ராமதாஸுக்கு ஆப்பு வைத்த போட்டோகிராபர் சார்லஸ்!

தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது என்ன மதுரை சம்பவம்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு இருக்கும், உயிரைக் கொடுத்து படம் எடுத்த ஒரு புகைப்படக் கலைஞரால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் அது.
அந்த புகைப்படக்கலைஞரின் பெயர் சார்லஸ்.
மொத்தத்தில் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்கொலையை நடுங்கவைக்கிறது என்று சொல்கிறார்.
கடந்த 2004ம் வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக ராமதாஸ் சில கடுமையான கருத்துக்களை கூறியிருந்தார், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமதாஸ்க்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர்.
மதுரை பார்லிமென்ட் தொகுதிக்கான பிரச்சாரத்திற்கு மதுரை வந்த அவர், தல்லாகுளம் பகுதி ஒட்டலில் இருந்து கிளம்பிவரும் வழியில், நெல்பேட்டை அண்ணாசிலை அருகே கறுப்புக்கொடி காட்டுவது என ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.
இதை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர் சார்லஸ் தான் சார்ந்த வாரப்பத்திரிகைக்காக படம் எடுப்பதற்காக அங்கு போய் ரசிகர்களோடு காத்திருந்தார்.
இரவு 8 மணிக்கு ராமதாஸ் வாகனம் வரும்போது ரோட்டை மறித்து கறுப்புக்கொடி காட்டினர்.
அமைதியாக கறுப்புக்கொடி காட்டிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அங்கு இருந்து சென்றிருப்பார்கள், ஆனால் அதற்குள் யார் "சிக்னல்' கொடுத்தார்களோ தெரியவில்லை? சபாரி உடையணிந்த ராம்தாஸின் பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து ரசிகர்களை மிருகத்தனமாக தாக்கினர்.
இதனை வாகனத்திற்குள் உட்கார்ந்தபடி ராமதாஸ் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை.
எதற்கு இந்த கொலைவெறி தாக்குதல் என்று பதைபதைப்புடன் சார்லஸ் தனது கேமிராவை பட, படவென இயக்க ஆரம்பித்தார்.
கேமிரா பிளாஷின் வெளிச்சம் தங்கள் மீது பட்டதும் ரசிகர்களை விட்டுவிட்டு, போட்டோகிராபர் சார்லஸ் மீது பாய்ந்தது அந்த சபாரி அணிந்தவர்களின் கூட்டம்.
அனைவரது எண்ணமும் கேமிராவை பறித்து உடைத்து நொறுக்குவதிலேயே இருந்தது. இதனை உணர்ந்து கேமிராவை மார்போடு இறுக்கி அணைத்தபடி உட்கார்ந்து கொண்டார். கூட்டத்தில் ஒருவர் கோபம் கொண்டு கையில் வைத்திருந்த நீளமான டார்ச் லைட்டால் தலையை நோக்கி ஒங்கி அடித்தார், சார்லஸ் கையைக் கொண்டு தலையை மறைக்க, அடி கைவிரல்களில் இறங்க வலியும், ரத்தமும் பெருகியது.
மேலும் தட,தடவென சில, பல அடிகள் அடித்த கூட்டம், ஓடிப்போய் ராமதாஸ் வந்த வேனில் ஏறிக்கொள்ள, வேன் அங்கிருந்து கிளம்பியது.
ரத்தம் சொட்ட, சொட்ட அடிபட்ட ரஜினி ரசிகர்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு சென்றனர். தனியாளாக இருந்த சார்லஸ், பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு தானாகவே போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
ராமதாஸ் வேன் முன்பாக ரஜினி ரசிகர்கள் கறுப்பு கொடி காட்டினர் என்று மறுநாள் சாதாரணமாகவே அனைத்து நாளிதழ்களிலும் செய்தி பதிவானது.
இதனால் இன்னும் வேதனை அதிகமடைந்த சார்லஸ் பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்ததுடன் நடந்த சம்பவத்திற்கு சாட்சியான படங்களையும் வெளியிட மறுநாள் தினமலரில் பெரிதாக பிரசுரமானது.
கொந்தளித்துப் போன ரஜினி ரசிகர்கள் ராமதாஸ்க்கு எதிராக தமுக்கம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்தின் உதவியாளர் சத்தியநாராயணன் பங்கேற்று அடிபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ரசிகர்களை சென்னைக்கு அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் சம்பவம் தொடர்பான படங்கள் எடுத்த போட்டோகிராபர் சார்லசைசயும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், பிறகு அது நடக்காமலே போய்விட்டது.
ரஜினி ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செசய்யப்பட்டது.
ஆனால் ராமதாஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
வழக்கு விவரங்கள் கோப்பில் கட்டப்பட்டு பரண் மீது தூக்கிபோடப்பட்டது.
2011ம் வருடம் ராமதாஸ் அதிகாரம் குறைந்த போது அவரது இந்த மதுரை சம்பவ வழக்கு பரணில் இருந்து தேடி எடுக்கப்பட்டு விசாரணை கட்டத்தை எட்டியது.
விசாரித்த நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை ராமதாஸ்க்கு விதித்தது.
ஆனாலும் போலீசார் அவ்வளவு ஆர்வம் காட்டாததால் போலீஸ் நிலைய வாசல்வழியாகவே ராம்தாஸ் போய்வந்து கொண்டிருந்தார்.
அவ்வளவுதான் எல்லாம் நீர்த்து போய்விட்டது என்று நினைத்த நிலையில், தற்போது இந்த மதுரை சம்பவம் தொடர்பாக கைது செய்வதற்கான வாரன்டை மதுரை போலீசார் திருச்சி கோர்ட்டில் கொடுத்துள்ளனர். அதன்படி ராமதாஸ் வெளியில் வந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செசய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
ஒரு படம் எடுத்து அதற்காக அடிபட்டு, அவமானப்பட்டு, ஒன்பது வருடமாக மனதில் சுமந்து கொண்டிருந்த வலிக்கு இப்போதுதான் மருந்து இட்டது போலிருக்கிறது, இது வேறு எதற்காகவும் அல்ல எனது படத்திற்கு இப்போதாவது உயிர் கிடைத்தது என்பதற்காகவே என்று கூறி முடித்துக்கொண்டார் சார்லஸ்.
முக்கிய குறிப்பு: போட்டோக்களை பார்க்க இந்த  லிங்கை சொடுக்கவும் http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=705807                                            நன்றி: தினமலர்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2