லட்சிய மனிதருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்!

பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், "நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.

அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது" என்கிறார் சிவக்குமார்.

சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.

சிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.

எனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.                                                                                           நன்றி: தினமலர்

Comments

  1. இவரது லட்சியம் நிறைவேற வாழ்த்துகிறேன் அப்படியே இறைவனையும் பிராத்தனை செய்கிறேன்
    பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2