உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 14
உங்களின் தமிழ் அறிவு எப்படி?
பகுதி 14
கடும் காய்ச்சல் சமயம் பதிவிட்ட பிறகு மூன்று வாரங்களாக
இந்த பகுதியை தொடர இயலவில்லை! காரணம் வேலைப் பளு மட்டுமல்ல! நல்ல தமிழினை தேட புது
புது தகவல்களை அளிக்க வேண்டும் சிறப்பாக பதிவிட வேண்டும் என்பதுவும் தான்.
இடைப்பட்ட காலத்தில் என்னை சந்தித்த நமது வலைப்பூ
வாசகரும் உறவினருமான திரு மணிகண்டன். என்ன அண்ணா! தமிழ் அறிவு பதிவே காணலையே என்றார்.
அப்போதுதான் இந்த பதிவின் முக்கியத்துவம் புரிந்தது.
நிறைய பேர் விரும்பும் இப்பதிவை தொடர்ந்து
சிறப்பாக தர வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.
அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்துள்ளேன். இன்றைய பகுதியில் வழு- வழுவமைதி பற்றியும்
ஒரு சுவையான இலக்கியமும் காணப்போகிறோம்.
வழுவும் வழுவமைதியும்.!
வழு என்றால் பிழை! பிழையாக பேசுதலும் எழுதுதலும்
வழுவாகும். வழா நிலை என்பது இலக்கண முறைப்படி அதாவது பிழையின்றி பேசுதலும் எழுதுதலும்
ஆகும்.
வழுவிற்கு, இலக்கண முறையின்றி
பேசுதலும் எழுதுதலும் வழுவாகும் என்ற இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இது ஏழுவகைப்படும்.
திணைவழு, பால் வழு, இடவழு,
காலவழு, வினா வழு, விடைவழு, மரபு வழு என ஏழு வகை வழுக்கள் உள்ளன.
1. விஜயதேவி வந்தது. விஜயதேவி என்னும் உயர்திணை வந்தது
என்னும் அஃறிணை வினை கொண்டு முடிந்ததால் திணை வழு ஆயிற்று.
2. கோபாலன் வந்தாள். ஆண்பால் பெயர் பெண்பால் வினை கொண்டு
முடிந்ததால் பால்வழு ஆயிற்று.
3. நீ வந்தான். முன்னிலைப் பெயர் படர்க்கை வினை கொண்டு
முடிந்ததால் இடவழு ஆயிற்று.
4. நேற்று வருவான். நேற்று என்னும் இறந்தகாலப் பெயரோடு
வருவான் என எதிர்கால வினை மயங்குவதால் கால வழுவாயிற்று.
5. ஒருவிரலைக் காட்டி சிறிதோ பெரிதோ என வினவுவது வினா
வழு ஆகும். பல விரல்களை காட்டி வினவினால்தானே சிறிது பெரிது பிரிக்க முடியும். எனவே
இது வினா வழு.
6. தூங்கி எழுந்தாயா என்று வினாவிற்கு சாப்பிட்டு படுத்தேன்
என்று கூறுவது விடை வழு ஆகும். வினாவிற்கு ஏற்ற விடை கூறாமல் மாற்றி கூறியதால் விடை
வழு ஆயிற்று.
7. குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். குயில் கூவும்
என்பதே மரபு. கத்தும் என்று கூறியது மரபு வழு ஆனது.
வழுவமைதி;
இலக்கண முறையின்றி அமைந்தாலும் ஏதேனும் ஒரு காரணம்
கருதி இலக்கணமுடையதாக ஏற்றுக் கொள்வது வழுவமைதி என்று அழைக்கப்படும்.
உவப்பு,
உயர்வு, சிறப்பு, சினம், காரணமாக திணை வழு, பால் வழு, வழுவமைதியாகும்.
என் அம்மை
வந்தாள் என ஒரு பசுவை அழைப்பது உவப்பின் காரணமான வழுவமைதி.
செல்வன்
வந்தார். என மரியாதை நிமித்தமாக உயர்வின் காரணமாக ஆண்பால் பெயர் பலர்பால் பெயர் கொண்டு
முடிவதும் பால் வழுவமைதி. இதே போன்று காலவழுவமைதி, இடவழுவமைதி, மரபு வழுவமைதியும் உண்டு.
கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்று பாரதி
பாடியது மரபு வழுவமைதி ஆகும்.
இன்னும்
பல இலக்கணங்களை பிறிதொரு பதிவில் காணலாம்.
இப்போது
இலக்கிய சுவையில் நுழைவோம்.
புறநானூறு
பாடல் ஒன்று
பல்சான்
றீரே பல்சான் றீரே!
கயன்முள்
ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின்
மூப்பிற் பல் சான்றீரே!
கணிச்சிக்
கூர்ம்படை கடுந்திற லொருவன்
பிணிக்குங்
காலை யிரங்குவீர் மாதோ
நல்லது
செய்த லாற்றீராயினும்
அல்லது
செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு
முவப்ப தன்றியும்
நல்லாற்றுப்
படூஉ நெறியுமா ரதுவே
நரிவெரு உத்தலையார்.
பலராகிய
சான்றோரே! மீனின் முள்ளைப் போன்று நரை முதிர்ந்த முடிகளையும் சுருக்கம் விழுந்த கன்னங்களையும்
உடைய வயது முதிர்ந்த பல் சான்றீரே! மழு போன்ற கூர்மையான ஆயுதம் ஏந்திய வலிமையான எமன்
உங்களை பீடிக்க வருகிறான். இப்போதாவது இரங்குங்கள். நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல்
செய்யாதீர்கள். எல்லாரும் புகழும் செயல் இதுவல்ல என்றாலும் நல்ல நெறி இதுவே! கெடுதல்
செய்வதை விட்டு விடுவீர்!
இதில்
வந்துள்ள உவமைகள் என்னை கவர்ந்தன. உங்களை கவர்ந்தது எது? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!
நன்றி!
விளக்கங்கள் அருமை...
ReplyDeleteஇது போல் தொடர வாழ்த்துக்கள்...
theriyaatha aazhangal ...
ReplyDeletetheriyapaduthiyatharku nantri sako..!