நானும் ரஜினிகாந்த்தும்!


நானும் ரஜினிகாந்த்தும்!

மக்களே இப்படி எல்லாம் தலைப்பு வைச்சாத்தான் மக்களே படம் ஓடுது! அதான் இந்த தலைப்பு. மற்றபடி சூப்பர்ஸ்டாருக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்னு கேக்கறவங்க பதிவை படிச்சிட்டு  என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிக்கோங்க!
    அது ஒரு கனாக்காலம்! 1980- 85களில் என்று நினைக்கிறேன்! அப்போதுதான் எனக்கும் ரஜினிக்குமான நட்பு உதயமானது. இந்த நட்பு இருக்கிறதே இது ஆண்-பெண் உயர்ந்தவன் –தாழ்ந்தவன், பெரியவன் - சின்னவன் என்ற பேதம் எல்லாம் இல்லாமல் அப்படியே உருவாவது! அப்படித்தான் எனக்கும் ரஜினிக்குமான நட்பும்.
   இருவரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றோ, பெரியவன் சின்னவன் என்றோ பேதம் பார்க்கவில்லை! அந்த நட்பில் ஓர் ஆழம் இருந்தது. அப்போது நான் ஆசானபூதூரில் இருந்தேன். அங்கே என் பக்கத்துவீட்டில் வசித்து வந்தவன் தான் ரஜினி!  அய்! ஏமாந்தீங்களா! ஏமாந்தீங்களா?
         ஆமாம்! என்னுடைய பக்கத்து வீட்டில் வசித்து வந்தான் ரஜினி! என்னைவிட குறைந்த பட்சம் ஒரு ஆறேழு வயது சிறியவனாக இருப்பான். அதான் சொன்னேனே பெரியவன் சின்னவன் என்று நட்பு பேதம் பார்ப்பது இல்லை என்று அப்படித்தான் இந்த நட்பும் உருவானது. அங்கே சின்ன வயதில் நாங்கள் கோயில் கட்டி விளையாடிய போதும் கண்ணாமூச்சி, திருடன் போலீஸ், கிரிக்கெட் என எல்லா விளையாட்டிலும் ஒன்றினைந்து இருந்தோம். ஆனால் அவன் பலமுறை கற்றுத்தந்தும் என்னால் கோலி விளையாட மட்டும் கற்றுக் கொள்ள முடியவில்லை!
    எங்கள் வீடு சிவன் கோயில் அருகில் இருந்தது. அந்த மதில் ஓரங்களில் அரளிச் செடிகளும் சொர்ணபட்டி எனும் மஞ்சள் பூச்செடிகளும் இருக்கும். அந்த புஷ்பங்களை பறித்து பூஜைக்கு கொடுப்போம். அங்கிருந்த சரக்கொன்றை மர இலைகளை பறித்து அதில் லெட்டர் எழுதி போஸ்ட் செய்வதாக விளையாடுவோம். டிசம்பர் பூ மாதிரி ஒரு செடியில் காய்க்கும் காய் பேனாமுள் போல கூர்மையாக இருக்கும் அந்த காயை தண்ணீரில் போட்டால் பட்டாசு மாதிரி டப் என்று வெடிக்கும். அந்த காயை பறித்து சரக்கொன்றை இலையில் எழுதுவோம்.
   அதை எடுத்து சென்று ஒரு பெட்டியில் போடுவோம். தபால் காரர் என்று ஒருவர் தபால்களை பிரித்து தருவார். அதே கோயிலை ஓட்டியிருந்த குளத்தில் அல்லிப்பூக்கள் பூக்கும். நீச்சல் தெரிந்தவர்கள் அதில் இறங்கி அந்த பூக்களை பறித்து அதை மாலையாக்கி சுவாமிக்கு கொடுப்பார்கள்.
  இப்படி எங்கள் விளையாட்டுக்களில் கலந்து கொண்டவன் தான் ரஜினிகாந்த். உண்மையான பெயர் வில்வமணி. ஆனால் எல்லோரும் அவனை ரஜினி என்றே அழைத்தனர். அந்த பெயரே நிலைத்து விட்டது, கொஞ்சம் சுறுசுறுப்பாய் வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் பேசுவான். தைரிய சாலியாக இருந்தான்.
  ஆனால் ரஜினி ஸ்டைல் எல்லாம் பண்ண மாட்டான். ஆனால் எப்படியோ அவனுக்கு ரஜினி என்றபெயர் வந்து விட்டது. அதுவே அப்போது அவனை பாப்புலர் ஆக்கிவிட்டது. ஒரு சுபயோக தினத்தில் எனக்கும் அவனுக்கும் ஒரு பிரிவு வந்துவிட்டது. ஆம் நான் ஆசான பூதூரை விட்டு இடம் பெயர்ந்து விட்டேன். அப்புறம் நான் செல்லும் சமயங்களில் அவனை பார்க்க முடியாது. பள்ளிக்கு அங்கு இங்கு என்று சென்றுவிடுவான்.
பல வருடம் கழித்து ஒரு நாள் பார்த்த போது ஆளே மாறிப் போய் இருந்தான். அவனது தந்தை காலமாகிவிட்டிருந்தார். வாலிப பருவத்தில்  ஏதோ மன அழுத்தத்திற்கு ஆளாகி எல்லோரும் அவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.
   அதுவே அவனை மேலும் பாதித்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேச  மருத்துவமனையில் சேர்த்து  இப்போது குணமடைந்து விட்டதாக கேள்விப் பட்டேன். அவனுக்கு இதனால் திருமணம் தடை பட்டு வருகிறது என்று அவனது அம்மா என்னிடம் சொன்னபோது வருத்தப்படத்தான் என்னால் முடிந்தது.
   சின்ன வயது நண்பன்! என்னை விட இளையவன்! அவன் சில தவறுகளை செய்திருந்தாலும் அவனது வாழ்க்கை இப்படி அமைந்து விட்டதே என்று வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
  இது இப்படி இருக்க நான் அறிந்த இன்னொரு ரஜினி இவர்! ஐயொ! உதைக்க வராதீங்க! இவரும் சூப்பர் ஸ்டார் அல்ல! எங்கள் ஊரில் ஆடு மேய்ப்பவர் இவர். சொந்தமாக விவசாயமும் உண்டு. ஆடுகளை வியாபாரமும் செய்வார். அவரை எல்லோரும் ரஜினி என்று அழைப்பார்கள்! ரஜினிக்கும் அவருக்கும் துளிக் கூட சம்பந்தமே கிடையாது ஆனால் இவரையும் ரஜினி என்று அழைப்பார்கள்.
   இவருக்கு திருமணம் நிச்சயம் ஆனது. மாப்பிள்ளைக்கு ரிஸ்ட் வாட்ச் கொடுத்திருக்கிறார்கள். நம்மவருக்கு மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்கிய அனுபவம் கிடையாது. ரிஸ்ட் வாட்சில் டைம் பார்க்கவும் தெரியாது. அதற்கு சாவி கொடுக்கவும் தெரியாது.
    கல்யாணம் முடிந்த மறுநாள் வாட்ச் நின்று போய் விட்டிருக்கிறது. மாமியார் ஊட்டுல கொடுத்த கடிகாரம் ஓடலை! ஓடலை என்று புலம்பிக் கொண்டு இருந்திருக்கிறார். ஏம்பா சாவி கொடுத்தா ஓடும் என்று யாரோ சொல்ல ஒரு வாட்ச் சர்வீஸ் செண்டருக்கு சென்று வாட்ச்சை கொடுத்து சரி செய்ய சொல்லியிருக்கார்.
  ரிப்பேர்  செய்பவர் பார்த்துவிட்டு நல்லா புதுசாத்தானே இருக்கு என்ன ரிப்பேர்?
  வாட்ச் ஓடலை! சாவி கொடுத்தாத்தான் ஓடுமாம்!
 சாவி கொடுக்கவேண்டியதுதானே!
வாட்ச்சை வாங்கி கொடுத்தவங்க சாவியை கொடுக்கவே இல்லையே! நீங்கதான் ஒரு சாவி போட்டு தரணும் அதுக்குத்தான் கொண்டாந்திருக்கேன் என்றிறுக்கிறார் நம்ம ரஜினி!
  வாட்ச் ரிப்பேர் செய்பவர் மேலும் கீழும் பார்த்துவிட்டு யோவ்! விளையாடுறியா? என்று கேட்க
நான் ஏங்க விளையாடுறேன்! எம்புட்டு காசு ஆனாலும் பரவாயில்லை! ஒரு சாவி ஒண்ணு போட்டு தாங்க என்றார் ரஜினி.
   யோவ்! நீ முன்ன பின்ன வாட்ச்சை பார்க்காத பட்டிக்காடா? யோவ்! இங்க இருக்கு பாரு சாவி! இதை இப்படி திருகினா வாட்ச் ஓடும். எங்க ஓடுது இங்கேயே நிக்குதேன்னு கேட்டுடாதே என்று விவரம் சொல்லி அனுப்பி இருக்கிறார் வாட்ச் கடைக்காரர்.
  அட யாராவது சாவியை பூட்டிலேயே வைப்பாங்களா? அதை கழற்றி கொடுத்திருங்க என்றாராம் ரஜினி!
கடைக்காரர் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார்!
                 இது எப்படி இருக்கு?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2