வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்
வள்ளல் எம்.ஜி.ஆருடன் இணைந்த தொப்பியும் கண்ணாடியும்
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் 1968 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட படம் "அடிமைப்பெண்" இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் "25 நாட்கள்" நடந்தது. மிகப் பிரமாண்டமான ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பல இடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.
அந்த சமயம் ராஜஸ்தான் முதலமைச்சராக இருந்த மேகன்லால் சுகாதியா, மக்கள் திலகம் அவர்களையும், ஜானகி அம்மா அவர்களையும் அழைத்து, தன் மாளிகையில் அருமையான விருந்து கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் விருந்தைச் சாப்பிட்டு விட்டு, விடை பெறும் போது, முதல்வர் சுகாதியா அவர்கள் மக்கள் திலகத்திற்குப் பரிசாக, ஒரு தொப்பியை, ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்ட மக்கள் திலகம் அவர்கள். உடனே இது என்ன பரிசு? என்று கேட்டார். அதற்கு முதல்வர் அவர்கள் பெட்டியை திறந்து பாருங்கள் என்றதும், பெட்டியைத்திறந்து பார்த்த மக்கள் திலகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குள் இருந்த தொப்பியை பார்த்தார் உடனே அந்த தொப்பியை எடுத்து புறட்டிப் புறட்டிப் பார்த்தார். அடுத்த நிமிடம் சுகாதியாவிடமே கொடுத்து, என் தலையில் நீங்களே வைத்து விடுங்கள் என்றதும், உடனே தொப்பியை தலையில் வைத்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களிடம் இப்பொழுது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றதும் மக்கள் திலகம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகிவிட்டது. முதல்வருக்கு நன்றி கூறிவிட்டு, புறப்பட்டார். காரில் போய்க் கொண்டு இருக்கும்போது ஜானகி அம்மாவிடம், என்ன ஜானு, தொப்பி எனக்கு நன்றாக உள்ளதா என்று கேட்டதும், ஜானகி அம்மையார் உங்கள் தலையில் இந்தத் தொப்பியை வைத்தவர் ஒரு நாட்டு முதல் அமைச்சர் அவரே உங்கள் அழகை புகழ்ந்துள்ளார் இதற்கு மேல் நான் வேறு சொல்ல வேண்டுமா, சரி இப்போது, நீங்கள் பாக்கெட்டில் வைத்து இருக்கும் கருப்பு கண்ணாடியை எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் இன்னும் மிக அழகாக இருப்பீர்கள் என்றதும், உடனே கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டார். அப்பொழுது ஜானகி அம்மா மிகப் பெருமையுடன் அழகுக்கு மேல் அழகு, அதோடு ஒரு அந்தஸ்து இருக்கிறதுங்க, இனிமேல், நீங்கள் எங்கே சென்றாலும், இப்படியே செல்லுங்கள் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.
சரி ஓ.கே. தேங்க்ஸ் என்றார் மக்கள் திலகம். அதே போல் அடுத்த நாள் காலையில், வேட்டி, ஜிப்பா, கண்ணாடி தொப்பியுடன் சென்றார். "அடிமைப்பெண்" படப்பிடிப்பிற்கு புதிய இடம் பார்ப்பதற்காக செல்லும் போது அங்கே டைரக்டர் கே. சங்கர், கேமராமேன் ராமமூர்த்தி புகைப்பட நிபுணர் ஸ்டில்ஸ் நாகராஜராவ், அலுவலக நிர்வாகி ஆர்.எம். வீரப்பன் ஆகிய நால்வருக்கும் ஒரே ஆச்சரியம் என்ன இப்படி திடீரென்று தொப்பி வெச்சுக்கிட்டீங்க என்று டைரக்டர் சங்கர் கேட்க, கல கல வென்று சிரித்த மக்கள் திலகம் எப்படி இருக்கு என்று கேட்க ஆஹா! மிகவும் பிரமாதமா இருக்கிறது. இதையே நீங்கள் தொடர்ந்து கடைப்படித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நால்வரும் கூறினர்.
தொப்பி அணிவதற்கு முன்பு, மக்கள் திலகம் அவர்கள். கறுப்புக் கண்ணாடி மட்டும் அணிந்து செல்லும் வழக்கம் இருந்தது. பின்பு கருப்புக் கண்ணாடியோடு, தொப்பியும் அணிந்து மக்கள் திலகம் இருப்பதைக் காண்பவர்கள். அவர் அழகு கூடியது கண்டு, சொக்கிப் போனார்கள். நம் மக்கள் திலகம் அவர்கள் தொப்பி அணிந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துப் பார்த்தார் நன்றாகவே இருந்தது ஆகவே, அவர்கள் நால்வரும் கூறியது உண்மை என்பதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் தொடர்ந்து தொப்பி அணிந்து வெளியே செல்ல, அதுவே அவருடைய கட்டாய வழக்கமாகிவிட்டது. மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் தலைவர்களும், தொப்பி ஏன் அணிய ஆரம்பித்தீர்கள் என்று அவர்கள் கேட்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு விளக்கம் சொல்வது வழக்கமாகி விட்டது தொப்பியும் பழையதாகிவிட்டது. எனவே, தனக்கு உடை தைக்கும் எம்.ஜி.நாயுடு அவர்களிடம் தொப்பி பழையதாகிவிட்டது. புதிய தொப்பி செய்ய வேண்டும் என்று கூற, திருவல்லிக்கேணி ஜாம்பஜாரில் உள்ள தொப்பி தைக்கும் பாய் ஒருவரை அழைத்து வந்தார் நாயுடு அவர்கள். "சத்யா ஸ்டுடியோ"வில் இருந்த மக்கள் திலகம் அவர்களிடம், படப்பிடிப்பில் தொப்பி செய்யும் அந்த முஸ்லீம் நண்பரை அறிமுகம் செய்து வைக்க, மக்கள் திலகம் அவர்கள் அருகில் இருந்த உதவியாளரிடம் மேக் அப் அறையில் இருக்கும் பழைய தொப்பியை எடுத்து வரச்சொல்ல, வந்ததும் மக்கள் திலகம் அவர்கள் தொப்பியை பாயிடம் காட்டி இதுபோலவே நிறம், அமைப்பு இருக்கனும் ஆட்டு முடியில் செய்ய வேண்டும். கொஞ்சம் கூட மாற்றம் இருக்கக்கூடாது இந்தத் தொப்பியை எனக்குத்தான் செய்கிறீர்கள் என்று தயவு செய்து யாருக்கும் தெரிவிக்கக்கூடாது இது மிக முக்கியம் என கூறிவிட்டு உடனே தனது உதவியாளரான சபாபதியை அழைத்து இவருக்குத் தொப்பி செய்வதற்கு முன்பணம் கொடுத்து அனுப்பு என்றார். பிறகு தொப்பி செய்ய வந்தவரைப் பார்த்து, அய்யா நான் சொன்னதெல்லாம் புரிந்ததா, தொப்பி நல்லா இருக்கனும் என்றதும். அது வரை பேசாமல் நின்று கொண்டிருந்த தொப்பி செய்பவர், கனவில் இருந்து விழித்தவர் போல் மக்கள் திலகத்திடம் பேச ஆரம்பித்தார். அய்யா நீங்கள் சொல்வது எல்லாம் எனக்குக் கேட்டது. ஆனால், புரியவில்லை நாம் பேசுவது மக்கள் திலகத்திடம் தானா, என்ற ஆச்சர்யத்தில் சிந்தனையில் மகிழ்ச்சியில் நின்றதால் எனவே ஐயா இன்னொரு முறை சொல்லிவிடுங்கள் என்றதும் மக்கள் திலகத்திற்கு சிரிப்பு, உடனே, மக்கள் திலகம் அவர்கள் அவர் அருகே சென்று, தோளில் கையைப் போட்டு முன்பு தான் சொன்னதை மறுபடியும் கூறினார்.
தொப்பிக்காரர் எதுவுமே பேசாமல் தன் வாயை மூடிக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார். மக்கள் திலகம் சொல்லி முடித்ததும், மக்கள் திலகத்தின் காலைத் தொட்டு வணங்கினார். முன் பணத்தினை வாங்க மறுத்துவிட்டார். நீங்கள் வாங்கித்தான் ஆகவேண்டும் இல்லையெனில் மக்கள் திலகம் கோபித்துக் கொள்வார் என்று கூறியதும், உதவியாளர் சபாபதியிடமிருந்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு எம்.ஜி.நாயுடுவிடமும், உதவியாளர் சபாபதியிடமும், அண்ணே என் வாழ்நாளில் அல்லாவையே பார்த்த உணர்வு இருந்தது. என் மேல் கையைப் போட்டு, மக்கள் திலகம் பேசியபோது எனக்குள் வீர உணர்வும், உற்சாகமும் ஏற்பட்டது. புரட்சித்தலைவரைச் சந்தித்த இந்த நாள் என் வாழ்வில் பொன்நாள். நான் தொப்பியோடு வருகிறேன் என்று சொல்லிச் சென்றார். அதே போல், அடுத்த ஒரு வாரத்தில், மூன்று தொப்பிகளைச் செய்து எடுத்துக் கொண்டு, சத்யா ஸ்டுடியோவிற்கு வந்தார். படப்பிடிப்பில் இருந்த மக்கள் திலகத்திடம், தொப்பி தயாராகிவிட்டது என்றதும் சரி தொப்பியை "மேக்அப்" அறைக்குச் சென்று வைத்துவிட்டு, பாய் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள். மதிய சாப்பாடு நேரத்தில் வந்து தொப்பியைப் பார்க்கிறேன் என்றார். அதன்படி மதியம் 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து லுங்கி பனியனுடன் சாப்பிட அமர்ந்தார். அவருடன் டைரக்டர், கேமராமேன் மற்றும் இரண்டு வி.ஐ.பி.க்களுடன் தொப்பி செய்து வந்த பாய் (அவர்தான் தொப்பி கடை ஓனரும் கூட) அவர்களையும் சாப்பிட அழைத்தார் மக்கள் திலகம். தொப்பிக்காரரோ, நான் மக்கள் திலகம் அவர்களுடன் சாப்பிடுவதா என்று கூறி சாப்பிட வர மறுத்தார். நானும், சபாபதியும் பாயிடம் அண்ணே நீங்க பயப்படற மாதிரி மக்கள் திலகம் அவர்கள் இல்லை அவருக்கு எல்லோரும் சமம். மேலும் அவர்தங்களைத் தனக்குச் சமமாக நினைக்கும் போது, வர மறுப்பது சரி இல்லை வாங்க போகலாம் என்றதும் வேறு வழி இல்லாமல் பாய் தயங்கியபடி சாப்பிட வந்தார். அவரைப் பார்த்ததும் மக்கள் திலகம், வாங்க வாங்க முதலில் சாப்பிடுவோம். பிறகு, தொப்பியைப் பார்க்கலாம் என்றார். பாய் வரும் வரை மக்கள் திலகமும் மற்றவர்களும் சாப்பிடாமல் காத்திருந்ததைப் பார்த்ததும் பாய் ஆச்சரியப்பட்டுப் போனார். அன்று மட்டன் பிரியாணி, சாப்பாடு, கறி குழம்பு, கறி வறுவல், கோலா உருண்டை, முட்டை இது தவிர கூட்டு, பொறியல், கீரை ரசம், தயிர், வாழை இலையில் இத்தனை வகைகளும் பரிமாறப்பட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். இதைப் பார்த்தும் அருகில் சாப்பிட்டு வெளியே வந்த பாய் எங்களிடம் இன்றைக்கு என்ன விசேஷம் என்று கேட்டார். அதற்கு நாங்கள் அண்ணே இன்றைக்கு ஒன்றும் விசேஷம் இல்லைண்ணே மக்கள் திலகத்திற்கு சாப்பாடு தினமும் இப்படித்தான் இருக்கும் என்றதும் பாய்க்கு ஒரே ஆச்சர்யம். பெருமூச்சு விட்டார் பாய் பிறகு, மக்கள் திலகம் ஒவ்வொரு தொப்பியையும் தன் தலையில் வைத்துப் பார்க்க, மூன்று தொப்பியுமே மக்கள் திலகத்திற்குப் பொருத்தமாக இருந்ததைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டார் மக்கள் திலகம், பாயிடம் தொப்பி ரொம்ப நல்லா இருக்கிறது. அதே போல் இனிமேல் எனக்குத் செய்யும் தொப்பிகள் இருக்கனும். அது இருக்கட்டும் இந்த மூன்று தொப்பிக்களுக்கும் எவ்வளவு பணம் என்று மக்கள் திலகம் கேட்க பாய் 500 ரூபாய் என்றார். மக்கள் திலகம் அவர்கள் பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை மடித்து, பாய் கையில்திணித்து, பாய்க் கையைப் பிடித்து பாய் இதைச் சந்தோஷமாய் வாங்கிட்டுப் போங்க என்று பாய்க்கு விடை கொடுத்தார். பாய் மக்கள் திலகம் தந்த பணத்தை எண்ணிப் பார்க்காமல், தன் பையில் வைத்துக் கொண்டே வெளியில் வந்தார். நன்றி!} ல்க்ஷமண் -ஸ்ருதி.காம்
நல்ல தகவல் அண்ணா.. நன்றி
ReplyDelete