எனக்கு சப்பாத்தி கூட சுடத் தெரியாது... ‘என்கவுண்டர்’ வெள்ளைத்துரையின் 'எக்ஸ்க்ளூசிவ்' ஜாலி பேட்டி!


டி.எஸ்.பி வெள்ளைத்துரை.. இந்த பெயரைக் கேட்டாலே ரவுடிகளுக்கு கை, கால் உதறல் எடுக்கும். தலை கிறுகிறுக்கும்.
வீரப்பன், தாதா வீரமணி உள்பட தான் போகும் இடமெல்லாம் அராஜகம் செய்யும் ஆசாமிகளின் கொட்டத்தை அடக்கிவிட்டு அமைதியாய் அடுத்த வேலையை செய்யத் தொடங்கிவிடுவார் இந்த மனிதர்.
எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபு, பாரதி. இருவரையும் சில தினங்களுக்கு முன் என்கவுண்டர் செய்த காரணத்தால் மீண்டும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறார் வெள்ளைத்துரை.
ஊடகங்களின் விவாத மேடைகளில் இவருடைய என்கவுண்டர் பற்றிதான் பேச்சாக இருக்கிறது. வார இதழ்களில் இவரின் பேட்டி சீரியசாக இருக்கவே ஒரு ஜாலி பேட்டிக்காக அணுகினோம். மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டு மதிய நேரத்தில் கூலான பேட்டி கொடுத்தார் வெள்ளைத்துரை.
கல்லூரியில் படிக்கும் போது என்னவாக நினைத்தீர்களா?
நான் மிலிட்டரி மேன் ஆகவேண்டும் என்று நினைத்தேன். என்.சி.சியில் சி சர்டிபிகேட் வைத்திருக்கிறேன். தேர்வு எல்லாம் கூட எழுதினேன். ஆனால் தேர்வாகவில்லை. அதனால் காலேஜ் லெக்சரர் ஆகிவிட்டேன். அப்புறம் எப்படியோ போலீஸ் ஆகிவிட்டேன்.
தீபாவளிக்கு பொம்மை துப்பாக்கி சுட்டதுண்டா?
கண்டிப்பாக இல்லை. எனக்கு சின்ன வயசுல இருந்தே பட்டாசு வெடிக்க பிடிக்காது. அதனால துப்பாக்கியில் வெடிச்சதில்லை.
உங்க மனைவியோட சமையலில் என்ன பிடிக்கும்?
என் மனைவியின் சமையலில் எல்லாமே பிடிக்கும். சைவத்தில் எல்லாமே சாப்பிடுவேன். அசைவத்தில் சிக்கன் சுத்தமாக பிடிக்காது. கடந்த நாலு வருஷமா அசைவத்தில் மீன், முட்டை மட்டுமே சாப்பிடுகிறேன்.
வீட்டில் தோசை, சப்பாத்தியாவது சுட்டதுண்டா?
அதுக்கெல்லாம் நேரம் ஏது?..... சிரிக்கிறார்... காபி அரைகுறையாக போடுவேன். பெரும்பாலான வருடங்களில் தனியாகவே இருக்கிறேன். மெஸ் சாப்பாடுதான். நான் சமைப்பதில்லை. அது எனக்குத் தெரியாது.
சினிமாவில் என்கவுண்டர் சீன் பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள்?
அந்த மாதிரி சீன்களை நான் ரசிப்பேன். காக்க காக்க படத்தை மூன்று முறை பார்த்தேன். அதேபோல் சாமி, வேட்டையாடு விளையாடு போன்ற படங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் குற்றவாளிகளையும், ரவுடிகளையும் பெரிது படுத்தி காட்டவேண்டிய அவசியமில்லை. அரசு ஊழியர்கள் கடமையை செய்கிறார்கள் என்பதோடு நிறுத்திவிடலாம். குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று காட்டுவது அநாவசியம்.
எந்த நடிகர் போலீஸ் உடைக்கு பொருத்தமானவர்?
சூர்யாவுக்கு காக்கி உடை சூப்பராக இருக்கும். அப்புறம் விக்ரம் நன்றாக பொருந்தியிருப்பார்.
வடிவேல் மாதிரி சிரிப்பு போலீஸ் பார்த்தால் என்ன நினைப்பீர்கள்?
அது மாதிரி சிலர் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறார்கள். அதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்கள். இதனால்தான் போலீஸ் மீதான மரியாதை குறைந்து போகிறது. இனிமேலாவது படங்களில் இந்த மாதிரி சீன் வைப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
காதலித்த அனுபவம் உண்டா?
எனக்கு காதல் அனுபவம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்த பெண்ணைத்தான் மனம் முடித்தேன். அவருடைய சொந்த ஊர் சீவலப்பேரி. பிரபலமான சீவலப்பேரி பாண்டியின் உறவினர்தான் என் மனைவி ராணி ரஞ்சிதம். அவர் எம்.ஏ.எம்பில் படித்திருக்கிறார்.
நீங்கள் எப்பவுமே சீரியசானவர் தானா? இல்லை சிரிப்பீர்களா?
நான் ஜாலியான ஆள். எதுக்குமே சீரியசாக மாட்டேன்.
தினம் தினம் துப்பாக்கி எடுக்கும் போது என்ன நினைப்பீர்கள்?
துப்பாக்கி என்பது 100 பேருக்குச் சமம். கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி போலீஸுக்கு துப்பாக்கி அவசியம். அது இல்லாத காரணத்தால்தான் ஆல்வின் சுதன் அநியாயமாக செத்துப் போனான்.
உங்கள் மீதான விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
போலீஸ் யாரையும் திட்டமிட்டு சுடுவதில்லை. தற்காப்புக்காகத்தான் சுடுகிறோம். தெருவில் சும்மா போகும் நாயை யாராவது அடித்தால் அது கடிக்க வருவதில்லையா? அது மாதிரிதான் எங்களை வெட்ட வருபவர்களை நாங்கள் சுடுகிறோம். உயிருக்கோ, உடமைக்கோ ஆபத்து வரும் பட்சத்தில் சுடுவது தவறொன்றும் இல்லை. நாங்கள் செய்வது "என்கவுண்டர்'' அல்ல ''கவுண்டர்தான்". இன்றைக்கு மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள், ஆல்வின் சுதன் வெட்டுப்பட்டு இறந்த போது எங்கே போனார்கள்?. யாரையும் குறை சொல்வது ஈசி. ஆனால் தீர்வு சொல்ல முடியுமா?
10 கட்டளைகள் போல குற்றவாளிகள் திருந்துவதற்கு பத்து கட்டளைகளை மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் கொடுக்கட்டும். அப்புறம் குற்றங்கள் நடக்காது.... போலீசுக்கும் வேலையே இருக்காது. நாங்கள் மனிதர்களை கொல்வதில்லை. மிருகங்களைத்தான் வேட்டையாடுகிறோம். போலீஸ் தன் கடமையை செய்திருக்கிறது. மனிதர்களை துன்புறுத்தும் மிருகங்கள் இருக்கும்வரை இதுபோன்ற வேட்டை தொடரும் என்றார் அதிரடியாக.
நன்றி தட்ஸ் தமிழ்

Comments

 1. அருமையான பேட்டி
  பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. இப்படியும் சிலர் தேவைப் படுகிறார்கள்.

  ReplyDelete
 3. துப்பாக்கி என்பது 100 பேருக்குச் சமம். கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி போலீஸுக்கு துப்பாக்கி அவசியம்.//

  சத்தியமான உண்மைதான் இல்லையா...

  ReplyDelete
 4. எல்லா மனிதருக்குள்ளும் ஒரு மறுபக்கம் உண்டு என்பதை பேட்டியின் பல பதில்கள் நிரூபித்தன.

  ReplyDelete
 5. //10 கட்டளைகள் போல குற்றவாளிகள் திருந்துவதற்கு பத்து கட்டளைகளை மனித உரிமைகள் பற்றி பேசுபவர்கள் கொடுக்கட்டும். அப்புறம் குற்றங்கள் நடக்காது// - நல்ல விஷயம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!