டோம். தற்போது, வீடு நகர்த்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.கட்டடத்தை நகர்த்திட, எலக்ட் ரிக் வயரிங், பிளம்பிங் சிஸ்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களை அப்புறப்படுத்தவில்லை. வீட்டின் பிடிமானத்துக்காக, ஜன்னல்களில் செங்கல் கட்டு கட்டப்பட்டுள்ளது. இதை, பணி முடிந்த உடன் இடித்து, மீண்டும் பழைய நிலையை ஏற்படுத்தி விடுவோம். பணி துவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களை கொண்டு, 35 அடிவரை நகர்த்தியுள்ளோம். இம்மாத இறுதியில் வீடு முழுமையாக பின்னோக்கி நகர்த்தப்பட்டு விடும். பின், தரைத்தளத்தை மட்டுமே மீண்டும் சரிசெய்ய வேண்டும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், முன்னோர் கட்டிய, வாழ்ந்த வீடுகளை அப்படியே பாதுகாக்க முடியும். இவ்வாறு, கூறினார்.


வீடு நகர்த்த ஆகும் செலவு ரூ.20 லட்சம்

பின்நோக்கி நகர்த்தப்படும் தங்கவேலுவின் வீடு, தரைத்தளம், முதல் தளம் என இரு தளங்கள் கொண்டது. மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு பின்புறம், அவருக்கு சொந்தமான காலியிடம் நிறைய இருக்கிறது. "வீடு, ரோட்டின் முன்புறமும், காலியிடம் அதற்கு பின்புறமும் இருப்பதால் தனக்கு பயன் குறைவு' என்று கருதிய தங்கவேலு, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, வீட்டை 50 அடி தூரத்துக்கு பின்நோக்கி நகர்த்த விரும்பினார். அவரது திட்டப்படி, பணி மேற்கொண்ட பொறியாளர்கள், வீட்டை நகர்த்தி வருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடி தூரத்துக்கு நகர்த்தப்பட்டு விடும். அதாவது, வீட்டின் உரிமையாளர் விரும்பியபடியே, பிரதான சாலையோரம் அவருக்கு காலியிடம் கிடைத்து விடும். அதை அவர், தான் விரும்பியபடியே, வணிக உபயோகத்துக்கு பயன்படுத்த முடியும். வீட்டை நகர்த்தும் இந்த பணிக்கு மொத்தம் ரூ.20 லட்சம் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
.                                                                                                                                                                                      நன்றி: தினமலர்

Comments

  1. "வீட்டையே தூக்கிட்டாங்க" என்பது சரியாப் போச்சி...!

    ReplyDelete
  2. தொழில் நுட்ப வளர்ச்சி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2