மனதை பாதித்த மரணங்கள்!


மனதை பாதித்த மரணங்கள்!

மரணம்! நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்ற கருத்துக்கள் ஒவ்வொரு மரணத்தின் போது சொல்லப்பட்டாலும் மரணங்கள் என்னவோ நம் மனதை பாதிக்கவே செய்கின்றன. பத்து தினங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்த நண்பர் ஒருவரின் மரணம் இந்த கட்டுரையை எழுத தூண்டியது. இது அவரது மரண அஞ்சலியாக அப்போதே எழுதி இருக்க வேண்டியது. ஆனால் முடியவில்லை. இன்று அவரது தசாஹம்.(கருமாதி). சென்று வந்த பின் மீண்டும் என் மனதை பாதித்த மரணங்களை அசை போடுகிறேன்.
   சிறு வயதில் மரணங்கள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. ஐந்தாவது ஆறாவது படிக்கும் சமயம், தலைவர்கள் இறந்தால் ஒருநாள் லீவு என்ற வகையில் ஒருவித சந்தோஷமே நிலவி வந்தது. நான் ஏழாவது படிக்கையில் முதல் முதலில் கூடப்படித்த மாணவி ஒருவள் இறந்தபோது வருத்தமாக இருந்தது. அது பற்றி சரவணன் மீனாட்சி பதிவில் பார்த்தோம்.எம், ஜி. ஆர் இறந்தபோது கூட ஒரு நாள் லீவு என்றுதான் தோன்றியது. அப்படி விளையாட்டாய் சென்று கொண்டிருந்த போது. 1991ல் தமிழகத்தில் பிரசாரத்திற்கு வந்த ராஜிவ்காந்தி ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவைத்து கொல்லப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ராஜிவை ஒரு ஹீரோவாக நான் எண்ணியிருந்தேன். வருங்கால இந்தியாவை குறித்த ராஜிவின் திட்டங்கள் தேர்தல் பிரசாரத்தில் கேள்விப்பட்டதில் பிடித்துப் போய் இருந்தது. அவர் தமிழகத்தில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் சாகவில்லை. எப்படியும் பிழைத்து வந்துவிடுவார் என்று கூட நினைத்தேன் அப்போது.
    நான் பிளஸ் டூ முடித்த பின் நடந்த மரணங்களில் முதலில் என் அத்தை பாட்டியினுடையது. முதல் முதலாக என் உறவினர் ஒருவரின் சாவு. தகவல் வந்ததும் என் தாத்தாவிற்கு தகவல் சொல்ல மாநெல்லூருக்கு அனுப்பப் பட்டேன். அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்துவிட்டேன். சாவு வீட்டிற்கு செல்லவே இல்லை. அங்கே செல்ல ஒருவித பயம் இருந்தது அப்போது. அதற்கப்புறம் நடந்த காரியங்களை இழுத்து போட்டு செய்தாலும்  சாவு வீட்டிற்கு செல்ல வில்லை. அதே ஆண்டு என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பன் என்னைவிட வயதில் சிறியவன் டில்லி பாபு மரணித்தான். விரை வீக்கம் என மருத்துவ மனை சென்றவன் அறுவை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். முன் நாள் கூட ஒன்றாக விளையாடிவிட்டு சென்றான். ஒரு போட்டியில் கடைசி கட்டத்தில் ரன் அவுட் ஒன்று. அதை செய்தவன் அவன். எதிரணி வீரன் ஒத்துக் கொள்ளவில்லை. மேட்ச் அப்படியே நின்றது. அது ரன் அவுட் தான். நாம் தான் ஜெயித்தோம். எதிரணிக்கு பந்தயப்பணம் கொடுக்காதே! என்று கூறிச் சென்றவன் பிணமாகி விட்டான். அது மனதை என்னவோ செய்தது.
  அதற்கப்புறம் என் அம்மாவழி தாத்தா, பாட்டி, என் அப்பாவழி தாத்தா பாட்டி என நிறைய மரணங்கள் சந்தித்தாலும் சொந்தத்தில் நடந்த மரணங்களை விட வெளியார்களுடைய மரணங்கள் மனதை என்னவோ செய்தன.


ஒரு மதிய வேளையில் இங்கிலாந்து இளவரசி டயானா விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார் என்ற செய்தியும் மாலையில் இறந்து போனார் என்ற செய்தியும் மனதை என்னவோ செய்தன. அவரைப் பற்றி எத்தனையோ சர்ச்சைகள் இருந்தாலும் பிறரை நேசிக்க கூடிய மனிதராக ஆடம்பரம் இல்லாத எளிமையான மனிதராக அவரை ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தேன். அவர் மரணித்த தினத்தன்று பொன்னேரி சென்று தமிழ் பேப்பர் கேட்டபோது அனைத்து கடைகளிலும் விற்று தீர்ந்து இருந்தது. அதே போல்தான் சில்க் ஸ்மிதாவும். இவர் தற்கொலை செய்து இறந்து போனது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் அவரை ஊடகம் வாயிலாக அறிந்ததின் தாக்கம் அவரது மரணம் என்னவோ செய்தது. அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பிரதியில் அவருக்கு அஞ்சலி தெரிவித்தபோது சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.ஆனால் எனக்கு ஒரு திருப்தி.
    ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன டி.எம்.சி பாலயோகி, நடிகை சௌந்தர்யா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பாரதிய ஜனதாவின் பிரமோத் மகாஜன் நம்மவர் படத்திற்கு இசையமைத்த மகேஷ்,எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர் சுஜாதா, ஆகியோரின் மரணங்கள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்தன. ஏதோ ஓர் இனம் புரியா  உணர்வு அப்போது
ஆட்டிப்படைத்தது. உடன் கிரிக்கெட் விளையாடிய நண்பன் பாலாஜி என்ற பாலாவின் மரணம் நான் எதிர்பாராத ஒன்று. தலைவலி! தலைவலி என்று அடிக்கடி கூறுவான். அது மூளையில் கட்டி என்று யாருக்கும் தெரியாமல் போனது. பத்தாவது பெயில் ஆன அவன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவன் இரவு பிணமாக திரும்பி வந்தான். அதிகாலை மூன்று மணிக்கு கதவைத் தட்டி அழுதபடி நண்பன் வெங்கடேசன் தகவல் சொன்ன போது அப்படியே ஸ்தம்பித்தேன். அவனைப் போல ஒரு நண்பன் இனி கிடைக்க மாட்டான்.இதற்கடுத்து காலையில் பார்த்த என் அம்மாவுடன் பணியாற்றிய சக ஊழியர் போரியப்பன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே இடத்தில் விபத்தில் சிக்கி இறந்த போது ஏற்பட்டது. மனிதகாயம் நிலையற்றது என்று உணர வைத்தது. பஞ்சர் கடை ஒன்றில் அவர் வண்டிக்கு பஞ்சர் போட நான் காற்று பிடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினேன். பஞ்சர் ஒட்டிக் கொண்டு திரும்பும் சமயம் லாரி மோதி இறந்து போனார் அவர்.
   அதே போலத்தான் கவரைப் பேட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்த திரு நாராயண மூர்த்தியின் மரணமும். அந்த பள்ளியில் கொஞ்ச காலம் தற்காலிக ஆசிரியராக  இருந்த போது பழக்கமானார் அவர். மிகவும் ஜாலி டைப். நான் வண்டி வேகமாக ஓட்டுவதாகவும் டிவிஎஸ் எக்செல் இவ்வளவு வேகமாக ஓட்டக் கூடாது என்று அறிவுரை கூறுவார். லேட்டான கூட பரவாயில்லை! நிதானமா வாய்யா! என்பார். ஒரு நாள் அவர் கல்யாணம் ஒன்றுக்கு திரும்பி வரும் போது காரனோடை அருகே விபத்தில் சிக்கி இறந்து போனார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது. அவரது இறப்புக்கு சென்ற போது வந்திருந்த மாணவர் கூட்டமும் உறவினர் கூட்டமும் அவரது உயர்வினை காட்டியது. அவரது சிறிய பெண் கண்ணீரோடு அழுத காட்சி கண் முன் நின்றது.
    அடுத்த மரணம் என் தங்கையின் பெண் சர்மிதா மரணம். பிறந்து ஆறே மாதத்தில் இதய வால்வு கோளாறால் இறந்து போனாள். பிறந்ததில் இருந்தே சதா அழுது கொண்டே இருந்த குழந்தை. முதலில் காரணம் தெரியவில்லை.ஐந்தாவது மாதத்தில் தான் இதயவால்வு பிரச்சனை என்று அறிந்தார்கள். அதற்கு அறுவை சிகிச்சை செய்தாள் போதும் பயமில்லை என்றனர். திடிரென சளிக் காய்ச்சல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் சென்னை காமகோடி ஹாஸ்பிடலில் ஒரு மாதம் சிகிச்சை செய்து அங்கு பணம் செலவழிக்க முடியாமல் எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்த்து அங்கு ஆபரேசன் செய்த பின் ஆறு மணி நேரத்தில் உயிரை விட்டது குழந்தை. இதை என்னால் ஜீரணிக்கவே
முடியவில்லை. அந்த குழந்தை மருத்துவ மனையில் இருந்த ஒன்றரை மாதங்களும் எங்களுக்கு நரகமாய் இருந்தது. திடீர் திடீர் என அபாய கட்டத்திற்கு செல்லும் பின்னர் மீளும். இப்படி இருந்து ஒரு நம்பிக்கை கொடுத்து சட்டென இறந்து போனது அந்த குழந்தை. அப்போது என் தங்கையின் அழுகைக்கு என்னால் சமாதானம் செய்ய முடியாமல் போனது.
  இதெல்லாவற்றையும்விட இரண்டு நாள் தூக்கம் வர விடாமல் செய்தது நண்பன் சந்துருவின் மரணம். திருமணம் ஆகி எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பின் குழந்தை உண்டாகி சீமந்த கல்யாணம் முடிந்த மாலையில் இறந்து போனான் சந்துரு.  கல்கத்தா நெடுஞ்சாலை விரிவாக்கம் இன்னுமொரு உயிரை பலி வாங்கி விட்டது.
    இது என் நண்பனின் கவனக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்றாலும் இரண்டு நாள் தூக்கம் வரவில்லை சீக்கிரத்தில். சீமந்தம் நடந்த மண்டபத்தில் கணக்கு செட்டில் செய்து விட்டு வெளியே வந்தவன் சாலையை கடக்க முயன்ற போது லாரி எமனாகி விட்டது.
   லாரி அருகில் வருகையில் சாலையை கடந்து விடலாம் என்ற தவறான கணக்கு அவன் கணக்கை முடித்து விட்டது. அவனது மனைவிக்கும், ஒரே பிள்ளையை பறி கொடுத்த அவனது பெற்றோருக்கும் என்ன ஆறுதல் சொல்வது. பிறக்கும் அவனது குழந்தைக்கு தந்தையை பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போயிற்றே! இந்த குழந்தையை எல்லோரும் தூற்றுவார்களே! இவ்வாறு பல சிந்தனைகள் என் மனதை குழப்பியதில் தூக்கம் இழந்தேன்.
   இப்படி மரணங்கள்! நம் மனதை மரணித்து மறக்கடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்வது? இதுவும் கடந்து போகும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. சர்மிதா மரணம் நெஞ்சை உலுக்கியது...

    ReplyDelete
  2. மரணத்தால் எம் மனதில் ஏற்படும் வலிகளும் மறக்க
    முடியாமல் தொடரும் அந்த நினைவுகளும் இன்றும்
    பெருகிக்கொண்டே போகிறது குறிப்பாக சாலை விபத்துக்கள்
    அதிகமாகிக் கொண்டே போவது பெரும் துன்பத்தையே
    தருகின்றது .இன்றும் அதன் வலி உணர்ந்து நிற்கின்றோம்
    சகோதரரே .ஒரே வீட்டில் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள்
    இறந்த காட்சியைக் கண்டுவிட்டு வந்தோம் இன்னமும்
    அக் காட்சியே கண்ணுக்குள் நிற்கின்றது :((((

    ReplyDelete
  3. சர்மிதா மரணம் இதயத்தைக் கணக்கச் செய்கிறது அய்யா

    ReplyDelete
  4. manathai kalanga seythathu..

    ReplyDelete
  5. எதிர்பாரா மரணங்கள் மனதை கலங்க அடிக்கின்றன. மனம் படும் பாட்டை அழகா சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  6. எல்லாம் கடந்து போகும், காலம் தனது கடமையை செவ்வனே செய்கிறது.

    ReplyDelete
  7. யாருடைய மரணமாயிருந்தாலும் சில நிமிடங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கிறது.... ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் நாம்.... காலம் சென்று கொண்டேதான் இருக்கிறது....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2