கார்த்திகையின் சிறப்பு!
மாதங்களில் சிறந்தது மார்கழி
என்பார்கள்! ஆனால் கார்த்திகை மாதத்தில் இறைவனை
பூஜிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் நெற்றிக் கண்களில் இருந்து உதித்த அக்னி சுடரானது
குமரக்கடவுளாக அவதாரம் எடுத்தது. இந்த சுடர் ஆறு குழந்தைகளாக உறுப் பெற்றதும் அவற்றை
சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்களை போற்றும் விதமாக அவர்களை வானில்
நட்சத்திரமாக ஜொலிக்க செய்தார் இறைவன். அதுவே கார்த்திகை நட்சத்திரமாகும். இந்த கார்த்திகை
நட்சத்திரம் முருகப் பெருமானின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகவே கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தீபத்திருநாளாக
கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சோமவாரங்கள் திங்கட்கிழமைகள் ஈசனுக்கு உகந்த
நாட்களாகும். கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் தான் லஷ்மி அம்சமான
துளசி அவதரித்தாள் ஆகவே அன்று துளசியை பூஜிப்பவர்கள் லஷ்மி கடாட்சத்தை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்து சுக்லபட்சத்து த்வாதசி திதி கோத்வாதசி என்று அழைக்கப்படும்.
அன்று கன்றுடன் கூடிய பசுவை பூஜிக்க வேண்டும். கன்றுடன் கூடிய பசுவை குளிப்பாட்டி மஞ்சள்
குங்குமம் போன்றவைகளால் பொட்டிட்டு மாலை சூட்டி தூப தீப நைவேத்தியங்கள் செய்து கற்பூரம்
தீபம் காட்டி வழிபட வேண்டும் பின்னர் பசுவிற்கு புற்கட்டு அகத்தி கீரை சர்க்கரை பொங்கல்
பழம் போன்றவை உணவாக தர வேண்டும். இவ்வாறு செய்வதால் பித்ரு குரு சாபங்கள் நிவர்த்தி
ஆகும்.
கார்த்திகை மாதத்து தேய்பிறை அஷ்டமி காலாஷ்டமி
என்றும் பைரவாஷ்டமி என்றும் சிறப்பிக்கப்படும்.சிவனின் அம்சமான பைரவர்களில் காள பைரவருக்கு
உகந்த நாள் இந்த அஷ்டமி. அந்த தினத்தில் சிவாலயங்களில் உள்ள பைரவரை அபிஷேக ஆராதனைகள்
செய்து வழிபட்டால் எதிரிகள் விலகுவர். பைரவருக்கு உகந்த சந்தனாதி தைல அபிஷேகம், வடைமாலை
வில்வ பழம் சேமியா பாயசம் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.
கார்த்திகை மாதத்தில் வரும்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாட்களில்
ராகு கால தீபம் ஏற்றி துர்க்கை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் ஸ்ரீமன் நாராயணன் கார்த்திகை மாதத்தில் தினமும் எழுந்தருள்கிறார். அம்மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலன் தரும். இப்பூஜையால் பாவங்கள், வறுமை விலகுவதுடன்; வளமான வாழ்வும் பெறலாம். கார்த்திகை மாதத்தில் கஸ்தூரியால் அபிஷேகம் செய்து, தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் மகா விஷ்ணுவைவிட்டு, லட்சுமிதேவி நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்கிவிடுவாள். வில்வ இலையால் விஷ்ணுவையும், சிவனையும் பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. கார்த்திகை மாதத்தில் சாளக்கிராமத்தை துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டம் செல்லும் பாக்யம் கிட்டும்.
இவ்வாறு கார்த்திகை மிகவும்
சிறப்பு வாய்ந்த மாதம். இந்த மாத முதல் நாளில் தான் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்ல
மாலையிட்டு கொள்வார்கள். மண்டல பூஜைக்கு நடை திறக்கப்படும் நாளும் கார்த்திகை மாதம்
முதல் நாளே!
சிறப்புக்கள் வாய்ந்த கார்த்திகையில் கடவுள்களை தொழுது கஷ்டங்கள் விலக வேண்டுவோமாக!
தங்கள்வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
தெரியாத சில தகவல்களுக்கு நன்றி! அருமை!
ReplyDeleteஅறியாத அரிய தகவல்கள்
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
உங்கள் பதிவு மிக மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)