சுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்!


சுயம்பாகம் சீனிவாச ஐயங்கார்!


இந்த பதிவை போன வாரமே எழுதி இருக்க வேண்டும்! வேலை நெருக்கடிகளால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் சீனிவாச ஐயங்கார்  இறந்து போனார். அவருடைய இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு வந்து அதை பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் உடனடியாக எழுத முடிய வில்லை! கவிதை மாதிரி எழுதலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால் செயல்படுத்தவில்லை!
   சீனிவாச ஐயங்கார் எனது மூத்த நண்பர் என்று சொல்லி இருந்தேன். அவருக்கு வயது இறக்கும் போது 83. எனக்கு இப்போதுதான் 38 ஆகிறது. என்னவொரு ஆச்சர்யம் பாருங்கள் 38ஐ திருப்பினால் 83 ஆகிறது. நான் என் தாய் வயிற்றில் இருக்கும் போது  சீமந்தம் விருந்துக்கு சமைக்க என் தாத்தாவின் சிபாரிசின் பேரில் வந்தவர் இந்த ஐயங்கார்.
   சீமந்தம் முடிந்து நான் பிறந்த பத்து நாட்களுக்குள் எங்கள் வீட்டில் குடிவந்துவிட்டார். எங்களை பார்க்க என் அப்பா ஆசானபூதூர் வந்த சமயத்தில் இவர் வந்து எங்கள் வீட்டு திண்ணையில் குடியேறிவிட்டார். கூடவே இரு பசு மாடுகள். என் அப்பா திரும்பி வந்தால் ஐயங்கார் சாவகாசமாக திண்ணையிலேயே சமைத்துக் கொண்டு இருந்தாராம்.
   எங்கள் வீடு ஒன்றும் மச்சு வீடு அல்ல சாதாரண ஓட்டு வீடு பத்துக்கு பத்தில் இரு ரூம்கள் ஒரு ஹால் பின்பக்கம் சமையலறை. இதில் ஒரு ரூமில் ஐயங்கார் குடிவந்தார். அப்புறம் ஒரு வருடம் வரை என்னை தூக்கி வளர்த்திருக்கிறார். சிறுவயதில் வேடிக்கை காட்டி இருக்கிறார். என் அம்மா சொல்லியிருக்கிறார். அப்புறம் கோபித்து கொண்டு ஆரணி சென்றுவிட்டார்.
  பின்னர் ஒரு நாலைந்து வருடம் கழித்து திரும்பவும் எங்கள் வீட்டிற்கே குடி வந்தார். மீண்டும் அதே ரூம். ஒரு ஆறுமாதம் குடியிருந்திருப்பார். அன்று கார்த்திகை தீபம். அவரதுமனைவி அவரது ரூமை தண்ணீர் தெளித்து கழுவி கோலமிட்டு கொண்டிருந்தார். என் தந்தை என்னம்மா! இந்த ஹாலையும் கொஞ்சம் கழுவி விடக்கூடாதா என்று கேட்டாராம்.
  என் மனைவியை கேள்வி கேட்க நீ யார்? என்று கோபித்துக் கொண்டு எங்கள் ஊரில் ஒரு சத்திரம் இருக்கும் அங்கே குடிபெயர்ந்து விட்டார். அப்புறம் சிலவருடங்கள் பேச்சு வார்த்தை இல்லை. அப்புறம் எங்கள் வீட்டில் திருடு போனது. அப்போது என் அப்பாவே கூப்பிட்டு பேசினார். திரும்பவும் பேச ஆரம்பித்தோம்.
   அவர் குடியிருந்த சத்திரம் கோவிலுக்கு சொந்தமானது.  மிகவும் விசாலமாக இருக்கும். ஒரு நிலவறையும் அதில் உண்டு. ராஜாக்கள் காலத்து சத்திரம். மிகவும் பாழடைந்த அதில் இவர் குடிபுகவும் சீர் பட்டு அழகாக வைத்திருந்தார். என்ன ஒன்று மின் வசதிதான் கிடையாது. நாங்கள் விடுமுறை நாட்களில் அங்கு சென்று விளையாடுவோம். பின்னால் வாழை செடி வைத்திருப்பார். அதன் மட்டையில் கிலுகிலுப்பை மாதிரி செய்து தருவார். அந்த சத்திரத்தின் மாடிகளில் எனது தங்கைகளுடன் ஓடி விளையாடிய காட்சிகள் இன்னும் அகலவில்லை.
    அருமையாக சமைக்க கூடிய அவர் பாதுஷா, மைசூர் பாகு, கேக் போன்றவை செய்து தருவார். அப்போது நாங்கள் மிகவும் வறுமையான நிலையில் இருந்தோம். இவர் ஏதாவது சமையலுக்கு சென்று வந்தால் அங்கிருந்து திண்பண்டங்கள் கொண்டு வந்து கொடுப்பார்.  சமையலுக்கு சென்று வந்தகதைகளை  சுவையாக சொல்லுவார். அவருடைய இரண்டு பசுமாடுகளுக்கு புல் அறுக்க வயல் வெளிகளில் அவருடன் சுற்றுவோம். ஒரு நாய் ஒன்று வளர்த்தார். அது அவருடனேயே வரும்.
   மீண்டும் ஏதோ தகறாறு. அவருடனான பேச்சு வார்த்தை நின்று போனது. இதற்கிடையில் அவர் சத்திரத்திலிருந்து பக்கத்து ஊரான எர்ணவாக்கம் சென்றார்.  சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பேச ஆரம்பித்தோம். அங்கு ஒரு குடிசையில் வசித்து வந்தார்.
   அங்கு சென்ற பிறகும் அவ்வப்போது பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வார். திரும்பவும் பேசுவார். இப்படியே சென்று கொண்டிருந்தது எங்களுடனான அவரது நட்பு. இறுதிக் காலத்தில் அவர் சமையலுக்கு செல்வதை நிறுத்தி விட்டார். அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று அவரை காப்பாற்றி வந்தார்.
   இறுதி காலத்தில் அவருக்கு சந்தேக நோயும் பீடித்துக் கொண்டது அவரை எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட ஆரம்பித்தார். சுற்றங்களும் சொந்தங்களும் விலகி போய் விட்டன. சொந்த தம்பி கூட வருவது கிடையாது. இறுதியில் பத்து நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி நோய் வாய்ப்பட்டு இறந்து போனார்.
   எந்த ஊரை அவர் பகைத்து கொண்டாரோ அந்த ஊராரே அவரது இறுதியாத்திரையை சிறப்பாக செய்து முடித்தனர். அவரது ஒண்று விட்ட தம்பி ஒருவரும் அவரது மகன்களும் மட்டும் அவர் வழியில் கலந்து கொண்ட உறவுகள். மற்றோர் எல்லாம் கிராமத்தினர். பழகிய நட்பின் காரணமாக நானும் என் தாய் தந்தை என் தங்கைகள் கலந்து கொண்டு அவரை வழி அனுப்பி வைத்தோம்.
  இன்னும் விரிவாக எழுதலாம்! இப்போது இது போதும் என்று நினைக்கிறேன். இந்த பதிவின் மூலம் சொல்ல வருவது என்னவெனில் எவ்வளவுதான் நல்லது செய்திருந்தாலும் சந்தேக குணமும்  கோபமும் இருந்தால் அவன் படுகுழியில் விழுந்து விடுவான் என்பதை தான் ஐயங்கார் வரலாறு உணர்த்துகிறது. இறந்தவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாது என்ற நாகரீகத்தினால் அவரது குறைகளை இதில் பட்டியல் இடவில்லை! செய்த் நல்லதை பற்றியே கூறி இருக்கிறேன். அந்த நல்ல செயல்கள் தான் அவரை இறுதி யாத்திரைக்கு உதவி செய்தன.
  ஆகவே சந்தேகத்தையும் கோபத்தையும் தவிர்ப்போம்!
மீண்டும் ஒருமுறை நினைவுகளுடன் சந்திப்போம்! நன்றி!


Comments

  1. நல்ல அறிவுரையுடன் முடித்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. இறந்துதான் போய்விட்டாரே அவரின் குறைகள் எமக்கெதற்கு..
    பேசுவதாக இருந்தால் அவரின் நலவுகளையே பேசுங்கள் அதுவே தர்மம் :)

    ReplyDelete
  3. இறுதியில் சொல்லிச் சென்ற கருத்து அனைவருக்குமானது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2