உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15


அன்பான வாசகர்களே! சென்ற பகுதியில் வழுவும், வழுவமைதியும் குறித்து பார்த்தோம்.உங்களின் பாராட்டுதல்கள் எனக்கு ஊக்கம் அளித்தன. இது போன்று தொடருமாறு பதிவுலகத்தின் பூஸ்ட் எனர்ஜி தரும் அன்பர் திரு திண்டுக்கல் தனபாலன் கூறியிருந்தார்.
    விளையாட்டாக இந்த பகுதியை ஆரம்பித்து மேலோட்டமாக சில பகுதிகள் எழுத ஆரம்பித்தபின் இதற்கு வரும் ஆதரவினால் இப்போது கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் இலக்கியம் என ஆழமாக சென்று கொண்டிருக்கிறது நமது பகுதி. இன்று நாம் இரட்டைக் கிளவி மற்றும் ஒருபொருட் பன்மொழி பற்றியும் இலக்கிய சுவையும் காண இருக்கிறோம்.
     பத்தாவது படித்த காலத்தில் இந்த இரட்டை கிளவி பற்றி படித்திருப்பீர்கள். இது அனைவருக்கும் சென்றடையும் வகையில் கவியரசு வைரமுத்து ஜீன்ஸ் பட பாடலில் சல சல இரட்டைக் கிளவி என்று பாடல் எழுதியிருப்பார். அதையும் மறந்து போனவர்கள் இப்போது அறிந்து கொள்ளுங்கள்!
    கிளவி என்றால் சொல் இதை முதலில் அறிந்து கொள்வோம். ஏதோ முறுக்கு விற்கும் கிழவி எழுத்துப் பிழை என்று எண்ணிவிட வேண்டாம்.
   இரட்டைக் கிளவி என்பது  பிரிக்க முடியாத இரட்டைச் சொற்களாய் ஒருதலைப்பட்டு நின்று வினைக்கு அடைமொழியாக குறிப்புணர்த்தி வருவது ஆகும். இது இலக்கணம். இது சற்று குழம்பும். இப்போது விளக்கம் பார்ப்போம்.
  இரட்டைக்கிளவி இரட்டை சொல்லாகவே வரும்   (எ.கா) சலசல, மழுமழு
  பிரித்தால் பொருள் தராது   எ.கா பளபள என்ற சொல்லை பிரித்து பள என எழுதினால் பொருள் இல்லை அல்லவா?

இரட்டைக் கிளவிக்கு சில எடுத்துக் காட்டுக்கள்
  நீர் சலசலவென்று ஓடியது.
  மரம் மடமடவென முறிந்தது
  சட்டை பளபளவென்று இருந்தது.
  மழுமழுவென்று சவரம் செய்திருந்தான்.
  வளவளவென்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதெல்லாம் இரட்டைக் கிளவிகள்.

அடுத்து ஒருபொருள் பன்மொழி!

பொருள் சிறப்புக்காக ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் வருவது ஒரு பொருள் பன்மொழி.
  (எ.கா) ஓங்கி உயர்ந்த மரம். இதில் உயர்ந்த, ஓங்கி இரண்டும் ஒரே பொருளை தருவன அதாவது உயரமான என்ற பொருளை தருவன. ஆனாலும் மரத்தின் சிறப்பிக்க சேர்ந்து வந்ததால் ஒருபொருட் பன்மொழி ஆயிற்று.



இனி இலக்கிய சுவை!

கவி காளமேகம் இரு பொருள் பட எழுதுவதிலும் சொல் கொடுத்த உடனே எழுதுவதிலும் வல்லவர். திருமலைராயன் மன்னர் இவரை ஆதரித்தார். ஒரு சமயம் அவையில் காளமேகத்தை கேவலப்படுத்தும் நோக்கில் செருப்பு என தொடங்கி விளக்குமாறு என முடியுமாறு ஒரு பாடல் எழுத சொன்னார்களாம் சக புலவர்கள் விடுவாரா காளமேகம்.
   செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல-மருப்புக்குத்
தண்தேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே!

என்ற அழகிய பாடலை பாடி முடித்துவிட்டார்.

செருப்புக்கு  செரு+புக்கு  செரு என்றால் போர்க்களம். புக்கு என்றால் புகுந்து என்றும்
விளக்குமாறு என்பதை விளக்கும்+ ஆறு – விளக்கமாகச் செல்லும் வழி என்றும் அமைத்து பாடி அனைவரையும் மூக்கில் விரல் வைக்க வைத்து விட்டார் காளமேகம்.

பொருள்:  போரில் எதிரிப்படை வீரர்களை துன்பப்படுத்தும் மலைக்குத் தலைவனாகிய வேலேந்திய முருகனை நான் அடைய தாமரையில் இருக்கும் வண்டே நீ வழி காட்டு! என்று ஒரு தலைவனை அடைய தலைவியின் கூற்றாக இந்த பாடலை அமைத்துள்ளார் காளமேகம்.


   அருமையான பாடல் அல்லவா?

மீண்டும் அடுத்த பகுதியில் பார்ப்போம்! உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. எதை சொன்னால் (ஜீன்ஸ் படம்) ஞாபகம் வரும் என்பதை சரியாக சொன்னீர்கள்... தங்கள் தளம் வீட்டில் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்பதையும் இன்று சொல்கிறேன்... நன்றிகள் பல...

    தமிழின் சிறப்புக்களை, சுவைகளை தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழமுதம் என்று இதைத்தான் சொல்வார்களோ. உங்கள் பதிவிற்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  3. புலமை கண்டு பதிவு கண்டு வியந்தேன் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2